விநாயகர் சதுர்த்தி விழா குறித்து, தி.மு.க. எம்.பி தெரிவித்த கருத்து பெரும் சர்ச்சையாக மாறியிருந்தது. இந்த நிலையில், அமைச்சர் சேகர் பாபு அதற்கு பதிலடி கொடுத்து இருக்கிறார்.
தி.மு.க.வை சேர்ந்த மூத்த தலைவரும், தர்மபுரி நாடாளுமன்ற உறுப்பினராக இருப்பவர் செந்தில் குமார். இவரது, பேச்சுகள் மற்றும் ட்விட்டர் பதிவுகள் பெரும் சர்ச்சையாக மாறி பொதுமக்களிடம் கண்டனங்களை பெறுவதை வழக்கமாக கொண்டவர். இதனால், தி.மு.க.வில் உள்ள முக்கிய தலைவர்கள் அனைவரும் இவரின் மீது கடும் அதிருப்தியில் இருப்பதாக சொல்லப்படுகிறது.
இப்படிப்பட்ட சூழலில், விநாயகர் சதுர்த்தி விழா சமீபத்தில், உலகம் முழுவதும் மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதற்கு, பாரதப் பிரதமர் மோடி, குடியரசு தலைவர் திரெளபதி முர்மு உள்ளிட்ட தலைவர்கள் ஹிந்து மக்களுக்கு வாழ்த்து தெரிவித்து இருந்தனர். இதனை தொடர்ந்து, இந்து சமய அறநிலையத்துறையை, தங்களுக்கும், தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள் என தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்து இருந்தது.
இதற்கு, தி.மு.க.வை சேர்ந்த தர்மபுரி எம்.பி. செந்தில், “இந்துசமய அறநிலையத்துறை என்பது, அம்மதம் சார்ந்த சொத்துக்களை நிர்வகிக்கும் நிர்வாக அமைப்பு மட்டும்தான். கடவுள் வழிபாடு செய்வதோ, அச்சமய விழாக்களுக்கு வாழ்த்து சொல்வதோ அந்த துறையின் பணி அல்ல” – கலைஞர். சொன்னது கலைஞர் ஆட்சியில் அறநிலையத்துறை அமைச்சராக இருந்தவரிடம் என குறிப்பிட்டு இருந்தார்.
இந்நிலையில், சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள இந்து சமய அறநிலையத்துறை அலுவலகத்தில் பத்திரிகையாளர்களை சந்திக்கும் போது அமைச்சர் சேகர்பாபு கூறியதாவது; விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து தெரிவிப்பது தவறில்லை; இந்து சமய அறநிலையத்துறையின் வேலையே அது தான்” என குறிப்பிட்டு இருக்கிறார்.