திராவிடமா.? தேசியமா.?
பலரும், “தான் ஒரு தேசியவாதி” என சொல்வதும், திராவிட சித்தாந்தத்தை நேசிப்பவர்கள், “தான் ஒரு திராவிடன்” என சொல்வதும், வழக்கமாகி வருகிறது. நாம் உண்மையில் யார்? திராவிடத்தைச் சேர்ந்தவர்களா? தேசியம் பக்கமா? என சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
நமது நாட்டிற்கு சுதந்திரம் பெற பாடுபட்ட அனைவருமே, ஒட்டு மொத்த தேசத்திற்கும் சேர்த்து தான், விடுதலைக்காகப் போராடினார்கள். எந்த சூழ்நிலையிலும், ஒரு மாநிலத்திற்கு மட்டும், அவர்கள் யாவரும், விடுதலைக்காகப் போராடவில்லை. அவர்கள் வழியில் வந்த நாமும், நம்முடைய சிந்தனையும், “மக்கள் நாம் அனைவரும் ஓன்றே” என இருக்க வேண்டும்.
திராவிடமா? :
திராவிட சித்தாந்தவாதி என போற்றிப் புகழப் படும் ஈ.வே. ராமசாமி அவர்கள், நமது நாடு விடுதலை அடைந்த 1947 ஆம் ஆண்டு, ஆகஸ்ட் 15 ஆம் நாளை, “கறுப்பு தினம்” என, தனது பத்திரிக்கையின் அட்டைப் படத்தில், வெளியிட்டார்.
நமது நாட்டில் பெரும்பான்மையான மக்களால் விரும்பி வணங்கப் படும், ஸ்ரீ இராம பிரானை இழிவு படுத்தும் வகையில், காலணியால் அடித்தது, விநாயகர் சிலையை உடைத்தது என இந்து மதங்களின் மனதை மட்டுமே புண்படுத்துவதை, குறிக்கோளாக வைத்து இருந்தனர், திராவிடர் கழகத்தினர்.
தற்போதும் கூட, மற்ற மதப் பண்டிகைகளுக்கு வாழ்த்து சொல்லும் தமிழக முதல்வர் அவர்கள், இந்து மக்களால் விரும்பி கொண்டாடப் படும் தீபாவளிக்கோ அல்லது விநாயகர் சதுர்த்திக்கோ, வாழ்த்து சொல்வது இல்லை.
2014 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இருபத்தி ஒன்பதாம் தேதி, விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து தெரிவித்த செய்தி, ஸ்டாலின் அவர்களின் முகநூல் (Facebook) பக்கத்தில் வெளியிடப் பட்டது.
உடனே அந்த வாழ்த்து செய்தி திரும்பப் பெறப் பட்டது. தனது அட்மின் செய்த தவறு எனவும், தனது தரப்பில் இருந்து விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து தெரிவிக்கப் படவில்லை எனவும், அதற்கு ஒரு புதிய விளக்கமும், ஸ்டாலின் தரப்பில் அளிக்கப் பட்டது. இந்து மக்களுக்கு வாழ்த்துச் செய்தியைக் கூட தெரிவிக்க விரும்பாத சித்தாந்தமே, திராவிட சித்தாந்தம் என பலரும் விமர்சனம் செய்தனர்.
பட்டியலின மக்களின் பாதுகாவலர் என சொல்லிக் கொள்பவர்கள் ஆளும் தமிழகத்தில், இதுவரை திராவிட ஆட்சியில், ஒரு பட்டியல் இனத்தவர் கூட தமிழக முதல்வர் ஆகவில்லை.
தமிழகத்தை இந்தியாவில் இருந்து பிரிக்க வேண்டும் என திராவிட கழகத்தைச் சேர்ந்தவர்கள் கோரிக்கை வைத்தது, அவர்களது கடந்த கால வரலாறு. பிரிவினைவாதம் பேசுவதன் மூலமாக, அந்நிய சக்திகளுக்கு அது உற்சாகத்தைத் தருகின்றது. அதே வேளையில், நமது தேச பாதுகாப்பிற்கு, அது மிகுந்த ஆபத்தை விளைவிக்கும்.
