அடுத்து ஆட்சிக்கு வரப்போவது திமுக தான்..! என்பது போன்ற பிம்பத்தை ஏற்படுத்த திடல் ஊடகங்கள் முயன்று வருகின்றன. அதற்கேற்ப அரசியல் நோக்கர்களை பேசவைப்பது, கருத்து (தி)கணிப்புகளை நடத்துவது, என பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டுவந்தாலும், 1969ம் ஆண்டு அண்ணாதுரை மரணத்திற்கு பிறகு கருணாநிதி தலைமையிலான திமுக ஒரு முறை கூட தன் சொந்த உழைப்பில் ஆட்சியமைத்ததே இல்லை, கருணாநிதியை ஒருமுறை கூட தமிழக மக்கள் தங்களின் முதல்வராக ஏற்றுக் கொண்டதும் இல்லை…என்ற உண்மையை இவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்…
1971, 1989, 1996, 2006 ஆகிய ஆண்டுகளில் திமுக ஆட்சி அமைத்தது…
அண்ணாவின் மறைவிற்கு பிறகு 1971ம் ஆண்டு திமுக முதல் முறையாக தேர்தலை சந்தித்தது அந்த தேர்தலில் தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் கருணாநிதியை முதல்வர் வேட்பாளராக முன்மொழிந்து எம்.ஜி.ஆர் பிரசாரம் செய்தார். எம்.ஜி.ஆருக்கு இருந்த ரசிகர்கள் கூட்டமும் அப்படியே திமுகவின் ஓட்டுகளாக மாறின. அதன் விளைவு திமுக 184 தொகுதிகளில் வென்றது மேலும் கருணாநிதி முதல்வராவதற்கு குடும்பம் மற்றும் கட்சியில் இருந்த பல தடைகளை உடைத்து அவரை முதல்வராக ஆக்கியவர் எம்ஜிஆர் தான். இதனை நாம் மட்டும் கூறவில்லை 2010 ம் ஆண்டு நடைபெற்ற விழா ஒன்றில் கருணாநிதியே பின்வருமாறு இதனை ஒப்புக்கொண்டு உள்ளார்.
“அறிஞர் அண்ணா அவர்கள் மறைந்தபோது அடுத்து யார் முதல்வராக வரவேண்டும் என்ற கேள்வி எழுந்த நேரத்தில், என்னுடைய வீட்டிற்கே வந்து, என்னுடைய வீட்டிலே உள்ள அனைவரும் நான் முதல்வராக வேண்டாம் என்று தடுத்தும்கூட, அவர்களையெல்லாம் சமாதானப்படுத்தி, இவர்தான் முதலமைச்சராக வேண்டும்; நீங்கள் யாரும் தடுக்கக்கூடாது என்று என்னுடைய வீட்டிலே உள்ளவர்களையெல்லாம் சமாதானப்படுத்த இரண்டு, மூன்று நாட்கள் என்னுடைய வீட்டிற்கு வந்தார் எம்ஜிஆர். என் துணைவியாரைச் சமாதானப்படுத்தினார். என் சகோதரிகளைச் சமாதானப்படுத்தினார். குறிப்பாக முரசொலி மாறன், நீ வர வேண்டாம்; முதலமைச்சராக ஆகவேண்டாம்; அடுத்து மூத்தவரான நாவலர்தான் அதற்கு ஏற்றவர் என்று சொல்லியும்கூட, நானும், மாறன் வழியிலே நின்று கழகத் தோழர்களுக்கு எடுத்துச் சொல்லியும்கூட, அதையெல்லாம் கேட்காமல், உங்களை கொண்டுபோய் முதல்வர் நாற்காலியிலே உட்கார வைத்துத்தான் தீருவேன் என்று என்னைக் கொண்டுவந்து, முதலமைச்சர் பதவியிலே உட்கார வைக்கும் பெரும் பொறுப்பை ஏற்றவர், அருமை நண்பர் மறைந்த எம்.ஜி.ஆர். அவர்களாவார்” என கூறியவர் வேறுயாரும் இல்லை மு.கருணாநிதியே தான்.
