இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத், உடல் நலக்குறைவு காரணமாக நேற்று காலமானார்.
இங்கிலாந்து ராணியாக இருந்தவர் 2-ம் எலிசபெத். இவரது இயற்பெயர் எலிசபெத் அலெக்சாண்டிரியா மேரி. 1926 ஏப்ரல் 21-ம் தேதி பிறந்த எலிசபெத், 1952 பிப்ரவரி 6-ம் தேதி இங்கிலாந்து ராணியாக பொறுப்பேற்றார். கடந்த 70 ஆண்டுகளாக இங்கிலாந்து ராணியாக செயல்பட்டு வந்த இவர், இங்கிலாந்திற்கு மட்டுமின்றி 14 நாடுகளின் அரசியல் சாசன சட்டப்படி அரசியாகவும் இருந்தார். ராணி 2-ம் எலிசபெத்தின் கணவரான இளவரசர் பிலிப், கடந்தாண்டு உயிரிழந்தார். இத்தம்பதிக்கு 3 மகன்கள் 1 மகள். சமீபகாலமாகவே உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்த ராணி 2-ம் எலிசபெத், ஸ்காட்லாந்து நகரில் பால்மோல் கோட்டையில் ஓய்வெடுத்து வந்தார். கடந்த சில நாட்களாக அவரது உடல்நிலை கவலைக்கிடமாகவே, டாக்டர்கள் குழுவினர் தொடர்ந்து கண்காணித்து வந்தனர். இந்த சூழலில், ராணி 2-ம் எலிசபெத் தனது 96-வது வயதில் நேற்று இரவு உயிரிழந்தார். தகவலறிந்த ராணியின் மகனும், இங்கிலாந்து இளவரசருமான சார்லஸ், அவரது மனைவி கமீலா உள்ளிட்ட குடும்பத்தினர் பால்மோல் கோட்டைக்கு விரைந்தனர்.
இங்கிலாந்து ராணி 2-ம் எலிசபெத் மறைவுக்கு பாரத பிரதமர் மோடி தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்திருக்கிறார். ‛பிரிட்டன் ராணி நம் காலத்தில் வாழ்ந்த மிகுந்த மரியாதைக்கும், நம்பிக்கைக்கும் உரியவர். தனது நாட்டுக்கும், நாட்டு மக்களுக்கும் தலைசிறந்த ராணியாக பொறுப்பேற்றிருந்தார். பொது வாழ்க்கையில் கண்ணியத்தையும், நாகரிகத்தையும் கடைப்பிடித்து வந்தார். அவருடைய மறைவு மிகுந்த வேதனை அளிக்கிறது. அவருடைய குடும்பத்தாருக்கும், இங்கிலாந்து நாட்டு மக்களுக்கும் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறேன்’ என்று தெரிவித்திருக்கிறார். ராணி 2-ம் எலிசபெத் மறைவைத் தொடர்ந்து, அவரது மூத்த மகன் சார்லஸ் இங்கிலாந்து அரசராகவும், அவரது மனைவி கமீலா ராணியாகவும் பொறுப்பேற்பார்கள் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.