சென்னையில் சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் பல இடங்களில் மற்றும் தெருக்களில் மழைநீர் தேங்கியுள்ளது. இதனால் வேலைக்கு செல்வோர் மற்றும் பொதுமக்கள் கடும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். இந்நிலையில் மீஞ்சூரில் இருந்து எண்ணூர் வரையிலான பொன்னேரி நெடுஞ்சாலையில் கனமழை பெய்ததால், மழைநீர் தேங்கி ஏற்கனவே குண்டும் குழியுமாக உள்ள தரமற்ற சாலையில் மழைநீர் தேங்கியுள்ளதால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகினர். சில வாகன ஓட்டிகள் சாலைகளில் நிலைதடுமாறி கீழே விழுந்து எழுந்து சென்ற பரிதாபமான நிகழ்வும் நடந்துள்ளது. இந்த சாலையில் இருபுறமும் கனரக வாகனங்கள் ஏராளமாக செல்வதால், சாலையானது குண்டும் குழியுமாக மிக மோசமான நிலையில் இருந்தது. கடந்த ஆண்டு மணலி விரைவுச்சாலையில் 650 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சீரமைப்பு திட்டம் வகுக்கப்பட்டும் மெத்தனமாக பணி கொண்டக்கரை சந்திப்பில் முழுமையாக கான்கிரீட் போடாமல் அரைகுறை வேலை செய்ததால் தற்போது விபத்து ஒன்று நடந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருவள்ளுர் மாவட்டம் மீஞ்சூரை அடுத்த சின்ன ஈச்சங்குழியை சேர்ந்த வல்லூர் அனல் மின் நிலையத்தில் ஒப்பந்த பணியாளராக வேலை பார்த்து வந்த தாமோதரன், கடந்த 10 வருடங்களாக மாலை 5 மணிக்கு பணி முடிந்ததும் மாலை 6 மணிக்கு வீட்டுக்கு வந்து விடுவார் என்று அவர்கள் குடும்பத்தினர் தெரிவித்தனர். இந்நிலையில் வழக்கம்போல் நேற்று பணி முடிந்து, வீட்டிற்கு சென்று கொண்டிருந்தனர். அப்போது கொண்டக்கரை பகுதியில் இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்த போது அரையும் குறையுமாக கான்கிரீட் போடப்படாத சாலையினால் நிலைத்தவறி கீழே விழுந்துள்ளார் தாமோதரன். பின்பு சுதாரித்துக்கொண்டு மேலே எழுந்திருக்க முயன்றபோது பின்னால் வந்த லாரி ஒன்று அவர் மீது ஏறி இறங்கியதில் பரிதாபமாக சம்பவ இடத்திலேயே பலியானார். இந்த விபத்து குறித்து மாதவரம் கலவத்துறை அதிகாரிகள் வழக்கு பதிவு செய்து லாரி ஓட்டுனரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். பலியான தாமோதரனுக்கு கோமதி என்கிற மனைவியும் இரு மகள்களும் உள்ளனர். திமுக பிரமுகரான தாமோதரன் தரமற்ற சாலையால் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.