அண்மையாகவே அடிக்கடி அரசு பேருந்துகள் பழுதுபட்டு சாலையில் விபத்துக்குள்ளாகும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இந்த நிலையில் நாமக்கல் மாவட்டம் பேருந்து நிலையத்தில் இருந்து குமாரபாளையம் நோக்கி அரசு பேருந்து ஒன்று பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்றது. அப்போது பேருந்தின் முன் பக்கத்தில் இருந்து சக்கரம் ஒன்று கழன்று தனியாக சென்று கீழே விழுந்தது. பேருந்து ஓட்டுநர் ராஜா மிகவும் சாமர்த்தியமாக பேருந்தை நிறுத்தி பெரும் அசம்பாவிதத்தை தடுத்தார். இதுதொடர்பான சிசிடிசி காணொளி இணையதளங்களில் வைரலாகி வருகிறது.
கடந்த ஜூன் மாதம் 3 ஆம் தேதி திண்டுக்கல் மாவட்டம் பழனியிலிருந்து தீர்த்தாகவுண்டன் வலசுக்கு சென்ற அரசு பேருந்தின் இடதுபுற முன்சக்கரம் கழன்று சென்று சாக்கடையில் விழுந்தது. ஓட்டுநர் பேருந்தை தன் கட்டுப்பாட்டில் கொண்டு வந்து சாலையோரம் நிறுத்தியதால் உயிர்சேதம் தவிர்க்கப்பட்டது.
இதேபோல் கடந்த மே மாதம் இதே போன்று ராஜபாளையத்தில் இருந்து ராமேஸ்வரத்திற்கு அரசு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்து ராமநாதபுரத்தை அடுத்துள்ள லாந்தை என்ற இடத்தில் சென்று கொண்டிருந்த போது திடீரென பேருந்தின் முகப்பு கண்ணாடி தானாக உடைந்து நொறுங்கியது. இதன் கண்ணாடி துகள்கள் ஓட்டுநர் தினகரனின் முகத்தில் குத்தியதில் அவர் ரத்த காயம் அடைந்தார். மேலும் பேருந்தில் பயணித்த இரு பெண்களும் இந்த அதிர்ச்சியினால் மயக்கம் அடைந்தனர். இதையடுத்து பேருந்து நிறுத்தப்பட்டு காயமடைந்த ஓட்டுநர் மற்றும் பயணிகள் இருவர் மாற்று பேருந்தில் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மற்ற பயணிகள் நீண்ட நேர காத்திருப்பிற்கு பின் மாற்று பேருந்துகளில் அனுப்பி வைக்கப்பட்டனர்.
சென்னையில் பல பயணிகளோடு ஓடுகின்ற அரசு பேருந்து ஒன்று நட்ட நடு சாலையில் தீ பிடித்து எரிகின்றது, ஓடுகின்ற அரசு பேருந்தின் படிக்கட்டு சாலையில் விழுகின்றது, ஓடிக்கொண்டிருக்கின்ற அரசு பேருந்தில் திடீர் ஓட்டை விழுந்து பயணிகள் கீழே விழுகின்றனர், ஓடுகின்ற பேருந்தின் சக்கரம் கழன்று விழுகின்றது, ஓடுகின்ற பேருந்தில் மழை நீர் ஒழுகி கொண்டிருக்கிறது, ஓடுகின்ற பேருந்தின் ஸ்டியரிங் (திசை மாற்றி) கையோடு வெளிவருகிறது என பல்வேறு குறைபாடுகளை கொண்ட அரசு போக்குவரத்து கழகத்தை சீர் செய்ய முடியாத அரசு, தனியார் பேருந்துகளை கட்டுப்படுத்த பல்வேறு யுத்திகளை கையாள்கிறது என்பது வேடிக்கை அல்ல குரூர புத்தி என்று பாஜக மாநில துணை தலைவர் திமுக அரசை விமர்சித்து இருந்தது குறிப்பிடத்தக்கது. தொடரும் அரசு பேருந்துகளின் விபத்துகளினால் பயணிகளும் அச்சத்துடனேயே பயணிக்கும் நிலை உள்ளது.