ஆ.ராசாவின் ரூ.55 கோடி பினாமி சொத்து முடக்கம்!

ஆ.ராசாவின் ரூ.55 கோடி பினாமி சொத்து முடக்கம்!

Share it if you like it

முன்னாள் மத்திய அமைச்சரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ஆ.ராசாவின் 55 கோடி ரூபாய் மதிப்பிலான 45 ஏக்கர் பினாமி சொத்துகளை அமலாக்கத் துறை முடக்கி இருக்கிறது.

தி.மு.க.வைச் சேர்ந்த மூத்த தலைவர்களில் ஒருவர் ஆ.ராசா. முன்னாள் மத்திய அமைச்சரான இவர், தற்போது நாடாளுமன்ற உறுப்பினராக இருந்து வருகிறார். இவர், 2004 – 2007-ம் ஆண்டு காலக்கட்டத்தில் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சராக இருந்தபோது, வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக புகார் எழுந்தது. இதையடுத்து, 2015-ம் ஆண்டு ஆ.ராசா மீது சி.பி.ஐ. வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தியது. மேலும், சென்னை, கோவை, திருச்சி, பெரம்பலூரில் ஆ.ராசாவுக்குச் சொந்தமான பல்வேறு இடங்களில் சி.பி.ஐ. அதிகாரிகள் ஒரே நேரத்தில் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் பல்வேறு முக்கிய ஆவணங்களை சி.பி.ஐ. அதிகாரிகள் கைப்பற்றினர். இதனடிப்படையில், ஆ.ராசா உட்பட 5 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.

இதைத் தொடர்ந்து, அமலாக்கத்துறையும் தனியாக வழக்குப் பதிவு செய்து, விசாரணையை நடத்தியது. விசாரணையில், ஆ.ராசா 2004 முதல் 2007-ம் ஆண்டுவரை மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சராக இருந்தபோது, குருகிராமில் உள்ள இந்தியாவின் முன்னணி ரியல் எஸ்டேட் நிறுவனத்துக்கு சுற்றுச்சூழல் அனுமதிகளை வழங்கியதும், இதற்காக அந்நிறுவனம் அவருக்கு லஞ்சமாக குறிப்பிட்ட தொகையை வழங்கியதும் தெரியவந்தது. மேலும், லஞ்சமாகப் பெற்ற பணத்தை ஆ.ராசா தனது குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்கள் பெயரில் பினாமி நிறுவனம் தொடங்கி, அதன் மூலம் வருமானம் கிடைத்ததாக கணக்கு காட்டியதும் அமலாக்கத்துறையின் விசாரணையில் தெரியவந்தது.

ஆனால், உண்மையில் அந்நிறுவனம் ஆரம்பத்தில் இருந்தே எந்தவொரு வணிக நடவடிக்கையிலும் ஈடுபடவில்லை என்பதை அமலாக்கத்துறை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். ஆகவே, அந்த பினாமி நிறுவனத்தில் பெறப்பட்ட மொத்த பணமும் குருகிராம் ரியல் எஸ்டேட் நிறுவனத்திடம் இருந்து லஞ்சமாக பெறப்பட்டது என்று அமலாக்கத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இதையடுத்து, கோவையில் பினாமி பெயரில் ஆ.ராசா வாங்கி இருக்கும் 55 கோடி ரூபாய் மதிப்புள்ள 45 ஏக்கர் நிலத்தை மத்திய அமலாக்கத்துறை நேற்று முடக்கியது. இந்த சொத்து லஞ்சமாக பெறப்பட்ட பணத்தில் இருந்து வாங்கியதால் முடக்கப்பட்டிருப்பதாக அமலாக்கத்துறை தெரிவித்திருக்கிறது. மேலும், இது தொடர்பாக அமலாக்கத்துறை தொடர்ந்து விசாரணை நடத்தி வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.


Share it if you like it