பொதுவாக அரசியலில் மக்களுக்கு நன்மை தரும் செயல்கள் வெற்றிகரமாக நிறைவேறும் போது ஆட்சியாளர்கள் அதை தங்களின் சாதனைகளாக அறிவித்துக் கொள்வார்கள். ஏதேனும் எதிர்பாராத சிக்கல்கள் குளறுபடிகள் நேரும் பட்சத்தில் அதை அரசு இயந்திரத்தின் தவறாகவோ அல்லது எதிர்க்கட்சிகளின் அரசியல் சதி என்றோ பேசுவதும் விமர்சனம் செய்வதும் சகஜமான விஷயம். இதில் பாரதம் போன்ற மத்திய மாநில அரசுகள் என்ற கூட்டாட்சி நிலவும் சூழலில் மத்தியிலும் மாநிலத்திலும் ஆளும் கட்சிகள் அரசியல் ரீதியாக நேர் எதிர் நிலைப்பாடுகள் எடுக்கக்கூடும். மாநிலத்தில் ஆளும் கட்சிகளும் மத்தியில் ஆளும் கட்சிகளும் கட்சிகளும் சில நேரங்களில் வெற்றிகளை தனதாகவும் தோல்விகளை இடர்பாடுகளை மத்திய மாநில அரசுகள் மீது பரஸ்பரம் குற்றச்சாட்டுகளாக முன்வைப்பது வழக்கம்.
கடந்த காலங்களில் மாநிலங்களில் ஏற்படும். புயல் பூகம்பம் வெள்ளம் உள்ளிட்ட விவகாரங்களில் கூட மத்திய அரசை ஒரு மாநிலத்தின் பேரிடரை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் மாநில அளவில் எழும். ஆனால் அதை மத்திய அரசு மறுக்கும்போது மத்திய அரசு எதிர்க்கட்சி அரசியல் செய்கிறது. பாரபட்சம் காட்டுகிறது என்று மாநில அரசுகள் குற்றம் சாட்டும் . பல நேரங்களில் மத்திய அரசுகள் தாம் வழங்கும் நிதிகள் மாநில அரசுகளால் சரிவர செலவு செய்யப்படுவதில்லை. மக்கள் நல திட்டங்கள் முழுமையாக நிறைவேற்றப்படுவதில்லை. இதில் கூட மாநில அரசுகள் மலிவான அரசியல் செய்கிறது என்ற குற்றச்சாட்டுகளும் எழுவது உண்டு. சில நேரங்களில் எதிர்க்கட்சி அரசியலுக்கு அப்பாற்பட்டு நாட்டின் நலன் மக்கள் நலன் கருதி செயல்படும் அபூர்வமான ஆட்சியாளர்களும் அரசும் கூட உண்டு.
நேர்மையான அரசியலுக்கும் மக்கள் நலன் சார்ந்த அரசு எந்திரத்திற்கும் அரை நூற்றாண்டுகள் பஞ்சமாகி போன தமிழகத்தில் மட்டும் இன்னமும் இன்னமும் மணப்பந்தல் என்றால் நாங்கள் தான் மாப்பிள்ளையாக இருக்க வேண்டும். துக்க வீடு என்றால் நாங்களே சவமாக இருக்க வேண்டும். எது எப்படியோ எங்கும் எப்போதும் எதிலும் எங்களுக்கே முதல் உரிமையும் முன்னுரிமையும் எங்களுக்கே இருக்க வேண்டும் என்னும் திராவிட அரசியல் தத்துவ அடிப்படையில் மத்திய அரசோடு எந்நேரமும் மோதல் போக்கு மக்கள் நலத்திட்டங்கள் தேசத்தின் பாதுகாப்பு விஷயங்களில் கூட ஒத்துழைக்க மறுக்கும் அலட்சியம் .இவை எல்லாம் போதாது என்று மத்திய அரசின் நலத்திட்டங்களை முழுமையாக நிறைவேற்றாமல் நிதிகளையே திருப்பி அனுப்பும் மலிவான அரசியல் கடந்து தற்போது நேரடியாக மத்திய அரசு முன்னெடுக்கும் பல நிகழ்வுகளை தாங்களே நிறைவேற்றியதாக தங்களது பெயரில் ஸ்டிக்கர் ஒட்டிக் கொள்ளும் அவல நிலைக்கு தமிழகம் வந்திருக்கிறது.
