சின்னவர் காலில் விழுந்து ஆசி வாங்கிய பெரியவர்!

சின்னவர் காலில் விழுந்து ஆசி வாங்கிய பெரியவர்!

Share it if you like it

உதயநிதியின் காலில் விழுந்து தஞ்சை மேயர் ஆசி வாங்கிய சம்பவம் பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

மேயர் பதவி என்பது இன்று நேற்றல்ல, ஆங்கிலேயர் காலத்திருந்து இருந்து வருகிறது. இந்தியாவுக்கு எப்படி ஜனாதிபதி முதல் குடிமகனோ, கவர்னர் எப்படி மாநிலத்தின் முதல் குடிமகனோ, அதேபோல, மாநகராட்சி மேயர் என்பவர் அந்த மாநகரத்தின் முதல் குடிமகனாக கருதப்படுபவர். அதோடு, நீதிபதிகள், கலெக்டர்களுக்கு எப்படி டவாலி இருக்கிறார்களோ, அதேபோல, மேயருக்கும் டவாலி உண்டு. ஆகவே, அமைச்சர்களாக இருந்தாலும் சரி, எம்.எல்.ஏ.க்களாக இருந்தாலும் சரி, மேயருக்கு கீழேதான். அப்படிப்பட்ட மேயர் பதவியின் புனித தன்மை தொடர்ந்து விடியல் ஆட்சியில் சிக்கி சீரழிந்து வருகிறது என்பதே கசப்பான உண்மை.

அந்தவகையில், வேலூர் மாநகராட்சியின் முதல் மேயராக சுஜாதா ஆனந்தகுமார் பதவி ஏற்ற சமயத்தில் நீர்வளத்துறை அமைச்சரும் தனது தந்தையுமான துரைமுருகன் காலில் விழுந்து ஆசி வாங்குமாறு வேலுர் எம்பி கதிர் ஆனந்த் சிக்னல் கொடுத்த சம்பவத்தை யாரும் மறந்திருக்க முடியாது.

இதையடுத்து, தாம்பரம் மாநகராட்சியின் முதல் மேயராக பதவியேற்ற வசந்தகுமாரியை அமைச்சர் அன்பரசன் காலில் விழுந்து ஆசி வாங்குமாறு எம்.எல்.ஏ ஒருவர் வற்புறுத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. ஆதிதிராவிடர் சமூகத்தைச் சேர்ந்த மேயரை வற்புறுத்தி ஆசி வாங்க வைத்த செயல் வெட்ககேடானது என நெட்டிசன்கள் அந்நாட்களில் தங்களது கடும் கண்டனங்களை பதிவு செய்து இருந்தனர்.

இதனை தொடர்ந்து, செருப்பைத் தலையில் தூக்கிக் கொண்டு இருந்த சமுதாயத்தை மேயராக்கி வணக்கத்திற்குரிய மாண்புமிகு மேயர் அவர்களே என அழைக்க வைத்து திராவிட புரட்சியை செய்தவர் ஸ்டாலின் என்று திண்டுக்கல் ஐ.லியோனி சென்னை மேயர் பிரியாவை இழிவுப்படுத்தி பேசியிருந்தார்.

இப்படிப்பட்ட சூழலில், தி.மு.க இளைஞரணி செயலாளரும் திருவல்லிகேணி – சேப்பாக்க எம்.எல்.ஏ.வுமான உதயநிதி ஸ்டாலின் தஞ்சையில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு இருக்கிறார். அந்தவகையில், கட்சி தொண்டர்கள் மற்றும் கழக முன்னோடிகள் உதயநிதியை வரவேற்று இருக்கின்றனர். அப்பொழுது, தஞ்சை மேயர் தனது அங்கியுடன் சென்று உதயநிதியின் காலில் விழுந்து ஆசி வாங்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. சமூக நீதி. சுயமரியாதை, பெண் விடுதலை, என்று ஊர் முழுக்க பிரச்சாரம் மேற்கொள்வது எந்த கட்சி என்பதை அறிவார்ந்த தமிழக மக்கள் நன்கு அறிவர் என்பது குறிப்பிடத்தக்கது.


Share it if you like it