லோக்சபா தேர்தலில் திமுக – அதிமுக சார்பில் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்ட நிலையில், 9 தொகுதிகளில் உதயசூரியன் – இரட்டை இலை சின்னங்கள்நேரடியாக மோதுகின்றன.
லோக்சபா தேர்தலுக்கான வேட்பாளர்கள் பட்டியலை திமுக தலைவர் ஸ்டாலின் இன்று (மார்ச் 20) வெளியிட்டார். 21 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களை அறிவித்ததுடன், தேர்தல் அறிக்கையையும் வெளியிட்டார்.
வெளியான வேட்பாளர்கள் பட்டியலில் மொத்தம் 9 தொகுதிகளில் திமுக – அதிமுக நேரடியாக போட்டியிடுகின்றன. அதாவது, வட சென்னை, தென் சென்னை, காஞ்சிபுரம், அரக்கோணம், ஆரணி, சேலம், ஈரோடு, தேனி, நாமக்கல் ஆகிய 9 லோக்சபா தொகுதிகளில் திமுக மற்றும் அதிமுக., உதயசூரியன் – இரட்டை இலை சின்னங்கள் நேரடியாக மோதுகின்றன.
திமுக.,வின் வேட்பாளர்கள் பட்டியலில் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மகள் கனிமொழி, முன்னாள் அமைச்சர் ஆற்காடு வீராசாமி மகன் கலாநிதி வீராசாமி, முரசொலி மாறன் மகன் தயாநிதி மாறன், முன்னாள் அமைச்சர் தங்கப்பாண்டியனின் மகளும், அமைச்சர் தங்கம் தென்னரசுவின் சகோதரியுமான தமிழச்சி தங்கப்பாண்டியன் அமைச்சர் துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த், அமைச்சர் நேருவின் மகன் அருண் நேரு ஆகிய 6 வாரிசுகளுக்கு சீட் வழங்கப்பட்டுள்ளது.