பிரதமர் மோடி மற்றும் தொழிலதிபர் அதானி பற்றி நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்ப தொழிலதிபர் ஹிராந்தானியிடம் திரிணமூல் காங்கிரஸ் எம்.பி மஹூவா மொய்த்ரா லஞ்சம் பெற்றார் என உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் ஜெய் ஆனந்த் என்பவர் சிபிஐ-யில் புகார் அளித்தார்.
இந்த விவகாரத்தில் குற்றச்சாட்டு உறுதியானதால், எம்.பி பதவியில் இருந்து மஹூவா மொய்த்ரா தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இது குறித்து முறையான விசாரணை நடத்த லோக்பால் உத்தரவிட்டதையடுத்து மஹூவா மொய்த்ரா மற்றும் ஹிராநந்தானி ஆகியோர் மீது சிபிஐ கடந்த மாதம் வழக்குப்பதிவு செய்தது. இதில் ஹிராநந்தானியிடம் இருந்து லஞ்சம் பெற்று, தனது நாடாளுமன்ற இ-மெயில் மற்றும் பாஸ்வோர்டை கொடுத்து தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தியதாக சிபிஐ பல பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்திருந்தது.
இதையடுத்து மஹூவா மொய்த்ராவை நேரில் வந்து விசாரணைக்கு ஆஜராகும்படி சிபிஐ 3 முறை சம்மன் அனுப்பியது. ஆனால் அவர் ஆஜராகவில்லை. இந்நிலையில் சிபிஐ எப்ஐஆர்-ஐ அடிப்படையாக கொண்டு மஹூவா மொய்த்ரா மற்றும் ஹிராநந்தானி ஆகியோர் மீது அமலாக்கத் துறை தற்போது நிதி மோசடி வழக்குப் பதிவு செய்துள்ளது.