காந்திஜியின் வேண்டுகோளை ஏற்று தன்னுடைய கிராமத்தை முன்னேற்றிய Dr. துரைகண்ணு

காந்திஜியின் வேண்டுகோளை ஏற்று தன்னுடைய கிராமத்தை முன்னேற்றிய Dr. துரைகண்ணு

Share it if you like it

தியாகி. டாக்டர் துரைக்கண்ணு:
(தோற்றம்: 17.12.1906 – மறைவு:  22.10.1985)

சென்னை மண்ணடியில், 1906 ஆம் ஆண்டு, டிசம்பர் திங்கள் 17 அன்று, துரைகண்ணு பிறந்தார்.

பெற்றோர் – திரு. முனுசாமி பிள்ளை, திருமதி. அகிலாண்டாம்மாள்

தந்தை, சென்னை தோல் கம்பெனியில், குமாஸ்தாவாக (கணக்கு பிள்ளை) வேலை செய்து வந்தார். வீட்டுக்கு ஒரே பிள்ளை என்பதால், செல்லத்துடனும், செல்வாக்குடனும் வளர்ந்து வந்தார்.

படிப்பும் – பட்டமும்:

சென்னையில், SSLC தேர்ச்சி பெற்றார். பள்ளியில் படிக்கும் போதே, மனம் சித்த வைத்தியத்தில், நாட்டம் கொண்டது. சென்னை பிடாரி கோயில் தெருவில் இருந்த, உயர்திரு. சரஸ்வதி சண்முக சாமியிடம், முறைப்படி சித்த வைத்தியம் கற்றார். பிறகு, ஆயுர் வேதம் மற்றும் யுனானி மருத்துவத்திலும், R.M.P. பட்டம் பெற்றார்.

1924ல், சென்னையில் நடைபெற்ற சித்த வைத்திய மாநாட்டில் கலந்து கொண்டு, உயர் மூலிகையில் மருந்துகள் தயாரித்து, தன் திறமையை வெளிக் காட்டினார். அங்கு இவருக்கு, நற்சான்று பத்திரமும், தங்கப் பதக்கமும் வெகுமதியாக கொடுக்கப் பட்டது. பின், ஆசிரியர் பயிற்சியில் சேர்ந்து, தேர்ச்சி பெற்று, ஆசிரியர் ஆனார்.

தேச பக்தியும் – சுதந்திர போராட்டமும்:

தேசத்தில் எழுச்சி பெற்றிருந்த விடுதலை வேட்கையில், தன்னையும் இணைத்துக் கொண்டு, சுதந்திர போராட்டத்தில் அண்ணல் காந்தியின் பாதையில், நடக்கத் தொடங்கினார். பல போராட்டங்களிலும், கலந்துக் கொண்டார்.

கிராம சேவையும் – பள்ளி ஆசிரியப் பணியும்:

1931-ல், நாடெங்கும் சுதந்திரக் கிளர்ச்சி தோன்றிய காலத்தில், காந்தியடிகள் கிராம முன்னேற்றத்தையும், அதன் முக்கியத்துவம் பற்றியும், ஓர் அறிக்கை விட்டிருந்தார்.

பெருமக்கள் மற்றும் நண்பர்களுடன் சேர்ந்து, தனியார் நிர்வாக பள்ளியை (மேனேஜ்மெண்ட் பள்ளி) ஆரம்பித்து, மாணவர்களுக்கு கல்வி புகட்டி, நல்ல ஆசிரியராக பணியாற்றினார். பிள்ளைகளுக்கு இரவு, பகல் பாராமல் கல்வியை ஊக்கத்துடன் கற்றுக் கொடுத்து, பலரின் பாராட்டும் பெற்றார்.

