தி.மு.க. ஐ.டி. விங் மாநிலச் செயலாளர் டி.ஆர்.பி.ராஜா, நேற்று மாலை ட்விட்டரில் போட்டிருந்த பதிவை இரவோடு இரவாக டெலிட் செய்து விட்டார். இதையறிந்த நெட்டிசன்கள் ராஜாவை கலாய்த்தும், கிண்டல் செய்தும் அவரை டேக் செய்து பதிவுகளை போட்டு வருகின்றனர்.
தி.மு.க.வைச் சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சரும், தற்போதைய எம்.பி.யுமான டி.ஆர்.பாலுவின் மகன் டி.ஆர்.பி.ராஜா. மன்னார்குடி தொகுதி எம்.எல்.ஏ.வாக இருக்கும் ராஜா, தி.மு.க.வின் ஐ.டி. விங் மாநிலச் செயலாளராகவும் இருந்து வருகிறார். ராஜாவை பொறுத்தவரை அடாவடி பேர்வழி என்கிறார்கள் அவரது நெருங்கிய வட்டாரத்தினர். இதன் காரணமாகவே, மன்னார்குடி தொகுதியில் தொடர்ச்சியாக 3-வது முறையாக எம்.எல்.ஏ.வாக தேர்வுபெற்றும் அமைச்சர் பதவி கொடுக்கவில்லை என்கிறார்கள். சும்மாவே ட்விட்டரில் கம்பு சுற்றும் இவர், தி.மு.க. ஐ.டி. விங் செயலாளர் பதவி கிடைத்ததும் கொஞ்சம் ஓவராகவே கம்பு சுற்றி வருகிறார்.
இந்த நிலையில், நேற்று மாலை 4 மணியளவில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை, தொடர்ச்சியாக சம்பந்தமே இல்லாமல் கேள்வி கேட்டுக் கொண்டிருந்த யூடியூப்பர் ஒருவரிடம், “ஒரு மணி நேரம் பேட்டி கொடுத்திருக்கிறேன். எங்காவது யாரையாவது தவறாக பேசினேனா? மரியாதை கொடுத்தால் 3 மடங்காக திருப்பி மரியாதை தரப்படும். எனக்கென்று ஒரு தர்மம் இருக்கிறது. எனது கட்சியை பற்றி யாராவது தவறாகப் பேசினால் திருப்பி அடிப்பேன்” என்று கூறினார். இந்த பேட்டி முடிந்த சிறிது நேரத்திலேயே டி.ஆர்.பி.ராஜா ட்விட்டரில் ஒரு பதிவை போட்டிருந்தார்.
அப்பதிவில், “கருத்துச் சொல்லுங்கள். மாற்றுக் கருத்துச் சொல்லுங்கள். இல்ல நாங்க சொல்றது பொய் என்று கூட வாதாடுங்கள். நாகரீகமாக பதில் வரும். ஆனா என் தலைவன விமர்சிக்க உங்க எவனுக்கும் தகுதியில்ல. மீறி பேசுனா உங்கப்பனாவே இருந்தாலும் அடிப்போம்… sorry… மிதிப்போம்” என்று மிகவும் ஆவேசமாக பதிவிட்டிருந்தார். இவரது இந்த பதிவுக்கு கடுமையான எதிர்ப்புக் கிளம்பியது. ஒரு எம்.எல்.ஏ. இவ்வாறு பேசுவது நாகரீகமா? மேலும், கட்சியின் மிகப் பொறுப்பான பதவியில் இருப்பவர் இப்படியொரு பதிவை போடலாமா? என்று பல்வேறு தரப்பினரும் ராஜாவை கேள்விகளால் துளைத்தெடுத்தனர். மேலும், தங்களது கண்டனங்களையும் தெரிவித்து வந்தனர்.
இந்த நிலையில், நேற்று நள்ளிரவு 12.47 மணிக்கு அந்தப் பதிவை டெலிட் செய்துவிட்டு, குப்புற விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என்கிற கதையாக, அதற்கான விளக்கம் கொடுத்து ஆங்கிலத்தில் ஒரு பதில் பதிவை போட்டிருந்தார் ராஜா. மறுநாள் காலையில் நெட்டிசன்கள் ராஜாவின் பதிவை தேடியபோது, அது டெலிட் செய்யப்பட்டிருந்தது தெரியவந்தது. நெட்டிசன்களுக்கு கேட்கவா வேண்டும்? பிரித்து மேய்ந்து வருகின்றனர் ராஜாவை. ‘என்ன ராஜா அடி ரொம்ப பலமோ’ என்றும், கிரி படத்தில் வரும் “ஏன்டா உன்னைய பெரிய ரவுடின்னுல்லடா நெனச்சேன். இப்படி சின்னப்புள்ள மாதிரி அழுற. சரி சரி மன்னிச்சுட்டேன் போ’ என்றும் ராஜாவை ரவுண்டு கட்டி அடித்து வருகின்றனர்.