திராவிடக் குடும்பம் என அழைக்கப் படும் கன்னடம் மொழி பேசும் கர்நாடகவைச் சேர்ந்தவர்களோ அல்லது தெலுங்கு மொழிப் பேசும் ஆந்திரா, தெலுங்கானாவைச் சேர்ந்தவர்களோ அல்லது மலையாளம் மொழி பேசும் கேரளாவைச் சேர்ந்தவர்களோ, தங்களை “திராவிடர்கள்” என அடையாளப் படுத்திக் கொள்வது இல்லை. தமிழகத்தில் மட்டுமே சிலர், தங்களை “திராவிடர்” என அடையாளப் படுத்திக் கொள்கின்றனர்.
மக்கள் நாம் ஓன்றே :
கேரளாவில் உள்ள காலடியில் பிறந்த ஸ்ரீ ஆதிசங்கரர் காஷ்மீர் வரை நடந்தே சென்று உள்ளார். தமிழகத்தைச் சேர்ந்த ஸ்ரீ ராமானுஜர், நடந்தே ரிஷிகேஷ் வரை சென்று உள்ளார். பல பகுதிகளைத் தாண்டி, எல்லைகளைத் தாண்டி, தெற்கில் இருந்து வடக்கிற்கு ஒருவர் செல்கிறார் என்றால், அவருக்கு எந்த அளவு, நமது தேசத்தின் மீது பற்று இருக்க வேண்டும் என்பதை நாம் உணர்ந்து பார்க்க வேண்டும்.
தமிழகத்தில் பிறந்த குமரகுருபரர், காசி வரை சென்று, அங்கே ஓரு மடத்தை நிறுவி உள்ளார். காரைக்கால் அம்மையார், இங்கு இருந்து கிளம்பி, கைலாசம் வரை சென்று, சிவனை தரிசித்தார்.
பகவான் ஸ்ரீ விஷ்ணு எடுத்த பத்து அவதாரங்கள் “தசாவதாரம்” என அழைக்கப் படுகிறது. அதில் முதன்மையான அவதாரம், “மச்சாவதாரம்”, அது நிகழ்ந்த இடம் மதுரை. அங்கு இருந்த “கிருதமால் நதி” என்ற இடத்தில் இருந்தே மச்சாவதாரம் உருவானதாக, விஷ்ணு புராணம் கூறுகின்றது.
நமது நாட்டில் உள்ள அனைத்து இடங்களிலும், இந்திய மக்கள் ஸ்ரீ ராமரை தெய்வமாக வழிபடுகின்றனர். நமது நாட்டில் எந்த மாநிலங்களுக்கு சென்றாலும், ஏதாவதொரு இடம், ஸ்ரீ ராமபிரானின் வாழ்க்கை சம்பவத்தோடு தொடர்பு உடையதாக இருக்கும்.
உலகிலேயே மிகவும் பிரசித்தி பெற்ற, பீகாரில் உள்ள நாளந்தா பல்கலைக்கழகத்தின் துணை வேந்தராக தமிழகத்தைச் சேர்ந்தவர் இருந்தார்.
கங்கை நதியையும், காசி விஸ்வநாதரையும் தரிசனம் செய்ய, தமிழகத்தில் இருந்து நிறைய பக்தர்கள், வட மாநிலத்திற்கு செல்கிறார்கள். அது போலவே, தமிழ் நாட்டின் கடைக்கோடியில் இருக்கும் ராமேஸ்வரத்திற்கு, மற்ற எல்லா மாநிலங்களில் இருந்தும், நிறைய பக்தர்கள் வருகை புரிந்து தரிசனம் செய்து வருகின்றார்கள். “ராம்” என்ற பெயர், நமது நாட்டில் உள்ள எந்த ஓரு பகுதிக்குச் சென்றாலும், யாருக்கேனும் அந்தப் பெயர் இருக்கும்.
எதற்கு இந்த பகைமை உணர்வு :
ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு வகையான சித்தாந்தங்கள் பிடித்தமானதாக இருக்கலாம். தன்னுடைய சித்தாந்தத்தை உயர்த்திப் பிடிக்க, மற்றொரு சிந்தாந்தத்தை தாழ்த்திப் பிடிப்பது என்பது, மிகவும் தவறான விஷயம்.
