கொலை முயற்சி வழக்கில் திமுக எம்.எல்.ஏ பூண்டி கலைவாணனின் அண்ணன் மகன் கைது !

கொலை முயற்சி வழக்கில் திமுக எம்.எல்.ஏ பூண்டி கலைவாணனின் அண்ணன் மகன் கைது !

Share it if you like it

திருவாரூர் தொகுதி எம்.எல்.ஏ பூண்டி கலைவாணனின் அண்ணன் மறைந்த பூண்டி கலைச்செல்வத்தின் மகன், கலைவேந்தன். இவர் தி.மு.க-வில் கொரடாச்சேரி பேரூர் கழகச் செயலாளராக இருக்கிறார். பல வருடங்களுக்கு முன்பு படுகொலைசெய்யப்பட்ட பூண்டி கலைச்செல்வத்தின் 16-ம் ஆண்டு நினைவுநாளை முன்னிட்டு கொரடாச்சேரி கடைவீதி உள்ளிட்ட பகுதிகளில் அவருக்காக கலைவேந்தனின் ஆதரவாளர்கள் ஃபிளக்ஸ் வைத்திருக்கின்றனர்.

கடந்த 12-ம் தேதி தீபாவளி இரவு 7:30 மணியளவில் கடைவீதியில் கணேஷ் என்பவர், கலைச்செல்வம் நினைவுநாளுக்காக வைத்திருந்த ஃப்ளக்ஸ் போர்டில் கைவைத்தபடி நின்றிருக்கிறார். அப்போது அங்கு வந்த கலைவேந்தனின் நண்பர் நவீன், `என் தலைவன் போட்டோ மேல் ஏன் கைவைத்துக் கொண்டு நிற்கிறாய்?’ எனக் கேட்டிருக்கிறார். ‘சும்மாதான் நிற்கிறேன்’ என கணேஷ் சொல்லிக் கொண்டிருக்கும்போதே, அவரை நவீன் அடித்திருக்கிறார்.

அங்கிருந்த பட்டியலினத்தைச் சேர்ந்தவரான செந்தில்குமார் என்பவர், ‘சும்மா நின்று கொண்டிருந்த சின்னப் பையனை ஏன் அடிக்கிறீர்கள்’ எனக் கேட்டிருக்கிறார். அப்போது அங்கு வந்த கலைவேந்தனின் கார் டிரைவர் சூர்யபாரதியும், நவீனுடன் சேர்ந்து கொண்டு செந்தில்குமாரை அடித்திருக்கிறார். இதைப் பார்த்தவர்கள், பட்டியலினத்தவர்கள் வசிக்கும் பகுதிக்குச் சென்று தகவல் சொல்லியிருக்கின்றனர்.

உடனே அந்தப் பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் சிலர், சம்பவ இடத்துக்கு வந்திருக்கின்றனர். இதைத் தொடர்ந்து உடனே கலைவேந்தனுக்கு போன் செய்த நவீன், அவர்களின் சாதி குறித்துப் பேசி விட்டு, `எல்லோரும் நமக்கு எதிராகக் கூடி நிற்கிறாங்க, உடனே கிளம்பி வா’ என்றிருக்கிறார். இதையடுத்து கலைவேந்தனும், மாவட்டச் செயலாளர் கலைவாணனின் மகன் கலைஅமுதனும் ஐந்துக்கும் மேற்பட்டோருடன் காரில் வாள், அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களுடன் வந்து இறங்கியிருக்கின்றனர்.

காரிலிருந்து இறங்கிய உடனே கலைவேந்தன், செந்தில்குமாரை சாதியைச் சொல்லி தரக்குறைவாகப் பேசி அடித்ததாகச் சொல்லப்படுகிறது. சும்மா நின்று கொண்டிருந்த என்னை, உங்க ஆளுங்க அடிக்குறாங்க. என்னை விட்டுடுங்க' என கெஞ்சிய செந்தில்குமாரிடம்,என்னையே எதிர்த்துப் பேசுறியா’ என ஆக்ரோஷமாக கேட்டதுடன், கலைவேந்தன் உள்ளிட்டோர் செந்தில்குமார், கணேஷ் ஆகிய இருவரையும் அரிவாளால் வெட்டியதாகச் சொல்லப்படுகிறது. இந்தத் தகவல் கொரடாச்சேரி போலீஸாருக்குச் செல்ல, இன்ஸ்பெக்டர் சசிகலா சம்பவ இடத்துக்கு வந்திருக்கிறார்.

கலைவேந்தன் தரப்பினர் இன்ஸ்பெக்டரையும் தள்ளிவிட்டனர். இதைத் தொடர்ந்து படுகாயமடைந்த செந்தில்குமார், கணேஷ் ஆகிய இருவரும் மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டனர். செந்தில்குமார் கொடுத்த புகாரின் அடிப்படையில், கொலை முயற்சி உள்ளிட்ட பல பிரிவுகளில் வழக்கு பதிவுசெய்த போலீஸ், கலைவேந்தனை மட்டும் கைதுசெய்திருக்கிறது. இந்தச் சம்பவம் தொடர்பாக வெளியாகியிருக்கும் தகவல், திருவாரூர் மாவட்டத்தை பதற்றத்தில் ஆழ்த்தியிருக்கிறது.


Share it if you like it