திருமணம்:

துரைக்கண்ணு அவர்களுக்கும், சென்னை தனவந்தர் திரு . மாசிலாமணிப் பிள்னை – திருமதி. பார்வதி அம்மாள் அவர்களின் குமாரி கிருஷ்ணவேணிக்கும், 1936 ஆம் ஆண்டு, தேசபக்தர் ரங்கையா நாயுடு, தமிழ்த் தென்றல் திரு. வி. கல்யாண சுந்தரனார் தலைமையில், திருமணம் சிறப்பாக நடந்தது. கணவரின் நோக்கமறிந்து நடந்து, நல்ல மனைவியாகவும், இக்கிராம மக்களுக்கு நற்சேவகியாகவும் இருந்து, வாழ்ந்து வந்தார்.

ஏற்றத் தாழ்வு ஏதுமின்றி, தாய் உள்ளத்துடன், இருப்பதைக் கொண்டு, அனைவருக்கும் பகிர்ந்து அளித்து, பசியைப் போக்குவார். நல்ல மனைவியாகவும், தனது குழந்தைகளுக்கு பாசமிகு தாயாகவும், ஊர் மக்களுக்கு நல்ல சமூக சேவகியாகவும், மாதர் சங்கத்தை அமைத்து, அதன் தலைவியாகவும் இருந்து வந்தார். இவர், இந்த ஊருக்கு வந்த பின், இலவச பிரசவம், குழந்தை நலம், பெண்களின் நலத்தில் அக்கறைக் கொண்டு, அவர்களின் முன்னேற்றத்திற்காக பாடுபட்டார்.

வகித்த உயர் பதவிகள்:

1937-ல் சட்டமன்ற வேட்பாளராக, மக்களால் அறிமுகப்படுத்தப் பட்டு, காங்கிரஸ் சட்ட மன்ற உறுப்பினராக முதன் முதலில் வெற்றி பெற்று, சென்னை மாகாண சட்டசபைக்கு சென்றார். அது முதல், சுமார் 25 ஆண்டுகள், தொடர்ந்து காங்கிரஸ் சார்பாக தேர்ந்தெடுக்கப் பட்டு, சட்டமன்ற உறுப்பினராக, சீரிய முறையில் பணியாற்றி, தானாக 1962-ல் விலகிக் கொண்டார். இக்கால கட்டத்தில், திருப்பதி தேவஸ்தான அறங்காவலராக 15 ஆண்டுகள், திருத்தணி தேவஸ்தான அறங்காவலராக 15 ஆண்டுகள் என, தன் பணிகளை செய்து வந்தார்.

ஆலயப் பிரவேசம்:

1948-ஆம் ஆண்டு, அரக்கோணத்தை அடுத்த திருவாலங்காடு அருள்மிகு வடாரண்யேஸ்வரர் சமேதவண்டார் குழலி அம்மன் ஆலயத்தில், சட்டசபை சபாநாயகர் சிவசண்முக பிள்ளை தலைமையில், ஐயா துரைக்கண்ணு, பட்டியலின மக்களுடன் இணைந்து, “ஆலயப் பிரவேசம்” எனும் புரட்சிகரமான செயலை நடத்தினார். அக்காலத்தில், பட்டியலின மக்களுக்கு, ஆலயத்தில் நுழைய அனுமதி இல்லை. அதைத் தகர்த்து, பட்டியலின மக்களும் ஆலய தரிசனம் செய்து, ஆண்டவனை தரிசித்து பூரிப்படைய ச் செய்தார்.

பூமிதான இயக்கத்தில் அவர் பங்களிப்பு:

காந்தியடிகளின் முதன் சீடராகிய வினோபாபா – வால் தொடங்கப்பட்ட இயக்கம், “பூமிதான இயக்கம்”, இது 1951-ல் தொடங்கப்பட்டது. 1956-ல் வினோபா பாவே, திருத்தணி முதல் கன்னியாகுமரி வரை, யாத்தியை மேற்கொண்டார். அவர் பால், பற்றுக் கொண்டு, தொண்டு உள்ளத்துடன் அதில் பங்கேற்று, அதற்காக அயராது உழைத்தார். தன் பங்களிப்பாக, சுதந்திர போராட்ட வீரர்களுக்கு, அரசு தந்த நிலத்தில், தன் பங்கை இவ்வியக்கத்துக்கு, தானமாக அளித்தார்.

