ஏகாதசி விரதங்களும், பலன்களும்!

ஏகாதசி விரதங்களும், பலன்களும்!

Share it if you like it

அமாவாசை விரதம், பௌர்ணமி விரதம், சஷ்டி விரதம், சனிக்கிழமை விரதம், வெள்ளிக்கிழமை விரதம் என்று பல வகையான விரதங்கள் இருந்தாலும், ஏகாதசி விரதத்துக்கு தனித்துவமான மகத்துவம் உண்டு. அந்தவகையில், மாதந்தோறும் வரும் ஏகாதசிகளும், இந்த காலங்களில் விரதம் இருந்தால் கிடைக்கும் பலன்கள் பற்றி பார்ப்போம்.

சித்திரை மாதம் வரும் வளர்பிறை ஏகாதசியானது காமதா ஏகாதசி எனப்படும். இந்த காமதா ஏகாதசியில் விரதம் இருந்தால் விருப்பங்கள் எல்லாம் நிறைவேறும். சித்திரை தேய்பிறை ஏகாதசி என்பது பாப மோசனிகா ஏகாதசி எனப்படும். இந்த பாப மோசனிகா ஏகாதசியில் விரதம் இருந்தால் நாம் செய்த பாவங்கள் தொலையும். நல்ல பேற்றினை ஏற்படுத்தும். துரோகிகள் விலகுவர்.

வைகாசி மாதம் வரும் வளர்பிறை ஏகாதசியானது மோகினி ஏகாதசி எனப்படும். இந்த மோகினி ஏகாதசியில் விரதம் இருந்தால் உடல் சோர்வு நீக்கும். பாவம் நீங்கி புண்ணியம் பெருகும். அறியாமை நீங்கி நல்ல புத்தி உண்டாகும். வைகாசி தேய்பிறை ஏகாதசி என்பது வருதினி ஏகாதசி எனப்படும். இந்த வருதினி ஏகாதசியில் விரதம் இருந்தால் உடல் ஆரோக்கியம் தரும். சவுபாக்யம் எனும் அனைத்தும் கிடைக்கும்.

ஆனி மாதம் வரும் வளர்பிறை ஏகாதசியானது நிர்ஜல ஏகாதசி எனப்படும். இந்த நிர்ஜல ஏகாதசியில் விரதம் இருந்தால் வாழ்க்கையில் அனைத்து வெற்றியும் கிட்டும். வருடம் முழுவதும் உள்ள ஏகாதசி விரத பலன் கிடைக்கும். ஏனெனில் பீமன்வாயு அம்சம். ஆனி தேய்பிறை ஏகாதசி என்பது அபரா ஏகாதசி எனப்படும். இந்த அபரா ஏகாதசியில் விரதம் இருந்தால், ஸ்ரீகேதாரிநாத், பத்ரிநாத் யாத்திரை சென்ற பலனும், கயாவில் தர்ப்பண்ம் செய்த பலனும், பிராயாகையில் புண்ணிய ஸ்நானம் செய்த பலனும் சிவராத்திரி விரத பூஜை பலனும் ஒருங்கே செய்த பலன் கிடைக்கும்.

ஆடி மாதம் வரும் வளர்பிறை ஏகாதசியானது விஷ்ணு சயன ஏகாதசி எனப்படும். இந்த விஷ்ணு சயன ஏகாதசி அல்லது தயினி ஏகாதசியில் விரதம் இருந்தால் முன்னோர்களின் ஆசியையும், அவர்களது எதிர்பார்ப்புகளையும் நம் மூலம் செயல்படுத்தி நம்மை வெற்றியாளராக்குவதாகும். மேலும், இந்நாளில் ஏழைகளுக்கு வஸ்திரதானம் செய்வதால் குடும்ப ஒற்றுமை ஓங்கும். ஆடி தேய்பிறை ஏகாதசி என்பது யோகினி ஏகாதசி எனப்படும். இந்த யோகினி ஏகாதசியில் விரதம் இருந்து, விளக்கு தானம் செய்ய, கனவிலும் நினைக்காத கற்பனைக் கெட்டாத வாழ்க்கை அமையும்.

