தேர்தல் முடிவுகள் : வெற்றிக் கூட்டணி எது ? வெட்கமில்லாத கூட்டணி எது ?

தேர்தல் முடிவுகள் : வெற்றிக் கூட்டணி எது ? வெட்கமில்லாத கூட்டணி எது ?

Share it if you like it

2024 லோக் சபா தேர்தலில் பாஜக கூட்டணி வென்றதா? இல்லை, காங்கிரஸ் கூட்டணிக்குத்தான் வெற்றியா? இதில் சிலருக்கு சந்தேகம் தோன்றுகிறது. ஏன் என்ன என்று பார்க்கலாம்.

பாஜக-வை, முக்கியமாக நரேந்திர மோடியை, தீவிரமாக எதிர்க்கும் எதிர்க் கட்சிகளில் பிரதானமானவை, காங்கிரஸ், திமுக, திரிணாமுல் காங்கிரஸ், சமாஜவாதி கட்சி, தேசியவாத காங்கிரஸ் (ஷரத் பவார்), மற்றும் சில. இவைகள் இன்னும் சில கட்சிகளுடன் சேர்ந்து, 2024 லோக் சபா தேர்தலில் மோடியை எதிர்ப்பதற்காக ஒரு கூட்டணியை உருவாக்கின. அதுதான் ‘இண்டி’ கூட்டணி (I.N.D.I. Alliance) என்பது.

இன்னொரு புறத்தில், பாஜக-வும் அதன் ஆதரவுக் கட்சிகளும் பல ஆண்டுகளுக்கு முன் உருவாக்கிய தேசிய ஜனநாயகக் கூட்டணி செயல்படுகிறது.

நடந்து முடிந்த லோக் சபா தேர்தலில், மொத்தமுள்ள 543 தொகுதிகளில் பெரும்பான்மை எண் 272-ல் கிட்டிவிடும். தேசிய ஜனநாயகக் கூட்டணி 293 இடங்களில் ஜெயித்தது – அதில் பாஜக-வின் கணக்கு 240. ‘இண்டி’ கூட்டணி கைப்பற்றியது 232 இடங்கள் – அதில் காங்கிரஸுக்கு வந்தது 99. மற்றவர்கள் 18.

வெறும் கூட்டல் கழித்தல் தெரிந்தால் போதும், வென்றது தேசிய ஜனநாயகக் கூட்டணி, அந்தக் கூட்டணி மத்தியில் ஆட்சி அமைப்பதுதான் முறை, அவர்கள் தேர்ந்தெடுத்த நரேந்திர மோடி பிரதமர் ஆவதுதான் இயற்கை என்று அனைவருக்கும் புரிய. ஆனால் இண்டி கூட்டணித் தலைவர்கள் இந்த நிதர்சனத்தை ஏற்காமல், துளியும் வெட்கமில்லாமல் வில்லத்தனமாக, பித்துக்குளித்தனமாகப் பேசுகிறார்கள்.

நடந்த விஷயங்களை ஒவ்வொன்றாகப் பார்க்கலாம்.

இந்த லோக் சபா தேர்தலில் தே. ஜ. கூட்டணி 400 இடங்களில் ஜெயிக்கக் குறி வைத்தது. ஆனால் அது எட்டியது 293. அதுவும் 21 இடங்கள் கூடுதலான பெரும்பான்மைதான். ஆனால் இண்டி கூட்டணிக் கட்சிகளுக்குத் தங்கள் கூட்டணி பெரும்பான்மை இடங்களில் வெல்லும் என்ற நம்பிக்கை இருந்ததில்லை. அகில இந்தியத் தேர்தல் கள நிலவரம் அப்படி இருந்தது.

இண்டி கூட்டணித் தலைவர்கள் வெளிப்பேச்சுக்கு “நாங்கள் குறைந்தது 295 இடங்களில் ஜெயிப்போம்” என்று சொன்னார்கள். ராகுல் காந்தி அப்படிப் பேசினார். மற்ற இண்டி கூட்டணித் தலைவர்களுடன் ஆலோசித்துவிட்டு, காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கேயும் அதைச் சொன்னார்.

‘295 சீட்டுகளில் ஜெயிப்போம்’ என்று ராகுல் காந்தி கூறியது, அவர் மனமறிந்த பொய். இதை அமேதி தொகுதியின் கதை தெளிவாகக் காண்பிக்கிறது.

