தி.மு.க.வுக்கு பெரியார் வெறும் ‘போஸ்டர் பாய்’ மட்டுமே: மனநல மருத்துவர் ஷாலினி ‘நச்’!

தி.மு.க.வுக்கு பெரியார் வெறும் ‘போஸ்டர் பாய்’ மட்டுமே: மனநல மருத்துவர் ஷாலினி ‘நச்’!

Share it if you like it

பெரியாருக்கும் தி.மு.க.வுக்கும் லேசான தொடர்பு மட்டுமே இருக்கிறது. தி.மு.க.வை பொறுத்தவரை பெரியார் வெறும் போஸ்டர் பாய் மட்டுமே என்று பிரபல மனநல மருத்துவரும், சமூக செயற்பாட்டாளருமான ஷாலினி கூறியிருக்கிறார்.

சென்னையைச் சேர்ந்த பிரபல மனநல மருத்துவர் ஷாலினி. திராவிடக் கழகத்தின் ஆதரவாளரான இவர், சமூக செயற்பாட்டாளரும் கூட. அரசியல் முதல் அடிச்சுவடு வரை பேசக்கூடியவர், விவாதிக்கக் கூடியவர். இவர், சமீப காலமாக தி.மு.க. மீது சில விமர்சனங்களை வைத்து வருக்கிறார். இந்த நிலையில், தனியார் யூடியூப் சேனல் ஒன்று டாக்டர் ஷாலியிடம் நேர்காணல் நடத்தி இருக்கிறது. இந்த நேர்காணலில்தான், பெரியாரை பிடித்திருக்கிறது என்பதற்காக தி.மு.க.வை பிடித்திருக்க வேண்டிய அவசியமில்லை. பெரியாருக்கும், தி.மு.க.வுக்கும் லேசான தொடர்பு மட்டுமே இருக்கிறது. தி.மு.க.வை பொறுத்தவரை பெரியார் என்பவர் வெறும் போஸ்டர் பாய் மட்டுமே என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார்.

அக்காணொளியில் டாக்டர் ஷாலினி மேலும் கூறுகையில், “நான் எந்த அரசியல் கட்சியையும் சார்ந்தவர் இல்லை. பா.ஜ.க., அ.தி.மு.க., நாம் தமிழர், விடுதலைச் சிறுத்தைகள் என அனைத்துக் கட்சிகளையும் எதிர்த்தும், விமர்சித்தும் பேசி இருக்கிறேன். அக்கட்சியினர் அனைவருமே என்னை நாகரிகமாகவே நடத்தினார்கள், பேசினார்கள். எனது கருத்தை அவர்கள் ஏற்றுக் கொள்கிறார்களோ அல்லது ஏற்றுக் கொள்ளவில்லையோ அது அவர்களது விருப்பம். ஆனால், எனது கருத்து சுதந்திரத்தில் அவர்கள் தலையிடவே இல்லை. ஆனால், சுயமரியாதை இயக்கும், பெண்களுக்கு முக்கியத்துவம் தரும் இயக்கம் என்று சொல்லிக் கொண்டு, தி.மு.க.வினர் எனது கருத்துச் சுதந்திரத்துக்கு எதிராக நிற்கின்றனர். அப்படியானால் தி.மு.க. இரட்டை வேடம் போடுகிறது என்றுதானே அர்த்தம்.

மேலும், இத்தனை நாட்களாக திராவிட பயிற்சி பாசறையை நடத்தியும் இப்படியெல்லாம் நடந்து கொள்கிறார்கள் என்றால், இது தி.மு.க.வுக்கு எவ்வளவு பெரிய தோல்வி. அதோடு, இது ஜனநாயகத்துக்கும் மிகப்பெரிய தோல்விதானே. ஜனநாயகம் தோற்றாலும் பரவாயில்லை. ஆனால், தி.மு.க. வெற்றிபெற வேண்டும் என்று நினைப்பது என்ன மனநிலை. அதேசமயம், தி.மு.க. தோற்றாலும் பரவாயில்லை, ஜனநாயகம், சுயமரியாதை, பெண்கள் உரிமை ஜெயிக்க வேண்டும் அல்லவா? ஒரு கட்சி இன்று இருக்கும், நாளை இல்லாமல் போகும். அப்படி இருக்க, அக்கட்சிக்காக நாங்கள் ஏன் சாப்பிடாமல் இருக்க வேண்டும். பா.ஜ.க., நாம் தமிழர் கட்சிகளை விட தி.மு.க. படு மோசமாக இருக்கிறது” என்று வெளுத்து வாங்கி இருக்கிறார். இந்த காணொளிதான் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.


Share it if you like it