உலகின் மிகப்பெரிய பொருளாதார நாடுகள் பட்டியலில், பிரிட்டனை பின்னுக்குத் தள்ளி இந்தியா 5-வது இடத்திற்கு முன்னேறி இருக்கிறது.
சர்வதேச நிதியம் எனப்படும் ஐ.எம்.எஃப். (IMF) அமைப்பு, வருடாந்திர அடிப்படையில் உலக நாடுகளின் ஜி.டி.பி. வளர்ச்சி மற்றும் அதன் நிகர மதிப்பு ஆகியவற்றை டாலரின் அடிப்படையில் வைத்து, ஆய்வு மேற்கொண்டு வருகிறது. இந்த ஆய்வு அறிக்கையை நேற்று வெளியிட்டிருக்கிறது. இந்த ஆய்வு முடிவுதான், பிரிட்டனுக்கு மிகப்பெரிய அதிர்ச்சியை கொடுத்திருக்கிறது. கொரோனா பெருந்தொற்று பாதிப்பு காரணமாக மொத்த உலக நாடுகளும் 2020, 2021-ம் ஆண்டுகளில் பெரும் பொருளாதார வீழ்ச்சியை சந்தித்த நிலையில், பிரிட்டன் மிகமோசமாக பாதிக்கப்பட்டது. இந்த பாதிப்பில் இருந்து இன்னும் மீள முடியாமல் தவிக்கிறது பிரிட்டன். இதன் காரணமாக போரிஸ் ஜான்சன் பிரதமர் பதவியில் இருந்து விலகினார். தற்போது, புதிய பிரதமர் யார் என்பதில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த முன்னாள் நிதியமைச்சர் ரிஷி சுனக்குக்கும், வெளியுறவுத்துறை அமைச்சர் லிஸ் ட்ரஸுக்கும் கடும் போட்டி நிலவி வருகிறது.
இந்த சூழலில்தான், உலகின் டாப் பொருளாதார நாடுகளின் பட்டியலை புள்ளி விவரத்துடன் ஐ.எம்.எஃப். வெளியிட்டிருக்கிறது. இதில்தான், பிரிட்டனை பின்னுக்குத் தள்ளி, உலகின் 5-வது பொருளாதார சக்தியாக இந்தியா உருவெடுத்திருக்கிறது. முதல் 4 இடங்களில் அமெரிக்கா, சீனா, ஜப்பான், ஜெர்மனி ஆகிய நாடுகள் இருக்கின்றன. இந்தியாவின் பங்குச்சந்தையும் உயர்ந்து வருகிறது. கடந்த காலாண்டு நிலவரப்படி, பிரிட்டன் பொருளாதாரம் 814 பில்லியன் டாலராக இருந்தது. ஆனால், இந்தியாவின் பொருளாதாரம் 854.7 பில்லியன் டாலராக வளர்ந்திருக்கிறது. இதன் மூலம் பிரிட்டன் 6-வது இடத்துக்கு தள்ளப்பட்டிருக்கிறது. பிரிட்டனில் பிரதமர் மாற்றம் ஏற்படவிருக்கும் நிலையில், புதிதாக பதவியேற்கும் பிரதமர் 4 தசாப்தங்களில் இல்லாத வகையில் ஏற்பட்டுள்ள பணவீக்கம் மற்றும் பொருளாதார மந்த நிலை ஆகியவற்றின் சவாலை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். இது 2024 இறுதிவரை நீடிக்கும் அபாயம் உள்ளதாக பிரிட்டன் ரிசர்வ் வங்கி கூறியிருக்கிறது. இதற்கு மாறாக இந்திய பொருளாதாரம் நிகழாண்டில் 7 சதவீதத்திற்கு மேலும் வளரும் என்று கணக்கிடப்பட்டிருக்கிறது.