கடந்த கால ஆட்சியாளர்களின் அம்மா உணவகம் நடமாடும் மருத்துவமனை மருத்துவமனை உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்களை ஆட்சியாளர்கள் ஆட்சி மாறும்போது காட்சி மாறுவதைப் போல அடையாளங்கள் மாறும். திட்டங்களின் பெயர்கள் மாறும். சில திட்டங்களில் கூடுதலாக ஏற்ற இறக்கங்கள் இருக்கும் என்பதெல்லாம் சகஜமான விஷயம். ஆனால் முழுக்க முழுக்க மத்திய அரசு கொண்டுவரும் அதனால் மட்டுமே செயல்படுத்தக்கூடிய விஷயங்களை கூட தமிழக அரசு தானே செய்தது போல தம்பட்டம் அடித்துக் கொள்வதும் இந்தப் பொய்களை அம்பலப்படுத்த வேண்டிய ஊடகங்களை அதை முன் நின்று செய்தியாக மக்களிடம் கொண்டு போய் சேர்க்கும் வேதனையும் சமீப காலமாக அரங்கேறுகிறது. விஷயம் அறிந்த மக்களும் ஊடகவியலாளர்களும் இதை முகசுளிப்போடு கடந்து போகிறார்கள்.
குறிப்பாக கொரோனா காலத்தில் மத்திய அரசு நாடு முழுவதும் மக்களுக்கு பல மாதங்கள் நியாய விலை கடைகளின் மூலமாக உணவுப்பொருட்களை விலை இல்லாமல் வழங்கி வந்தது . ஆனால் இதை மாநில அரசுதான் வழங்கியது என்று நினைக்கும் மக்களும் இங்கு இருக்கத்தான் செய்கிறார்கள். காரணம் மாநில அரசு அது சார்ந்த கட்சியாளர்களின் விளம்பரம் அப்படி. குறிப்பாக மத்திய அரசு ரேஷனில் வழங்கும் அரிசி பங்களிப்பில் மத்திய அரசின் பங்களிப்பு 99 சதவீதம் ஒரு சதவீதம் மட்டுமே மாநில அரசின் பங்களிப்பு .ஆனால் மத்திய அரசின் இந்த பங்களிப்பு முழுவதுமாக மறைக்கப்பட்ட மாநில அரசு நியாய விலை கடைகளின் மூலம் குறைந்த விலையில் அரிசி விநியோகம் செய்வதாக ஆட்சியாளர்கள் மக்களின் வாக்கு வங்கியை தட்டிச் செல்கிறார்கள்.
பிரதம மந்திரியின் வீடு கட்டும் திட்டம் குறைந்த விலையிலான ஔஷத் மருத்துவ திட்டம். ஒவ்வொரு வீட்டிற்கும் குடிநீர் இணைப்புத் தரும் ஜல்ஜீவன் திட்டம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் நாடு முழுவதும் உள்ள ஏழை எளிய மக்கள் நேரடியாக பலன் பெற வேண்டும் என்ற ரீதியில் மத்திய அரசு செயல்படுத்துவது. ஆனால் இதில் பல்வேறு தரப்பில் இருக்கும் சாமானிய மக்களுக்கு இந்த திட்டங்கள் எல்லாம் மாநில அரசு மக்கள் நலனுக்காக செயல்படுத்தும் திட்டங்கள் என்ற அளவில் தான் இன்னமும் புரிதல் இருக்கிறது. காரணம் மாநில அரசுகளும் இங்கிருக்கும் ஊடகங்களும் இவை மத்திய அரசின் திட்டம் இவை மாநில அரசின் திட்டம் என்ற பாகுபாடு இல்லாமல் அனைத்து திட்டங்களையும் அவர்கள் சார்ந்த ஆட்சியாளர்களுக்கு ஆதரவாக அவர்களின் அவர்களுக்கு மக்களின் நம்பிக்கை அபிமானம் பெறுக செய்யும் வகையில் வாக்கு வாங்கி அரசியலுக்காக இதுபோன்ற வெற்று விளம்பரங்களை ஊடகங்களும் துணிந்து செய்கிறது . இதன் மூலம் ஊடகங்கள் அவர்களின் சார்பையும் ஆதாயத்தையும் நிலை நிறுத்திக் கொள்கிறார்கள். விவரம் அறியாத அப்பாவி மக்கள் இவை எல்லாம் மாநில அரசின் திட்டங்கள் என்று நினைத்து அந்த ஆட்சியாளர்களுக்கு ஆட்சியாளர்கள் அவர்களின் பங்களிப்பு பற்றி கேள்வி எழுப்பாமல் திருப்தியோடு கடந்து போகிறார்கள். ஆனால் தம் அனுபவிக்கும் திட்டங்கள் நேரடியாக மத்திய அரசு கொடுப்பவை. இதில் மிகவும் சொற்ப அளவில் பங்களிப்பு கொடுக்கும் மாநில அரசு இதை முழுமையாக சொந்தம் கொண்டாடுகிறது. இது அப்பட்டமான செய்தி திரிப்பு . உண்மை மறைப்பு மக்களை ஏமாற்றி குழப்பம் நயவஞ்சக அரசியல் என்பதை இங்கு யாரும் உணர்வதில்லை.