எப்போதும் இது ‘பெரியார் மண்’ என்று கூறும் முதலமைச்சர் ஸ்டாலின், தேர்தல் நேரம் என்பதால் ‘சமூக நல்லிணக்க மண்’ என்று கூறியிருக்கிறார். அதற்காக நன்றி!. தேர்தலுக்கு முன்பு தங்களது உயிர் மூச்சு கொள்கையாக, நாத்திகம், இந்து மத வெறுப்பை முன்வைக்கும் திமுக, தேர்தல் வந்து விட்டால் அவற்றை மறந்தும் கூட பேச மாட்டார்கள் என்று பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் குறிப்பிட்டுள்ளார். இதுதொடர்பாக வானதி சீனிவாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டிருப்பதாவது :-
பெரும்பான்மையை, சிறுபான்மையுடன் மோதவிடும் திமுகவுக்கு சமூக நல்லிணக்கம் பற்றி பேச எந்த உரிமையும் இல்லை.
1974-ல் கச்சத்தீவு தாரை வார்க்கப்பட்டதை எதிர்த்து நாடாளுமன்றத்திலும், நீதிமன்றத்திலும் போராடியது பாஜக மட்டுமே!
திமுக தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின், ‘தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்’ ஆங்கில நாளிதழுக்கு அளித்த பேட்டியில், “”வேற்றுமையில் ஒற்றுமை’ என்ற இந்தியாவின் அடித்தளத்தை பாஜக சிதைக்கப் பார்க்கிறது. அரசியல் லாபங்களுக்காக நாட்டின் அமைதியைக் குலைக்கப் பார்க்கிறது. சமூக நல்லிணக்க மண்ணான தமிழ்நாட்டில், மதவெறி அரசியல் எனும் நெருப்பு மூட்டிக் குளிர்காய நினைக்கும் பாஜகவுக்கு எதிரான மனநிலையே எப்போதும் உள்ளது” என்று கூறியுள்ளார்.
தமிழகம் மட்டுமல்ல இந்தியா முழுவதுமே சமூக நல்லிணக்க மண்தான். இது திமுக சொல்லித் தெரிய வேண்டியதில்லை. எப்போதும் இது ‘பெரியார் மண்’ என்று கூறும் முதலமைச்சர் ஸ்டாலின், தேர்தல் நேரம் என்பதால் ‘சமூக நல்லிணக்க மண்’ என்று கூறியிருக்கிறார். அதற்காக நன்றி!. தேர்தலுக்கு முன்பு தங்களது உயிர் மூச்சு கொள்கையாக, நாத்திகம், இந்து மத வெறுப்பை முன்வைக்கும் திமுக, தேர்தல் வந்து விட்டால் அவற்றை மறந்தும் கூட பேச மாட்டார்கள். தேர்தலுக்கு முன்பு எந்த தலைவரைப் பற்றி மூச்சுக்கு மூச்சு பேசினார்களே, அந்த தலைவரின் பெயரைக்கூட தேர்தல் காலத்தில் உச்சரிக்க மாட்டார்கள்.
திமுகவின் ‘சமூக நல்லிணக்கம்’, ‘மதச்சார்பின்மை’ என்பது இந்து மத வெறுப்பு மட்டுமே.
அதனால்தான், இந்து மத பண்டிகைகளுக்கு வாழ்த்து சொல்லக் கூட அவர்களுக்கு மனம்
வருவதில்லை. சென்னையில் போட்டியிடும் மூன்று திமுக வேட்பாளர்களை அழைத்துக்
கொண்டு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, கிறிஸ்தவ மத தலைவரான
மயிலாப்பூர் ஆர்ச் பிஷப் திரு. ஜார்ஜ் ஆண்டனி சாமி அவர்களை சந்தித்திருக்கிறார்.
முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவின் பேரில், ஆர்ச் பிஷப்பை சந்தித்ததாக சேகர்பாபு தனது
சமூக ஊடக பக்கங்களில் விளக்கம் அளித்திருக்கிறார்.
