பா.ஜ.க.வால்தான் கனிமொழிக்கு தி.மு.க.வில் துணைப் பொதுச் செயலாளர் பதவி கிடைத்ததாக மூத்த பத்திரிகையாளர் மணி கூறியிருப்பது அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
தி.மு.க.வில் நீண்ட காலமாக மாநில மகளிர் அணித் தலைவியாக இருந்து வருபவர் கனிமொழி. இதன் பிறகு, கட்சியில் பெரிய அளவில் பதவிகள் எதுவும் வழங்கப்படாத நிலையில், அவர் அதிருப்தியில் இருந்து வருவதாக தகவல்கள் வெளியாகின. மேலும், தி.மு.க.வில் இவருக்கென ஒரு தனி வட்டாரமே உண்டு. 2ஜி வழக்கில் சிக்கி, திகார் சிறையில் இருந்துவிட்டு வெளியே வந்த இவருக்கு, கட்சியில் பெரிய பதவி கொடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், கட்சியில் பதவி எதுவும் வழங்கப்படவில்லை. 2019 நாடாளுமன்றத் தேர்தலில் தூத்துக்குடி நாடாளுமன்றத் தொகுதி ஒதுக்கப்பட்டது. இதில் வெற்றிபெற்று எம்.பி.யாக இருக்கும் இவருக்கு, தற்போது கட்சியில் துணைச் செயலாளர் பதவி வழங்கப்பட்டிருக்கிறது.
இந்த நிலையில்தான், கனிமொழிக்கு துணைப் பொதுச் செயலாளர் பதவி கிடைக்க பா.ஜ.க.தான் காரணம் என்று மூத்த பத்திரிகையாளர் மணி கூறி, அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை கிளப்பி இருக்கிறார். இதுகுறித்து தனியார் சேனல் ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில், “கனிமொழி எம்.பி.யாக இருப்பதால், டெல்லியில் நல்ல தொடர்பை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறார். குறிப்பாக, உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடம் நெருக்கமாக இருக்கிறார். ஆகவே, அமித்ஷா மூலம் கனிமொழி தி.மு.க.வுக்கு நெருக்கடி கொடுக்கலாம். அவ்வாறு நெருக்கடி வரும் பட்சத்தில் தேவையில்லாத பிரச்னைகளை எல்லாம் சந்திக்க நேரிடும் (உதாரணமாக, மகாராஷ்டிராவில் சிவசேனா கட்சியிலிருந்த ஷிண்டே, அக்கட்சியை உடைத்துக் கொண்டு சென்றதுபோல செல்லலாம் என்று சொல்லாமல் சொல்கிறார்) என்பதை கருத்தில் கொண்டு, தங்களது பக்கம் தக்கவைத்துக் கொள்வதற்காகவே கனிமொழிக்கு பதவி வழங்கப்பட்டிருக்கிறது” என்று மணி கூறியிருக்கிறார். இதுதான் அரசியல் வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது.