நேற்று இரவு திருநெல்வேலியில் உள்ள மத்திய மாவட்ட திமுக அலுவலகத்தில் வருமானவரித் துறை அதிகாரிகள் திடீர் சோதனை மேற்கொண்டனர். இதில், கணக்கில் வராத ரொக்கம் கைப்பற்றப்பட்டதாகத் கூறப்படுகிறது. மேலும், சேலம் துணை மேயர் சாரதா தேவி வீட்டிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் நேற்று சோதனை மேற்கொண்டனர்.
திருநெல்வேலி மத்திய மாவட்ட திமுக அலுவலகம், பாளையங்கோட்டை மகாராஜ நகரில் உள்ளது. இந்த அலுவலகத்தில் மாவட்ட திமுக செயலரும், சட்டப்பேரவை முன்னாள் தலைவருமான ஆவுடையப்பன் தலைமையில் திமுக கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நேற்று இரவு நடைபெற்றது.
அப்போது திடீரென 9 பேர் கொண்ட வருமான வரித்துறை அதிகாரிகள் குழுவினர், அதிகாரி காசிசங்கர் தலைமையில் திமுக அலுவலகத்துக்குச் சென்றனர். இதையடுத்து, கட்சி நிர்வாகிகள் அங்கிருந்து வெளியேறினர். தொடர்ந்து, வருமான வரித் துறைஅதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவலறிந்த திமுகவினர் அங்கு திரண்டு, மத்திய அரசுக்கு எதிராக கோஷமெழுப்பினர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது. இந்த சோதனை இரவு 9 மணிவரை நீடித்தது.
இந்த சோதனையின்போது கணக்கில் வராத பணம் மற்றும் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாகத் தெரிகிறது. சோதனைக்குப் பின்னர் வெளியே வந்த அதிகாரிகளிடம் இதுகுறித்து கேட்டபோது, எவ்வளவு தொகை கைப்பற்றப்பட்டது என்பது குறித்து தெரிவிக்க மறுத்துவிட்டனர்.
இது தொடர்பாக மாவட்டச் செயலாளர் ஆவுடையப்பன் செய்தியாளர்களிடம் கூறும்போது, “வருமான வரித் துறையினல் சோதனையில் பணம் எதுவும் கைப்பற்றப்படவில்லை” என்று தெரிவித்தார்.
அதேநேரத்தில், சோதனையின் முடிவில் கட்சி அலுவலகத்திலிருந்து கைப்பற்றப்பட்ட தொகை மற்றும் ஆவணங்கள் தொடர்பான படிவத்தில், வருமான வரித்துறை அதிகாரிகள் ஆவுடையப்பனிடம் கையெழுத்து பெற்றுச் சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.