நேபாள நாட்டில் நேற்று (வெள்ளிக்கிழமை) நள்ளிரவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் கட்டிட இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 128 ஆக அதிகரித்துள்ளது. பலர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டப் பகுதிகளில் மீட்புப் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன. இடிபாடுகளில் இன்னும் பலர் சிக்கியிருக்கலாம் என அஞ்சுவதாகவும் பலி எண்ணிகை அதிகரிக்கலாம் எனவும் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ள மீட்புக் குழுவினர் தெரிவிக்கின்றனர். வீடுகளை இழந்தோர் நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
கடந்த 30 நாட்களில் மூன்றாவது முறையாக நேபாளத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. நேற்று ஏற்பட்ட நிலநடுக்கத்தின் தாக்கம் இந்தியத் தலைநகர் டெல்லி உள்பட நொய்டா, பாட்னா ஆகிய நகரங்களிலும் உணரப்பட்டது.
இதுதொடர்பாக பிரதமர் மோடி தனது சமூக வலைதள பக்கத்தில்,நேபாளத்தில் நிலநடுக்கத்தால் ஏற்பட்ட உயிரிழப்புகள் மற்றும் சேதங்கள் குறித்து ஆழ்ந்த வருத்தம். நேபாள மக்களுடன் இந்தியா ஒற்றுமையாக நிற்கிறது மற்றும் அனைத்து உதவிகளையும் செய்ய தயாராக உள்ளது. எங்களுடைய எண்ணங்கள் உயிரிழந்த குடும்பத்தினருடன் உள்ளன, காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வாழ்த்துகிறோம். இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.