தி.மு.க., – எம்.எல்.ஏ., உதவியுடன் அவரது கார் ஓட்டுனர், தங்கள் வீட்டை அபகரிக்க முயற்சி செய்ய முயல்வதாக பெண் ஒருவர் காவல்துறையில் பகீர் புகார் அளித்துள்ளார்.
சென்னை சோழிங்க நல்லுாரைச் சேர்ந்த உஷா என்பவர், சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நேற்று அளித்துள்ள புகாரில் இவ்வாறு தெரிவித்து உள்ளார்.
சோழிங்க நல்லுார், 3-வது குறுக்குத் தெருவில், கணவர் மற்றும் இரண்டு மகள்களுடன் வசிக்கிறேன். எங்கள் வீட்டிற்கு அருகே, தற்போது சோழிங்கநல்லுார் தொகுதி, தி.மு.க., – எம்.எல்.ஏ.,வாக உள்ள, அரவிந்த் ரமேஷிடம், கார் ஓட்டுனராக வேலை பார்த்து வரும் ராஜா மற்றும் இவரது மனைவி லதா ஆகியோர், 2008-ல், சொந்தமாக வீடு வாங்கி குடியேறினர்.
இவர்கள் எங்கள் வீட்டை குறைந்த விலைக்கு கேட்டனர்; தர மறுத்துவிட்டோம். எம்.எல்.ஏ.,விடம் கார் ஓட்டுனராக இருப்பதால் மிரட்டி பார்த்தனர். ஒரு கட்டத்தில் எங்கள் மீது தாக்குதலும் நடத்த துவங்கினர். இது குறித்து, செம்மஞ்சேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தோம்; நடவடிக்கை இல்லை. ஒரு நாள், ராஜா மற்றும் லதா ஆகியோர் எங்களிடம் தகராறில் ஈடுபட்டனர். அப்போது, சம்பவ இடத்திற்கு வந்த அரவிந்த ரமேஷ், எங்கள் வீட்டை தன் கார் ஓட்டுனருக்கு கொடுத்துவிட வேண்டும்.
மீறினால், நாங்களே இடத்தை காலி செய்துவிடுவோம் என, மிரட்டினார்.எங்கள் வீட்டை அபகரிக்க, ராஜா, லதா ஆகியோர் முயற்சிக்கின்றனர். இவர்களுக்கு அரவிந்த ரமேஷ் துணையாக உள்ளார். இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
நன்றி ; தினமலர்