தி.மு.க. எம்.எல்.ஏ.வை பொதுமக்கள் சிறைப்பிடிப்பு: மண்டபத்துக்குள் வைத்து பூட்டியதால் பரபரப்பு!

தி.மு.க. எம்.எல்.ஏ.வை பொதுமக்கள் சிறைப்பிடிப்பு: மண்டபத்துக்குள் வைத்து பூட்டியதால் பரபரப்பு!

Share it if you like it

தேனி அருகே தி.மு.க. எம்.எல்.ஏ.வை பொதுமக்கள் சிறைப்பிடித்து, மண்டபத்திற்குள் வைத்து பூட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது.

கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே எரசக்கநாயக்கனூரில் உள்ள தனியார் மண்டபத்தில் கால்நடைகள் சிறப்பு முகாம் நடந்தது. இம்முகாமில் தி.மு.க.வைச் சேர்ந்த எம்.எல்.ஏ. கம்பம் ராமகிருஷ்ணன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அப்போது, முகாமுக்கு திரண்டு வந்த மலைமாடுகள் வளர்ப்போர் சங்கத்தினர், திடீரென எம்.எல்.ஏ.வை வழிமறித்தனர். பின்னர், மலைமாடுகளை வனப்பகுதியில் மேய்ப்பதற்கு அனுமதி வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி எம்.எல்.ஏ.வை முற்றுகையிட்டனர்.

இதையடுத்து, அடிப்படை வசதி அப்பகுதி பொதுமக்களும் ஒன்றிணைந்து எம்.எல்.ஏ.வை சிறைப்பிடித்ததோடு, விழா நடந்த மண்டபத்தின் கதவையும் பூட்டுக் கொண்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தங்கள் ஊருக்கு தேவையான தண்ணீர், சாலை, சாக்கடை வசதி உள்ளிட்ட எந்தவித அடிப்படை வசதிகளும் செய்து தரப்படவில்லை. வனப்பகுதியில் மலைமாடுகளை மேய்ப்பதற்கு வனத்துறையினர் அனுமதி மறுப்பதுடன், அச்சுறுத்தி வருகின்றனர். இதனால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, அடிப்படை வசதி செய்து தருவதுடன், மலைமாடுகள் மேய்ச்சலுக்கு அனுமதி பெற்றுத் தர வேண்டும் என்று வாக்குவாதம் செய்தனர்.

இதைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்திய எம்.எல்.ஏ. கம்பம் ராமகிருஷ்ணன், மக்களது பிரச்னைக்கு தீர்வு காணப்படும் என்று உறுதியளித்தார். இதனால் சமாதானமடைந்த பொதுமக்கள் சுமார் 1 மணி நேரத்திற்குப் பிறகு மண்டபத்தின் கதவை திறந்து விட்டு எம்.எல்.ஏ.வை விடுவித்தனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.


Share it if you like it