அசாம் மாநிலத்தில் இனி முதலமைச்சர் தொடங்கி அமைச்சர்கள், மூத்த அரசு அதிகாரிகள் தங்கள் சொந்த பணத்தில் இருந்து மின் கட்டணம் செலுத்த வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அம்மாநிலத்தில் உள்ள அமைச்சர்கள், அரசு உயர் அதிகாரிகளின் இல்லங்கள், தலைமை செயலகம் போன்ற இடங்களின் மின் கட்டணத்தை அரசே செலுத்தி வரும் நடைமுறை ஆரம்பம் முதல் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இந்த விஐபி பிரமுகர்களுக்கான சிறப்பு சலுகை இந்த கலாச்சாரத்திற்கு முடிவு கட்ட அம்மாநில முதலமைச்சர் புதிய உத்தரவை பிறப்பித்துள்ளார்.
இது தொடர்பாக முதல்வர் ஹிமந்தா பிஸ்வாஸ் சர்மா தனது அறிவிப்பில் கூறியதாவது, “மாநிலத்தில் விஐபி கலாசாரத்திற்கு முடிவுகட்டும் விதமாக வரும் ஜூலை மாதம் முதல் இந்த புதிய உத்தரவு அமலுக்கு வருகிறது. முதலமைச்சரான நான் தொடங்கி, தலைமை செயலாளர், அமைச்சர்கள், மூத்த அதிகாரிகள் இனி தங்களின் மின் கட்டணத்தை தங்கள் சொந்த பணத்தில் இருந்து செலுத்துவார்கள்.
மக்கள் வரிப்பணத்தில் இருந்து இந்த மின் கட்டணம் செலுத்தப்படாது. சுமார் 75 ஆண்டுகாலமாக பின்பற்றி வந்த இந்த நடைமுறை பற்றி எனக்கு இப்போது தான் தெரியவந்தது. எனவே, இனி அரசு தனது பட்ஜெட் பணத்தில் இருந்து இவர்களுக்கு மின் கட்டணத்தை செலுத்தாது” என்றுள்ளார். அசாம் மாநில அரசு மாதம் சுமார் ரூ.30 லட்சம் தொகை மின்கட்டணமாக செலுத்துவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.