பாரதிய ஜன சங்கத்தின் நிறுவனரான ஷியாமா பிரசாத் முகர்ஜியின் பிறந்த தினத்தை முன்னிட்டு, பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் இன்று அஞ்சலி செலுத்தினர்.
பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில், “தனது வலிமையான தேசியவாத சிந்தனைகளால் இந்தியாவை பெருமைப்படுத்திய டாக்டர் ஷியாமா பிரசாத் முகர்ஜிக்கு அவரது பிறந்தநாளில் மரியாதைக்குரிய அஞ்சலி. தாய்நாட்டுக்கான அவரது அர்ப்பணிப்பும், தியாகமும் நாட்டு மக்களுக்கு எப்போதும் உத்வேகம் அளிக்கும்” என தெரிவித்துள்ளார்.
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வெளியிட்டுள்ள பதிவில், “சிறந்த தேசியவாத சிந்தனையாளர் டாக்டர் ஷ்யாமா பிரசாத் முகர்ஜியின் பிறந்தநாளில் அவரை நினைவு கூர்ந்து அவருக்கு அஞ்சலி செலுத்துகிறேன். வங்கத்தை நாட்டின் ஒரு அங்கமாக வைத்திருப்பதற்கான அவரது போராட்டமாக இருந்தாலும் சரி, ஜம்மு-காஷ்மீரை இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியாக வைத்திருக்க வேண்டும் என்ற உறுதிப்பாட்டுக்காக உச்சபட்ச தியாகம் செய்வதாக இருந்தாலும் சரி, நாட்டின் ஒற்றுமைக்காகவும் ஒருமைப்பாட்டுக்காகவும் போராடுவது பற்றி பேசப்படும் போதெல்லாம் டாக்டர் முகர்ஜி நிச்சயமாக நினைவுகூரப்படுவார்.
இதுதொடர்பாக தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி குறிப்பிருப்பதாவது :- பாரத தாயின் சிறந்த புதல்வரான டாக்டர் ஷியாமா பிரசாத் முகர்ஜியின் பிறந்தநாளில் அவருக்கு இதயபூர்வ பணிவான மரியாதையை செலுத்துகிறோம். தலைசிறந்த தலைவர், தொலைநோக்கு மிக்க தேசியவாத சிந்தனையாளர், சிறந்த கல்வியாளர் மற்றும் நவீன இந்தியாவை கட்டமைக்கவும் வலிமையான, திறமையான மற்றும் ஒன்றுபட்ட தேசத்திற்காக தனது இன்னுயிரை கொடுத்த முக்கிய தலைவர்களில் ஒருவர் அவர். அவரது கனவான சுயசார்புபாரதத்தை வலிமையான, தன்னம்பிக்கை நிறைந்ததாக கட்டியெழுப்ப அவர் விட்டுச்சென்ற மரபு நமக்கு என்றென்றைக்கும் வழிகாட்டும் சக்தியாக இருக்கும்.