ரயில்வே வேலைக்கு லஞ்சமாக நிலம் பெற்ற வழக்கில் பிஹார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் மனைவி ராப்ரி மற்றும் மகள் மிசா பாரதி உள்ளிட்டோர் மீது அமலாக்கத் துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.
கடந்த 2004 முதல் 2009-ம் ஆண்டு வரையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில், ராஷ்ட்ரிய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத் யாதவ் ரயில்வே அமைச்சராக பதவி வகித்தார். அப்போது பிஹார் மாநிலத்தைச் சேர்ந்த சிலர், ரயில்வே துறையில் வேலை பெறுவதற்காக லாலு குடும்பத்தினருக்கு தங்கள் நிலத்தை லஞ்சமாக வழங்கியதாக குற்றம் சாட்டப்பட்டது. இது தொடர்பாக ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் சிபிஐ மற்றும் சட்டவிரோத பணப் பரிவர்த்தனை தடுப்பு சட்டத்தின் கீழ் அமலாக்கத் துறை ஆகியவை தனித்தனியாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றன.
இந்நிலையில், இது தொடர்பான வழக்கை விசாரிக்கும் நீதிமன்றத்தில் அமலாக்கத் துறை அதிகாரிகள் நேற்று குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். 4,751 பக்கங்கள் கொண்ட அதில், லாலு பிரசாத் யாதவின் மனைவியும் பிஹார் முன்னாள் முதல்வருமான ராப்ரி தேவி மற்றும் அவருடைய மகள் மிசா பாரதி உட்பட 5 பேரின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன.
இதுதவிர, ஏ.பி. எக்ஸ்போர்ட் மற்றும் ஏ.கே.இன்போசிஸ்டம்ஸ் ஆகிய 2 நிறுவனங்களின் பெயர்களும் குற்றப்பத்திரிகையில் இடம்பெற்றுள்ளன. ஏ.கே.இன்போசிஸ்டம்ஸ் உரிமையாளர் அமித்கத்யாலின் பெயரும் புகாரில் இடம்பெற்றுள்ளது. லாலு பிரசாத் குடும்பத்தினருக்கு மிகவும் நெருக்கமானவரான இவர் கடந்த ஆண்டு கைது செய்யப்பட்டார். இந்த வழக்கு வரும் 16-ம் தேதி விசாரணைக்கு வர உள்ளது குறிப்பிடத்தக்கது.