தலைகீழாக தேசியக்கொடி… தி.மு.க. எம்.எல்.ஏ. லகலக!

தலைகீழாக தேசியக்கொடி… தி.மு.க. எம்.எல்.ஏ. லகலக!

Share it if you like it

தி.மு.க. எம்.எல்.ஏ. ஒருவர், பள்ளி தொடக்க நாளில் தேசியக்கொடியை தலைகீழாக ஏற்றிய விவகாரம் கேலி, கிண்டலுக்கு ஆளாகி இருக்கிறது.

கோடை விடுமுறை முடிந்து தமிழகம் முழுவதும் நேற்று பள்ளிகள் திறக்கப்பட்டன. இதையொட்டி, அரசுப் பள்ளிகளில் அப்பகுதி எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள், அமைச்சர்கள் உள்ளிட்ட வி.ஐ.பி.க்களை அழைத்து தேசியக்கொடி ஏற்றச் செய்து துவக்க நிகழ்ச்சியை நடத்தினார்கள். அந்த வகையில், உளுந்துார்பேட்டை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியும் நேற்று காலை திறக்கப்பட்டது. இதற்கான துவக்க விழா நிகழ்ச்சிக்காக உளுந்தூர்பேட்டை தி.மு.க. எம்.எல்.ஏ. மணிக்கண்ணனை சிறப்பு அழைப்பாளராக அழைத்திருந்தார்கள்.

நிகழ்ச்சியின் தொடக்கமாக தேசியக்கொடியை ஏற்றி வைத்தார் மணிக்கண்ணன். ஆனால், தவறுதலாக தேசியக்கொடி தலைகீழாக ஏற்றப்பட்டது. எனினும், இதை கவனிக்காத எம்.எல்.ஏ. மணிக்கண்ணன், கொடிக்கு வணக்கம் செலுத்த, மாணவியரும் வணக்கம் செலுத்திவிட்டு, கொடி வணக்கப் பாடலை பாடத் துவங்கினர். அதேசமயம், தேசியக்கொடி தலைகீழாக ஏற்றப்பட்டதை ஆசிரியர் ஒருவர், உடன் கொடியை கீழே இறக்கி சரி செய்துவிட்டு மீண்டும் ஏற்றி வைத்தார். பின்னர், எம்.எல்.ஏ. மணிக்கண்ணன் மாணவிகளுக்கு நோட்டு, புத்தகங்களை வழங்கி விட்டுச் சென்றார்.

தி.மு.க. எம்.எல்.ஏ. மணிக்கண்ணன் தேசியக் கொடியை தலைகீழாக ஏற்றிய இந்த விவகாரம்தான் மாணவிகள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. அதேசமயம், நெட்டிசன்களோ தி.மு.க.வினரை கேலி, கிண்டல் செய்து வருகின்றனர். ஏற்கெனவே இதேபோல் கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி தாலுகா சத்திரம் புதூர் கிராமத்திலுள்ள உயர் நிலைப்பள்ளியில் கடந்தாண்டு சுதந்திர தினத்தன்று சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட நெய்வேலி தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. சபா ராஜேந்திரன் தேசியக்கொடியை தலைகீழாக ஏற்றி வைத்ததை குறிப்பிட்டு கிண்டல் செய்து வருகின்றனர்.


Share it if you like it