2007 முதல் ஒவ்வோர் ஆண்டும் மார்ச் மாதத்தின் கடைசி சனிக்கிழமை ’புவி நேரம்’ (Earth Hour) கடைப்பிடிக்கப்படுகிறது. காலநிலை மாற்றம், புவிவெப்பமயமாதல் உள்ளிட்ட சுற்றுச்சூழல் பாதிப்புகள் குறித்து உலக மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இந்நாளின் நோக்கம். உலக இயற்கை நிதியத்தின் முன்னெடுப்பில் உருவான இந்த ‘புவி நேரம்’ காலநிலை மாற்றத்துக்கு எதிராக உலக மக்களை ஒருங்கிணைக்கும் பெரும் பணியைத் தொடர்ந்து செய்துவருகிறது.
2008-ல் 35 நாடுகள் மட்டுமே இதைக் கடைப்பிடித்தன. தற்போது, 190 நாடுகளில் உள்ள மக்கள் ’புவி நேர’த்தைக் கடைப்பிடிக்கின்றனர். இந்நாளில், அத்தியாவசியத் தேவை அல்லாத பிற மின்விளக்குகளை ஒரு மணி நேரம் அணைத்துவைப்பதன் மூலம் மக்கள் பங்கேற்கலாம். இதன் மூலம், மின்சாரத்தை மிச்சப்படுத்துவது எரி ஆற்றலைப் பாதுகாப்பது எனத் தங்கள் பங்குக்கு, இந்தப் பூமிக்கு ஆற்ற வேண்டிய கடமையை மக்கள் நிறைவேற்ற முடியும்.
இந்நிலையில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்கள், இந்த புவிநேரத்தில் சுற்றுச்சூழலைப் பராமரிக்கவும் பாதுகாக்கவும் நாம் கைகோர்ப்போம். இன்றிரவு 8:30 மணி முதல் 9:30 மணி வரை அத்தியாவசியமற்ற அனைத்து விளக்குகளையும் அணைத்து, நமது தாய் பூமிக்கு ஆழ்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்வோம். இயற்கையோடு இயைந்து வாழும் நமது பழங்கால கலாசாரத்தின் உத்வேகத்தை உருவாக்கி, வசுதைவ குடும்பகத்தின் உணர்வை மேம்படுத்தி, நிலையான மற்றும் உள்ளடக்கிய எதிர்காலத்துக்கான நமது கூட்டுறுதியை மீண்டும் உறுதிப்படுத்துவோம். இவ்வாறு மக்களுக்கு இன்றிரவு ஒரு மணி நேரம் மின்விளக்குகளை அணைக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி.