ஆம்னி பஸ் கட்டணத்தால் ஏழைகளுக்கு எவ்வித பாதிப்பும் இல்லை என்று அமைச்சர் உச்சக்கட்ட ஆணவத்தில் பேசியிருப்பது பொதுமக்களை கொந்தளிக்க வைத்திருக்கிறது.
பொதுவாகவே, தீபாவளி, பொங்கல், கிறிஸ்துமஸ் உள்ளிட்ட பண்டிகை காலங்களில் வெளியூர் பயணிகள் சிரமமின்றி பயணிக்க ஏதுவாக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவது வழக்கம். அந்த வகையில், தீபாவளி பண்டிகை அக்டோபர் 24-ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் சார்பில் சிறப்பு பேருந்துகள் அறிவிக்கப்பட்டு, முன்பதிவு நடைபெற்று வருகிறது. எனினும், அதிகளவிலான பயணிகள் சொந்த ஊர் செல்வதால், இந்த பேருந்துகள் போதுமானதாக இருப்பதில்லை. ஆகவே, பெரும்பாலான பயணிகள் தனியார் ஆம்னி பேருந்துகளில் பயணம் செய்வது வழக்கமாக இருக்கிறது. ஆனால், பண்டிகை காலங்களில் இயக்கப்படும் ஆம்னி பேருந்துகளில் அதிகளவு கட்டணம் வசூலிக்கப்படுவது வாடிக்கையாக இருக்கிறது.
அந்த வகையில், தீபாவளி பண்டிகையை ஒட்டி இயக்கப்படும் ஆம்னி பேருந்துகளின் கட்டணம், அனைத்து ஆம்னி பேருந்து உரிமையாளர் சங்கத்தின் சார்பில் கடந்த சில தினங்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டது. இந்தக் கட்டணம் அதிகமாக இருப்பதாக புகார்கள் எழுந்தது. இதையடுத்து, ஆம்னி பேருந்து கண்டனத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்த போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர், கட்டணத்தை குறைக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். இதைத் தொடர்ந்து, சென்னையில் ஆம்னி பேருந்து கட்டணம் தொடர்பாக, பேருந்து உரிமையாளர்களுடன் அமைச்சர் சிவசங்கர் பேச்சுவார்த்தை நடத்தினார். இதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர், ஆம்னி பேருந்து உரிமையாளர்களுக்கு ஆதரவாக பேசியிருக்கிறார்.
அதாவது, “அரசுப் பேருந்து கட்டணத்துடன், ஆம்னி பேருந்து கட்டணத்தை ஒப்பிடுவது தவறான கண்ணோட்டம். அரசுப் பேருந்துகள் மக்களின் சேவைக்காக இயங்குவது. ஆம்னி பேருந்துகள் அப்படி அல்ல. அது தனியார் ஒப்பந்த வாகனங்களாக இந்தியா முழுமைக்குமான கட்டண விகிதத்துடன் இயங்குவது. ஆகவே, ஆம்னி பேருந்துகளுக்கு கட்டண வரம்பு இல்லை. தனியார் ஆம்னி பேருந்தில் கட்டணம் அதிகம் என்று தெரிந்தும், பலரும் ஆம்னி பேருந்தில் பயணம் செய்கிறார்கள். ஆகவே, ஆம்னி பேருந்து கட்டணத்தால் ஏழை எளிய மக்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை. தமிழக அரசு சார்பில் 21,000 பேருந்துகள் மக்களுக்காக இயங்கிக் கொண்டிருக்கிறது” என்று கூறியிருக்கிறார்.
அமைச்சரின் இந்த பேச்சுதான் சர்ச்சையாகி இருக்கிறது. ஆம்னி பேருந்து கட்டணத்தால் ஏழை, எளிய மக்களுக்கு பாதிப்பு இல்லை என்று அமைச்சர் கூறுவதன் மூலம், ஏழைகளுக்கு அரசுப் பேருந்து, பணக்காரர்களுக்கு தனியார் பேருந்து என்று அரசு சொல்லாமல் சொல்கிறதா என்ற விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன. தவிர, அரசுப் பேருந்தில் சேவை சரியில்லை என்பதால்தான் பொதுமக்கள் தனியார் ஆம்னி பேருந்துகளை நாடுகின்றனர். அரசுப் பேருந்துகளில் பெரும்பாலும் பொதுமக்களை மதிப்பதில்லை என்ற குற்றச்சாட்டும் பரவலாக உள்ளது. இது ஒருபுறம் இருக்க, பேச்சுவார்த்தைக்கு முன்புவரை ஆம்னி பேருந்து கட்டணத்தை குறைக்க வேண்டும் என்று கூறிவந்த அமைச்சர், பேச்சுவார்த்தைக்குப் பிறகு திடீரென பல்டி அடிக்க காரணம் என்ன? அமைச்சருக்கு வரவேண்டியது வந்து விட்டதால்தான் இந்த திடீர் பல்டியா என்கிற கேள்வி எழுந்திருக்கிறது.