ஆவணி மாதம் வரும் வளர்பிறை ஏகாதசியானது புத்திரத ஏகாதசி எனப்படும். இந்த புத்திரத ஏகாதசியில் விரதம் இருந்தால் குழந்தைகள் கல்வியில் சிறக்கவும், விரும்பிய மேல்படிப்பு அமையவும், சிறந்த மாணவ, மாணவிகளாக திகழவும் செய்வார்கள். ஆவணி தேய்பிறை ஏகாதசி என்பது காமிகா ஏகாதசி எனப்படும். இந்த காமிகா ஏகாதசியில் விரதம் இருந்து, தனி துளசியால் மஹா விஷ்ணுவை அர்ச்சித்து வழிபாடு செய்ய, சொர்ணம் வீட்டில் தங்கும் (தங்கம் நம் வீட்டில் தங்கும்). வீட்டில் பூஜை முடித்த பின் ஆலயம் சென்று 5 நெய்தீபம் ஏற்றி வழிபாடு செய்தால், மன பயம் அகலும், மரண பயம் அகலும், கொடிய துன்பம் விலகும்.

புரட்டாசி மாதம் வரும் வளர்பிறை ஏகாதசியானது பரிவர்த்தன ஏகாதசி எனப்படும். இந்த பரிவர்த்தன ஏகாதசி அல்லது பத்மநாபா ஏகாதசியில் விரதம் இருந்தால் இந்திரனும், வருணனும் இணைந்து வரம் தருவார்கள். நமது வீட்டு கிணறு, ஆழ்குழாய்களில் தண்ணீர் வற்றாமல் பெருக்கெடுக்கும். ஊருக்கும் தண்ணீர் பஞ்சம் வராது. புரட்டாசி தேய்பிறை ஏகாதசி என்பது அஜ ஏகாதசி எனப்படும். இந்த அஜ ஏகாதசியில் விரதம் இருந்தால் குடும்பத்துடன் ஆனந்தமாக இருப்போம். புரட்டாசி மாத ஏகாதசி விரத நாளில் கண்டிப்பாக தயிர் உபயோகிக்கக் கூடாது (சேர்க்கக்கூடாது).

ஐப்பசி மாதம் வரும் வளர்பிறை ஏகாதசியானது பாபாங்குசா ஏகாதசி எனப்படும். இந்த பாபாங்குசா ஏகாதசியில் விரதம் இருந்தால் வறுமை ஒழியும், நோய் அகலும், பசிப்பினி நீங்கும், நிம்மதி நிலைக்கும், தீர்த்த யாத்திரை சென்ற புண்ணியம் கிடைக்கும். ஐப்பசி தேய்பிறை ஏகாதசி என்பது இந்திரா ஏகாதசி எனப்படும். இந்த இந்திரா ஏகாதசியில் விரதம் இருந்து மூதாதையருக்கு சிரார்த்தம் செய்தால், அவர்கள் இந்திர வாழ்வு வைகுண்டத்தில் பெறுவதால் நம்மையும் மனங்குளிர இறைவன் வைக்க வேண்டுமென அருகில் உள்ள பகவானிடம் பரிந்துரை செய்வார்கள்.

கார்த்திகை மாதம் வரும் வளர்பிறை ஏகாதசியானது பிரபோதின ஏகாதசி எனப்படும். இந்த பிரபோதின ஏகாதசி அல்லது கைசிக ஏகாதசியில் விரதம் இருந்து அனைத்து பழ வகைகளையும் பகவானுக்கு நிவேதனம் செய்து வேண்டிக் கொண்டால், மங்கள வாழ்வு மலரும், பூலோக சொர்க்க வாழ்வு கிடைக்கும். கார்த்திகை தேய்பிறை ஏகாதசி என்பது ரமா ஏகாதசி எனப்படும். இந்த ரமா ஏகாதசியில் விரதம் இருப்பது 21 தானம் செய்த புண்ணியம் தரவல்லது.

