தமிழகத்தில் மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்தக் கட்டண உயர்வு ஜூலை 1-ம் தேதி முதல் நடைமுறைக்கு வந்துள்ளதாக தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் அறிவித்துள்ளது.
இந்த புதிய மின் கட்டண உயர்வின்படி, 400 யூனிட் வரை பயன்படுத்தும் வீடுகளுக்கு யூனிட் ஒன்றுக்கு ரூ.4.60 காசுகள் வசூலிக்கப்பட்டு வந்த கட்டணம், தற்போது ரூ.4.80 காசுகளாக உயர்த்தப்பட்டுள்ளது. அதேபோல், 401 யூனிட் 500 யூனிட் வரையிலான வீடுகளுக்கான மின் கட்டணம், ரூ.6.15 காசுகளில் இருந்து ரூ.6.45 காசுகளாக உயர்த்தப்பட்டுள்ளது.
501 முதல் 600 யூனிட் வரையிலான வீடுகளுக்கான மின் கட்டணம், யூனிட் ஒன்றுக்கு ரூ.8.15 காசுகளில் இருந்து ரூ.8.55 காசுகளாக உயர்த்தப்பட்டுள்ளது. 601 முதல் 800 யூனிட் வரையிலான வீடுகளுக்கான மின் கட்டணம், யூனிட் ஒன்றுக்கு ரூ.9.20 காசுகளில் இருந்து ரூ.9.65 காசுகளாக உயர்த்தப்பட்டுள்ளது.
தனியார் கல்வி நிறுவனங்களுக்கான மின் கட்டணம் ஒரு கிலோவாட்டுக்கு ரூ.7.65 காசுகளில் இருந்து ரூ.8 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. அரசு கல்வி நிறுவனம், மருத்துவமனைகளுக்கான மின் கட்டணம் ரூ.7.15 காசுகளில் இருந்து ரூ.7.50 காசுகளாக உயர்த்தப்பட்டுள்ளது.
கட்டுமானப் பணிகளுக்கான மின்சார கட்டணம் ஒரு கிலோவாட்டுக்கு ரூ.12.25 காசுகளில் இருந்து ரூ.12.85 காசுகளாக உயர்த்தப்பட்டுள்ளது
கடந்த 2022 செப்டம்பர் மாதம் மின் கட்டணம் 30 சதவீதத்துக்கு மேல் உயர்த்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து, கடந்த 2023 ஜூலை மாதம் 2.18 சதவீதம் மின் கட்டணம் உயர்த்தப்பட்டது. தற்போது 4.83 சதவீத அளவில் மின் கட்டணத்தை தமிழக அரசு மீண்டும் உயர்த்தியுள்ளது மக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
மின்கட்டணம் உயர்வை கண்டித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மற்றும் கோவை பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை எக்ஸ் பதிவில்,
மத்திய அரசின் Revamped Distribution Sector Scheme (RDSS) திட்டத்தில் நிதி பெறவே மின் கட்டணத்தை உயர்த்தியுள்ளோம் என்று இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு சொன்ன அதே பொய்யை மீண்டும் சொல்கிறது திமுக அரசு.
இது தொடர்பாக 2022ஆம் ஆண்டு ஜூலை மாதம் பத்திரிகையாளர்களைச் சந்தித்து திமுகவின் திசைதிருப்பும் முயற்சியைத் தமிழக மக்களிடம் எடுத்துரைத்தோம்.
கடந்த இரண்டு ஆண்டுகளில் திமுக என்ன செய்துள்ளது என்பதைப் பார்ப்போம்.
பொருத்தப்படவேண்டிய ஸ்மார்ட் மீட்டர், DT மீட்டர், Feeder மீட்டர்களின் எண்ணிக்கை: 3,06,82,343 (மத்திய அரசு ஒப்புதல் வழங்கிய எண்ணிக்கை)
பொருத்தப்பட்ட மீட்டர்களின் எண்ணிக்கை: 1,30,861 (4%)
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான நிறுவனம் தனியாரிடம் செய்த மின் கொள்முதல் மதிப்பு.
2021-22: 39,365 கோடி ரூபாய்
2022-23: 50,990 கோடி ரூபாய்
2023-24: 65,000 கோடி ரூபாய்
கடந்த மூன்று ஆண்டுகளில் திமுக அரசு செய்த தனியார் மின் கொள்முதல் மதிப்பு: 1,55,355 கோடி ரூபாய்.
RDSS திட்டத்தின் கீழ் கடந்த இரண்டு ஆண்டுகளில் மேற்கொள்ளவேண்டிய எந்த பணிகளையும் திமுக செய்யவில்லை, மாறாக மின் கட்டணத்தை மட்டும் உயர்த்தியுள்ளது.
கடந்த இரண்டு ஆண்டுகளில் நடந்த ஒரே மாற்றம், நலிவடைந்த BGR நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட ஒப்பந்தம் திமுக அரசால் புதுப்பிக்கப்பட்டு மீண்டும் ரத்து செய்யப்பட்டது மட்டுமே. இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
கோவை பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் அறிக்கையில்,
வாக்களித்த மக்களுக்கு திமுக அளித்துள்ள பரிசு 6000 கோடி ரூபாய் மின் கட்டண உயர்வு. மக்களைப் பாதிக்கும் மின் கட்டண உயர்வை உடனடியாக கைவிட வேண்டும். தமிழ்நாட்டில் வீடுகள், வணிக நிறுவனங்களுக்கான மின் கட்டணத்தை 4.83 சதவீதம் திமுக அரசு உயர்த்தியுள்ளது. இதனால் மின் வாரியத்திற்கு ஆண்டுக்கு 6,000 கோடி ரூபாய் கோடி கூடுதல் வருவாய் கிடைக்கும்.
நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் புதுச்சேரி உட்பட 40 தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றி பெற்றது. விக்கிரவாண்டி சட்டப்பேரவை இடைத்தேர்தலிலும் திமுகவே வெற்றி பெற்றுள்ளது. மக்கள் அளித்த இந்த வெற்றிக்கு, திமுக அளித்துள்ள பரிசு தான் இந்த 6,000 கோடி ரூபாய் மின் கட்டண உயர்வு.
தமிழகத்தில் ஏற்கனவே அரிசி, பருப்பு, மளிகை பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. மின் கட்டணம் அதிகரித்ததால் அரிசி விலையை உயர்த்த வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டதாக அரிசி ஆலை உரிமையாளர்கள் ஏற்கனவே கூறி வருகின்றனர்.
இந்நிலையில் மீண்டும் மின் கட்டணம் உயர்ந்துள்ளதால் அரிசி விலை மேலும் உயரும் நிலை ஏற்பட்டுள்ளது.
பெட்ரோல், டீசலுக்கான மாநில அரசு வரியை, திமுக அரசு குறைக்காததால், மற்ற மாநிலங்களோடு ஒப்பிடும் போது, தமிழ்நாட்டில் பெட்ரோல் டீசல் விலை அதிகமாக உள்ளது. இப்போது மின் கட்டணமும் உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் விலைவாசி கடுமையாக உயர்ந்து, சாதாரண ஏழை, நடுத்தர மக்களுக்கு சுமை அதிகரிக்கும். மக்களைப் பற்றி கொஞ்சமும் கவலைப்படாமல் மின் கட்டணத்தை உயர்த்தியுள்ள திமுக அரசுக்கு எனது கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன். மக்களை பாதிக்கும் மின் கட்டண உயர்வை உடனடியாக திமுக அரசு திரும்ப பெற வேண்டும். இல்லையெனில் மக்களின் கடும் கோபத்துக்கு ஆளாக நேரிடும். இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.