திருவாரூர் மாவட்டத்தில் அமைந்துள்ள திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைதான் நாகை, திருவாரூர், மயிலாடுதுறை ஆகிய மூன்று மாவட்டங்களுக்கும் முக்கியமான பொது மருத்துவக் கல்லூரி மருத்துவமனையாக விளங்கி வருகிறது. இந்த மருத்துவமனையில் நாள் ஒன்றுக்கு ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வந்து சிகிச்சை பெற்றுச் செல்கின்றனர். அதேபோல் 500-க்கும் மேற்பட்டோர் உள் நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில், மருத்துவமனை மற்றும் மருத்துவமனை வளாகம் உள்ளிட்ட பகுதிகளில் அதிகமான நாய்கள் சுற்றித் திரிகின்றன. மருத்துவக் கல்லூரி விடுதிகளிலும் சுற்றித் திரியும் நாய்களால் மாணவர்கள் அச்சமடைந்துள்ளனர். மருத்துவமனையில் நோயாளிகளும் நோயாளிகளை பார்க்க வரும் பொதுமக்களும் பெரும் அச்சத்திற்கு ஆளாகியுள்ளனர்.
இதில் இன்று அதிகாலையில் காய்ச்சல் சிறப்பு பிரிவு தளத்தில், நோயாளிகள் படுக்கும் படுக்கையில் நாய்கள் வந்து படுத்துள்ளன. இதனால் நோயாளிகள் அச்சமடைந்தனர். இதையடுத்து மருத்துவமனை வளாகத்தில் சுற்றித் திரியும் நாய்களை விரைந்து அப்புறப்படுத்த மருத்துவமனை நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.