மும்பையில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கிக் கிளையில், சுமார் 14 ஆயிரம் கோடி ரூபாய் மோசடி செய்து, பிரபல வைர வியாபாரி நிரவ் மோடி, அவரது உறவினர் மெகுல் சோக்சி ஆகியோர் வெளிநாடுகளுக்கு தப்பி ஓடினர் என்பது அனைவரும் அறிந்ததே.
லண்டனில் தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்து வந்த நிரவ் மோடி மீது இந்திய அரசு வழக்கு தொடர்ந்தது. இதனை அடுத்து தற்பொழுது நிரவ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். வெகு விரைவில் அவர் இந்தியாவிற்கு நாடு கடத்தப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
நிரவ் மோடியின் உறவினர் மெகுல் சோக்சி, கரீபியன் பகுதியில் உள்ள ஆண்டிகுவா நாட்டுக்கு தப்பி ஓடினார். அங்கிருந்து அவரை இந்தியா கொண்டு வர மத்திய அரசு தீவிர முயற்சி மேற்கொண்ட நிலையில். அவர் கியூபாவுக்கு தப்பிச் செல்ல முயன்றார். அவ்வேளையில் மெகுல் சோக்சியை டொமினிக்கா போலீசார் கைது செய்தனர்.
இதனை அடுத்து டொமினிக்கா நாட்டு உயர்நீதிமன்றத்தில் ஜாமின் கேட்டு மெகுல் சோக்சி தரப்பு மனு தாக்கல் செய்தது. இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், மெகுல் சோக்சியின் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. வெகு விரைவில் மெகுல் இந்தியா கொண்டு வர வாய்ப்பு உள்ளது என்று எதிர்பார்க்கப்படுகிறது.