தொடர்ச்சியாக மூன்று லோக் சபா தேர்தல்களில் அமேதி தொகுதியின் எம்.பி-யாகத் தேர்வானவர் ராகுல் காந்தி. அதில் கடைசி முறையான 2014-ம் வருடத்தில், அவர் பாஜக-வின் ஸ்மிருதி இரானியைத் தோற்கடித்தார். ஆனால் அடுத்த தேர்தலில், 2019-ம் ஆண்டில், ராகுல் காந்தி அதே ஸ்மிருதி இரானியிடம் அமேதி தொகுதியில் தோல்வியடைந்தார்.

இப்போது நடந்த 2024 தேர்தலில், தான் மீண்டும் அமேதி தொகுதியில் போட்டியிட்டால் ஸ்மிருதி இரானியிடம் மீண்டும் தோற்போம், அது மானக் கேடு, என்று நினைத்த ராகுல் காந்தி, இந்த முறை அமேதியில் போட்டியிடவில்லை. ஆகையால் ராகுலுக்கு மாற்றாக வேறு யாரோ ஒரு சாதா காங்கிரஸ் வேட்பாளர் அந்தத் தொகுதியில் இப்போது பலி ஆடாக வைத்து இறக்கப் பட்டார். ஆனால் இந்த முறை அந்த சதா வேட்பாளர் அமேதியில் பாஜக-வின் ஸ்மிருதி இரானியை ஒரு லட்சத்து அறுபதாயிரம் ஓட்டு வித்தியாசத்தில் வென்று விட்டார்.

தனது சொந்தத் தொகுதியில், தான் மூன்று முறை வென்ற அமேதி தொகுதியில், இந்த முறை ஜெயிப்போம் என்ற நம்பிக்கை ராகுல் காந்திக்கு இருந்ததில்லை என்பது தெளிவு.

இன்னொரு விஷயத்தையும் பார்க்கவேண்டும்.

“இண்டி கூட்டணி குறைந்த பட்சம் 295 தொகுதிகளில் வெல்லும்” என்று ராகுல் காந்தி சொன்னபோது, அதில் அமேதி தொகுதி சேர்த்தியா இல்லையா? ஆம் என்றால் ராகுல் காந்தியே அங்கு நின்று ஸ்மிருதி இரானியைத் தோற்கடித்து வஞ்சம் தீரத்திருப்பாரே? இல்லை, அந்த 295-ல் அமேதி சேர்த்தி இல்லை என்றால், தனது சொந்தத் தொகுதி மக்களின் மனநிலையைக் கூட சரியாக அறியாத ராகுல் காந்தி, எப்படி 295-ஐ நம்பி இருப்பார்?

இண்டி கூட்டணி எதிர்பார்த்த தோல்விக்கு, அவர்களே பின்னால் சொல்லிக் கொள்ள நொண்டிச் சாக்குகள் தேவை என்பதற்காக, அந்தக் கூட்டணித் தலைவர்கள் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களின் மீது சந்தேகம் எழுப்பி வந்தார்கள்.

அடுத்ததாக, வாக்கு எண்ணிக்கை தினத்துக்கு மூன்று நாட்கள் முன்னர், காங்கிரஸின் ஜெய்ராம் ரமேஷ் தடாலடிப் புளுகாக ஒரு அறிக்கை வெளியிட்டார். ”அமித் ஷா மாவட்ட கலெக்டர்களை தொலைபேசியில் அழைத்து வருகிறார். இதுவரை 150 கலெக்டர்களிடம் பேசிவிட்டார். அதிகாரிகள் எந்த அழுத்தத்திற்கும் இணங்காமல், அரசியல் சட்டப்படிதான் நடக்கவேண்டும். அவர்கள் கண்காணிக்கப் படுகிறார்கள்” என்றது அவர் அறிக்கை.

தாங்கள் எதிர்பார்த்த பெரிய தோல்விக்கு, ‘அரசு மிரட்டியது. வாக்கு எண்ணும் தேர்தல் அதிகாரிகள் முறைகேட்டுக்கு உடன்பட்டு இண்டி கூட்டணியைத் தோற்கச் செய்துவிட்டார்கள்’ என்று பின்னால் விளக்கம் சொல்ல இப்படி ஒரு மலிவான செய்கையில் ஈடுபட்டது காங்கிரஸ்.