இப்படி திமுகவை ஆட்சி கட்டிலில் அமரவைத்த எம்ஜிஆர் அக்கட்சியில் இருந்து விலகி சென்ற பிறகு, அவர் உயிருடன் இருக்கும் வரை ஒருமுறை கூட திமுக ஆட்சி ருசியை அனுபவித்ததே இல்லை. பிரதான கட்சியாக தொடர்ந்து பத்து ஆண்டுகள் எம்ஜிஆர் முதல்வராக இருந்து, கனவில் கூட கருணாநிதி முதல்வராக முடியாத அளவுக்கு அடக்கி வைத்திருந்தார். 1987ம் ஆண்டு எம்ஜிஆர் என்ற அந்த மாபெரும் பிம்பம் தகர்ந்து காலனின் வாயில் விழுந்தது.. அதனை தொடர்ந்து அதிமுக பிளவுபட்டது ஜானகியின் தலைமையில் அதிமுக (ஜா) அணியும் ஜெயலலிதா தலைமையில் அதிமுக (ஜெ) அணியும் களத்தில் நின்றது தேர்தல் ஆணையம் இரு கட்சிகளையும் அதிகாரப்பூர்வமான அதிமுகவாக ஏற்க மறுத்து அதிமுக வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்த இரட்டை இலை சின்னத்தை முடக்கியது. அதிமுக (ஜா) அணிக்கு இரட்டைப் புறா சின்னமும், அதிமுக (ஜெ) அணிக்கு சேவல் சின்னமும் வழங்கப்பட்டன. இந்த வெற்றிடத்தில் தான் திமுக நுழைந்தது 1989ம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் “ஆளில்லா களத்தில் வெற்றி பெற்ற ஆட்ட நாயகன்” போல் 150 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை அமைத்தது திமுக. ஆனால் அடுத்த இரண்டே மாதங்களில் தள்ளிவைக்க பட்டிருந்த மருங்காபுரி மற்றும் மதுரை கிழக்கு ஆகிய இரு தொகுதிகளுக்கு நடை பெற்ற சட்டசபை தேர்தலில் திமுக ஆளும் கட்சியாக இருந்தும் கூட படு தோல்வியை சந்தித்தது. அதற்கு காரணம் அதிமுக தனது இரட்டை இலை சினத்தை மீட்டு ஒரு தலைமையின் கீழ் வந்திருந்து…
அடுத்ததாக 1996ம் ஆண்டு திமுக ஆட்சியமைத்த கதை சொல்லித் தெரிய வேண்டியது இல்லை. ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் பகுதியில் ரஜினிகாந்த் வீடும் இருந்ததால் கடும் கெடுபிடிகளுக்கு ரஜினி காந்த் ஆளானார், அவரது திரைப்பட போஸ்டர்கள் ஒட்டவிடாமல் இடையூறு செய்யப்பட்டது, மணிரத்தினம் வீட்டில் வெடிகுண்டு வீசப்பட்டது. இதனால் எரிச்சல் அடைந்த ரஜினிகாந்த் அதிமுக அமைச்சர்கள் முன்னிலையிலேயே தமிழகத்தில் வெடிகுண்டு கலாச்சாரம் அதிகரித்துவிட்டதாக விமர்சித்தார், மேலும் தமிழகத்தில் மீண்டும் அதிமுக ஆட்சிக்கு வந்தால் ஆண்டவனால் கூட தமிழகத்தை காப்பாற்ற முடியாது என பேசி பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார். மூப்பனார் போன்ற பெரியோர்கள் இருந்த நம்பிக்கையில் திமுக கூட்டணிக்கு குரல் கொடுத்தார் ரஜினி. அவரது முதுகில் ஏறி சவாரி செய்து 173 இடங்களில் திமுக வெற்றி பெற்று ஆட்சியமைத்தது. இதுவே திமுக பெரும்பான்மை பெற்ற கடைசி தேர்தலாகும்…
இதன் பிறகு 2006 ம் ஆண்டு தேர்தலில் தி.மு.க. வெறும் 96 இடங்களில் தான் வெற்றி பெற்றது. காங்கிரஸ், பா.ம.க உள்ளிட்ட கூட்டணிக்கட்சிகளின் எம்.எல்.ஏக்களை இழுத்து பிடித்து ஒருவழியாக கூட்டணி ஆட்சியை அமைத்தது திமுக. இதனால் ஜெயலலிதா பேசிய மேடைகளில் எல்லாம் மைனாரிட்டி திமுக என அக்கட்சியை போட்டுத் தாக்கியது நாம் அனைவரும் அறிந்ததே…
இவ்வாறாக 1971ல் எம்ஜிஆர் முதுகில் ஏறி வெற்றி பெற்றது, 1989ல் ஆளில்லா களத்தில் வெற்றி பெற்ற ஆட்ட நாயகன் போல் இரட்டை இலை இல்லாத தேர்தலில் வெற்றி பெற்றது, 1996ல் ரஜினியின் முதுகில் சவாரி செய்தது, 2006ல் சவாரி செய்ய ஆளில்லா சூழலில் பெரும்பான்மை கூட பெறமுடியாமல் இரட்டை இலக்க எம்.எல்.ஏகளுடன் அடுத்த கட்சி எம்.எல்.ஏகளை கடன் வாங்கி ஆட்சியமைத்தது என ஒரு முறை கூட திமுக மக்களால் தேர்ந்தெடுக்க படவில்லை என்பதே உண்மை.
விக்னேஷ் வாசுதேவ்.R