தனக்கு ஓரு மொழி பிடிக்கும் என்பதற்காக, மற்ற மொழிகளை தாழ்த்திப் பேசுவது என்பது, மிகவும் தவறான செயல். நமது பாரத பிரதமர் மோடி அவர்களின் தாய் மொழி குஜராத்தியாக இருந்தாலும், அவர் செல்லும் எல்லா இடங்களிலும், தமிழின் பெருமைகளில் ஒன்றான திருக்குறளையும், பாரதியார் போன்ற பல தமிழ் அறிஞர்களின் பாடல்களையும், பல சந்தர்ப்பங்களில், பல மேடைகளில் எடுத்து உரைத்து வருகின்றார்.
பெண்களின் முன்னேற்றத்தில் மிகவும் அக்கறை கொண்ட மத்திய அரசு, கழிவறையை கட்டிக் கொடுத்தும், சமையல் எரிவாயு வழங்கியும் என பல உதவி திட்டங்கள் மூலம், ஓவ்வொருவரையும் சொந்த காலில் நிற்க வைக்க முயற்சி செய்கிறது.
நமது நாட்டில் உள்ள எல்லா நல்ல விஷயங்களும், எல்லோருக்கும் போய் சேர வேண்டும் என்ற நல்ல எண்ணத்தின் வெளிப்பாடாகவே, மக்கள் அதை காண்கிறார்கள். ஆனால், சிலர், மற்ற மொழிகளை இழிவுப் படுத்திப் பேசியும், அவதூறு செய்தும், ஓரு மொழியை தார் ஊற்றி அழிப்பதும் என தவறான செயல்களை, செய்து வருகின்றனர்.
அதே நேரத்தில், அவர்கள் தங்களது கல்வி நிறுவனங்களில், மற்ற மொழியை அனுமதித்தும், மாணவ – மாணவியர்களுக்கு கல்வி பயிற்றுவித்தும் வருகின்றனர். இது எந்த மாதிரியான நிலைப்பாடு என்பது, புரியாத புதிராகவே உள்ளது.
இந்துக்கள் தினமும் வழிபடும் சிலை வழிபாட்டைக் கடுமையாக எதிர்த்த திராவிட சித்தாந்தத்தைச் சேர்ந்தவர்கள், தற்போது தங்களது பிடித்தமானத் தலைவர்களுக்கு, ஆள் உயர சிலையை வைத்து, போற்றி வணங்கி வருவது, பார்ப்பதற்கே வேடிக்கையாக உள்ளது. ஒரு இந்து, தனக்கு பிடித்த இறைவன் சிலையை வைத்து வணங்குவதை கேலியும், கிண்டலும் செய்தவர்கள், தற்போது தங்களது பிடித்தமான தலைவர்களுக்கு சிலை வைத்து வணங்கி வருவது ஏன்? என்பது இன்னும் புரியாத புதிராகவே உள்ளது.
நமது நாட்டின் எல்லைகளில், ராணுவ வீரர்கள் தங்களது உயிரை பணயம் வைத்து, நமது நாட்டைக் காத்துக் கொண்டு வருகின்றார்கள். ஒவ்வொரு சுதந்திரப் போராட்ட வீரர்களும், எண்ணற்ற தியாகங்களை செய்து, நமக்கு விடுதலையை பெற்றுத் தந்து உள்ளார்கள்.
கிடைத்த சுதந்திரத்தை பேணி காப்பது, ஓவ்வொரு இந்தியரின் தலையாயக் கடமை ஆகும். பகைமை உணர்ச்சி அறவே தவிர்த்து, ஒற்றுமை உணர்வை வளர்த்து, நாம் ஒரு நல்ல இந்தியக் குடிமகனாக இருக்க வேண்டியது, நமது அனைவரின் கடமையும், காலத்தின் கட்டாயமும் ஆகும்.
ஒன்று பட்டால் உண்டு வாழ்வே – நம்மில்
ஒற்றுமை நீங்கில் அனைவருக்கும் தாழ்வே
நன்றிது தேர்ந்திடல் வேண்டும் – இந்த
ஞானம் வந்தாற் பின் நமக்கெது வேண்டும்? – பாரதியார்
- அ. ஓம் பிரகாஷ், Centre for South Indian Studies, Chennai