சிறையும், கடுங்காவல் தண்டனையும்:

நண்பர்களுடன் பல போராட்டங்களில் தலைமையேற்று, சுதந்திர வேட்கையை அனைவரிடத்திலும் தோன்றச் செய்தார். ஒரு கட்டத்தில், போராட்டம் கட்டுங் கடங்காமல் போகவே, தடியடி, பூட்ஸ் காலால் மிதியும் வாங்கிக் கொண்டு, கட்டிய மனைவியையும், தொட்டில் பிள்ளையையும் விட்டு, கைதாகி சிறைக்குச் சென்றார். சில தினங்களில் விடுவிக்கப் பட்டார். 1940 ஆம் ஆண்டு, காந்தி அடிகளால் ஆரம்பிக்கப்பட்ட, தனி நபர் சத்தியாகிரகத்தில் கலந்து கொண்டு, திருத்தணியில் கைது செய்யப்பட்டு, வேலூர் – திருச்சி சிறைக்கு அனுப்பப்பட்டு, 6 ஆண்டு காலம் கடுங்காவல் தண்டனை பெற்றார். இவர் சிறையில் இருந்த போது, இராஜாஜி, ஆந்திர கேசரி , பிரகாசம், களா வெங்கட்ராவ், சித்தூர் வரதாச்சாரி, கிரி, சஞ்சீவி ரெட்டி, பெருந்தலைவர் காமராஜர் போன்ற தலைவர்கள் சிறையில் இருந்தனர். இத் தலைவர்களுக்கு உணவு பரிமாறும் பணி, இவருக்கு கிடைத்தது. (ஐயா துரைக்கண்ணு அதை தன் பாக்கியமாக எண்ணி, சுறுசுறுப்பாய் பணியாற்றி, தலைவர்களிடம் அன்பையும் நற்பெயரையும் பெற்றார்).

கௌரவ வைத்தியம்:

தேர்தலில் நிற்காமல் ஒதுங்கிய பின்னும், அறங்காவலர் பதவி நிறைவடைந்த பின்னும், திருத்தணி தேவஸ்தானம் இவர் தொண்டையும், தொடர்பையும் விட மனமில்லாமல், அரசு ஆணை வரும் முன்பே, இக்கோயிலில் சித்த வைத்தியசாலை அமைத்து, அதில் இவரை கௌரவ வைத்தியராக்கி, அழகு பார்த்தது. அவர் அதை ஏற்று, திருத்தணிக்கும் – திருவாலங்காட்டும் சென்று வைத்தியம் செய்து, மக்களுக்கு தொண்டாற்றினார்.

மறைவு:

தனக்கென்று வாழாமல், பிறர்க்கென வாழ்ந்த உத்தமர், 22.10.1985 ஆம் ஆண்டு, அன்னை பாரத்தாயின் பாதமலர் அடைந்தார். அன்று அவர் ஆரம்பித்த கல்விக்கூடம், (1931ல்) 1 முதல் 5 வரை ஆரம்பப் பள்ளியாகவும், பின் அவரது முழு முயற்சியினால், 8 ஆம் வகுப்பு வரை நடுநிலைப் பள்ளியாகவும், பின் அரும்பாடு பட்டு, இன்று அரசு உயர்நிலைப் பள்ளியாக, உயர்ந்து நிற்கிறது. பாரத தேசம் பாரினில் உயரவும், அன்று அவர் சிந்திய கண்ணீரும், தியாகமும் வீண் போகாமல் இருக்க, பெற்ற சுதந்திரத்தைப் பேணிக் காப்போம்.

  • பாபு நாராயணசாமி

Share it if you like it

One thought on “காந்திஜியின் வேண்டுகோளை ஏற்று தன்னுடைய கிராமத்தை முன்னேற்றிய Dr. துரைகண்ணு

  1. Perseverance and strenuous efforts taken by the writer to bring out the life history of a legend and freedom fighter DR DURAIKANNU is richly deserves appreciation and accolade.
    I here with convey my heartfelt thanks to freedom75 to propagate the life history of a freedom fighter thro social media.Once again thanks a lot.

Comments are closed.