வாக்கு எண்ணிக்கைக்கு ஒரு நாள் முன்பாக, காங்கிரஸ் தலைவர் கார்கே அரசுப் பணியாளர்களுக்கும் அரசு அதிகாரிகளுக்கும் ஒரு வேண்டுகோள் விடுத்தார்: “யாரிடமும் அச்சப் படாதீர்கள். அரசியல் சட்டத்திற்குப் புறம்பான வழிகளுக்கு அடிபணியாதீர்கள். வாக்கு எண்ணும் தினத்தில் முறையாகப் பணி செய்யுங்கள்” என்று சொன்னார் அவர். அதே குயுக்தி, அதே மலிவான தந்திரம், அதே கெட்ட நோக்கம்.

தேர்தல் முடிவுகள் வந்தவுடன், பெரும்பான்மை இடங்களைப் பெறாத இண்டி கூட்டணியின் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி – 99 தொகுதிகளை மட்டும் வென்ற ஒரு கட்சியின் தலைவர் – “இந்தத் தேர்தலின் முக்கியச் செய்தி என்னவென்றால், ‘நாட்டை ஆள்வதற்கு நரேந்திர மோடியும் அமித் ஷாவும் வேண்டாம்’ என்று மக்கள் தெளிவாக ஏகோபித்துச் சொல்லிவிட்டனர்” என்று கூசாமல் பிதற்றினார். “மக்கள் அரசியல் சட்டத்தைக் காப்பாற்றி விட்டனர்” என்றும் அவர் உளறினார்.

ராகுல் காந்திக்குச் சளைக்காத மு. க. ஸ்டாலின், “அரசியல் சாசனத்தை மாற்றிவிடலாம் என்று நினைத்த பாஜக-வுக்கு எதிரான மக்களுடைய தீர்ப்பு இது” என்று பேசினார்.

இண்டி கூட்டணியிடம் ஆட்சிப் பொறுப்பைத் தர விரும்பாத மக்களை ராகுல் காந்தியும் மு. க. ஸ்டாலினும் பெரிய மனதுடன் மன்னித்து விட்டார்கள் போலும்!

ஒரு சீரியஸான விஷயம்: அரசியல் என்பது ஒரு கோர விளையாட்டு, அதன் முக்கிய ஆடுகளம் தேர்தல். இன்னொரு விஷயம்: கல்வியின்மையால், ஏழ்மையால், இந்திய மக்கள் சில அரசியல் விஷயங்களில் வெகுளியானவர்கள். இந்த இரண்டும் கலக்கும்போது, தேர்தல்களில் வெற்றி தோல்விகள் யாருக்குக் கிடைக்கும், எந்த அளவு கிடைக்கும் என்று பல சமயங்களில் நாம் சரியாகக் கணிக்க முடியாது. இதைப் புரிந்துகொண்டு, வந்திருக்கும் தேர்தல் முடிவுகளை ஏற்று, மக்களுக்காக, நாட்டு நலனுக்காக, அயராது உழைப்பவர் நரேந்திர மோடி என்னும் மாமனிதர்.

பாஜக என்ற கட்டுக் கோப்பான கட்சி, நரேந்திர மோடி என்ற நேர்மையான சாதுரியமான தேசபக்தர் இன்றைய இந்தியாவுக்கு ஒரு வரப் பிரசாதம்.

தனது உயர்ந்த இலக்கிலிருந்து பார்வை விலகாமல், இண்டி கூட்டணித் தலைவர்கள் அனைவரையும் கையாளக் கூடியவர் மோடி. இதில் அவருக்கு உறுதுணையாக இருப்பது பாஜக-வின் அடுத்த கட்டத் தலைவர்கள். பாஜக-வின் கூட்டணிக் கட்சிகளை அணைத்து, தேவையானால் அவர்களை சமாளிக்கவும் வல்லவர் மோடியும் அவரது சகாக்களும். சீனாவையும் பாகிஸ்தானையும் கூட சாதுரியமாகச் சமாளித்தவர் அல்லவா மோடி!

இப்போது நாம் செய்யக் கூடியது: தேச நலனைப் போற்றுவோம். மீண்டும் பிரதமர் ஆகும் மோடியை வாழ்த்துவோம்.


Share it if you like it

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *