தாய்லாந்தில் இருந்து சென்னைக்கு கடத்தி வரப்பட்ட 33 கோடி மதிப்பிலான கொக்கைன் பறிமுதல் செய்யப்பட்டது.
தாய்லாந்தில் இருந்து சென்னைக்கு போதை பொருள்கள் கடத்தி வரப்படுவதாக மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனை அடுத்து சென்னை விமான நிலையத்தில் பாதுகாப்பை தீவிரப்படுத்தினர். இந்நிலையில் தாய்லாந்தில் இருந்து சென்னைக்கு சுற்றுலா விசாவில் வந்த இளைஞர் ஒருவரை சந்தேகத்தின் பெயரில் பிடித்து விசாரித்த பொழுது முன்னுக்கு பின் முரணாக பதிலளித்துள்ளார்.
சந்தேகம் அடைந்த அதிகாரிகள் அந்த இளைஞர் கொண்டு வந்த சூட்கேஸை பரிசோதித்த போது சூட்கேசின் அடிப்புறத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த போதை பொருள் கண்டுபிடிக்கப்பட்டது.
விசாணையில் லாவோஸ் நாட்டிலிருந்து போதை பொருளை பெற்று கொண்டு தாய்லாந்து வழியாக சென்னைக்கு கடத்தி வரப்பட்டது கண்டு பிடிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து 3.3 கிலோ போதை பொருட்களை பறிமுதல் செய்த போலீசார் இந்தோனேசியாவை சேர்ந்த இளைஞர் ஒருவரை கைது செய்தனர்.
இதன் பின்னணியில் உள்ள சர்வதேச போதை பொருள் கடத்தல் கும்பல் யார் என மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த போதை பொருளானது மிகவும் விலை உயர்ந்ததாக கூறப்படுகிறது.