அமைச்சரும், திமுக வேட்பாளர்களும் கிறிஸ்துவ மத தலைவரை சந்தித்ததை நான்
வரவேற்கிறேன். இது நல்ல ஆரோக்கியமான விஷயம்தான். ஆனால், தமிழ்நாடு சமூக
நல்லிணக்க மண் என்று கூறும் முதலமைச்சர் ஸ்டாலின், இந்து மதத் தலைவர் யாரையாவது சந்திக்குமாறு தனது வேட்பாளர்களுக்கு உத்தரவிட்டுள்ளாரா? மற்ற மத தலைவர்களை நேரில் சென்று சந்திக்கும் திமுகவினர், திமுகவுக்கு ஆதரவளிக்கும் இந்து மத தலைவர்களைக் கூட தங்கள் இடத்திற்கு அல்லது பொது இடத்திற்கு வரவழைத்துதான் சந்திக்கிறார்கள். திமுகவின் மதச்சார்பின்மை, சமூக நல்லிணக்கம் என்பது இதுதான்.
பாஜக ஆட்சிக்கு வந்தால் ஆபத்து என்று கூறி சிறுபான்மையினரை அச்சமூட்டி அரசியல் ஆதாயம் அடைந்து வரும் திமுகவுக்கு சமூக நல்லிணக்கம் பற்றி பேச எந்த உரிமையும் இல்லை. பெரும்பான்மையுடன், சிறுபான்மையை மோத விட்டு அந்த நெருப்பில் குளிர் காய நினைக்கும் திமுகவுக்கு இந்த தேர்தலில் தமிழ்நாட்டு மக்கள் சரியான பாடம் புகட்டுவார்கள். “தமிழ்நாட்டு மீனவர்களைப் பாதுகாக்க கடந்த 10 ஆண்டுகளில் எந்த ஒரு துரும்பையும் கிள்ளிப் போடாத பாஜக அரசு, தன் குற்றத்தை மறைக்க, கச்சத்தீவு விவகாரத்தைக் கிளறிப் பார்க்கிறது.
கச்சத் தீவை இலங்கைக்குத் தாரை வார்க்கக்கூடாது என்பதில் தி.மு.க. உறுதியாக இருந்தது. அப்போது பாஜக என்று ஒரு கட்சியே கிடையாது” என்றும் ‘தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்’ பேட்டியில் ஸ்டாலின் கூறியிருக்கிறார்.
முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்கப் பார்ப்பது என்பது இதுதான்.
2004 முதல் 2014 வரை மத்தியில் திமுக அங்கம் வகித்த, காங்கிரஸ் கூட்டணி அரசு இருந்தபோது, இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதும், சுட்டுக் கொள்ளப்படுவதும் வாரந்திர நிகழ்வாக இருந்தன. தமிழக மீனவர்கள் பல மாதங்கள், ஏன் ஆண்டுக்கணக்கில் கூட இலங்கை சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர்.
திமுக அங்கம் வகித்த காங்கிரஸ் ஆட்சியின் போது தான், இலங்கையில் தமிழக மீனவர்கள்
ஐந்து பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது அவர்களை தனிப்பட்ட முறையில் முயற்சி
எடுத்து மீட்டுக் கொண்டு வந்தவர் பிரதமர் நரேந்திர மோடி. கடந்த 10 ஆண்டுகால பாஜக
ஆட்சியில் மீனவர்கள் கைது செய்யப்படும் ஒரு சில சம்பவங்கள் மட்டுமே நடந்திருக்கின்றன.
கைது செய்யப்பட்ட மீனவர்கள் உடனடியாக விடுதலை செய்யப்பட்டனர். இவற்றையெல்லாம்
தமிழக மீனவர்களும், தமிழக மக்களும் நன்கு அறிவார்கள்.