மார்கழி மாதம் வரும் வளர்பிறை ஏகாதசியானது வைகுண்ட ஏகாதசி எனப்படும். இந்த வைகுண்ட ஏகாதசி என்பது அன்றைய தினம் முழுவதும் உண்ணாமல் இருப்பதோடு மட்டுமின்றி, முன்பின் நாட்கள் பகலில் உறங்காமல் இருந்து செய்யும் வைகுண்ட ஏகாதசி விரதமாகும். இது அனைத்து ஏகாதசியின் பலனையும் தரும். மார்கழி தேய்பிறை ஏகாதசி என்பது உற்பத்தி ஏகாதசி எனப்படும். இந்த உற்பத்தி ஏகாதசியில் விரதம் இருப்பது பகையை வெல்ல உதவும்.

தை மாதம் வரும் வளர்பிறை ஏகாதசியானது பீஷ்ம, புத்திர ஏகாதசி எனப்படும். இந்த பீஷ்ம, புத்திர ஏகாதசியில் விரதம் இருந்தால் புத்திரபாக்யம் கிட்டும். தை தேய்பிறை ஏகாதசி எந்பது சபலா ஏகாதசி எனப்படும். இந்த சபலா ஏகாதசி என்பது ஒளிமயமான வாழ்க்கை அமையும். இல்லறம் இனிக்கும்.

மாசி மாதம் வரும் வளர்பிறை ஏகாதசியானது ஜெய ஏகாதசி எனப்படும். இந்த ஜெய ஏகாதசி தினத்தன்று விரதம் இருந்தால், அகால மரணம் அடைந்த மூதாதயர்கள் மோட்சம் பெறுவர். மன உளைச்சல் அகலும். வாழ்க்கையில் ஏற்படும் விரக்தி நம்மை விட்டு நீங்கும். மாசி தேய்பிறை ஏகாதசி என்பது ஷட்திலா ஏகாதசி எனப்படுகிறது. இந்த ஷட்திலா ஏகாதசி நாளில் விரதம் இருந்து, கொய்யாப்பழம் அல்லது கொட்டைப்பாக்கு, பாதுகை, கூடை, கரும்பு, நீருடன் தாமிரக்குடம், பசு முதலியவையும் சேர்த்து 6 பொருள் தானம் தந்தால் பிரம்மஹத்தி தோஷம் நீங்கும்.

பங்குனி மாதம் வரும் வளர்பிறை ஏகாதசியானது ஆமலகி ஏகாதசி எனப்படும். இந்த ஆமலகி ஏகாதசியில் விரதமிருந்து நெல்லி மரத்தடியில் பரசுராமன் படம் வைத்து பூஜை செய்து, நெல்லி மரத்தை 108 சுற்று சுற்றி பூப்போட்டால், புண்ணிய நதிகளில் நீராடிய பலனும், ஆயிரம் பசுதானம் செய்த அளவு பலனும் கிடைக்கும். பங்குனி தேய்பிறை ஏகாதசி என்பது விஜயா ஏகாதசி எனப்படும். இந்த விஜயா ஏகாதசியில் விரதம் இருந்தால் வெளிநாட்டில் உள்ள நமது சொந்தங்கள் சிறப்படையும். கணவனை பிரிந்துவாடும் நங்கைகள் கணவனுடன் வெளிநாடு சென்று வாழ்க்கையை ஆரம்பிப்பர்.

அடேங்கப்பா! ஏகாதசி விரத்திற்கு இவ்வளவு பலனா என்று நீங்கள் ஆச்சரியப்படுவது தெரிகிறது. ஆகவே, இனி ஒவ்வொரு ஏகாதசியன்றும் தவறாமல் விரதம் இருப்போம்.


Share it if you like it