ஈரோடு இடைத்தேர்தல் பிரசாரத்தின்போது நாம் தமிழர் கட்சியினர் மீது தி.மு.க. குண்டர்கள் கற்களை வீசி தாக்குதல் நடத்தியதில் 7 பேர் மண்டை உடைந்தது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தல் எதிர்வரும் 27-ம் தேதி நடைபெறவுள்ளது. இதை முன்னிட்டு, தி.மு.க., அ.தி.மு.க., நாம் தமிழர், தே.மு.தி.க. ஆகிய கட்சியினர் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இப்பிரசாரத்தின்போது தி.மு.க. கட்சியினர் வரம்பு மீறி செயல்பட்டு வருகின்றனர். மேலும், வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பது, பிரியாணி போடுவது, சுற்றுலா அழைத்துச் செல்வது, பரிசுப் பொருட்கள் வழங்குவது என தேர்தல் நடத்தை விதிகளையும் மீறி வருகின்றனர். ஆனால், நடவடிக்கை எடுக்க வேண்டிய தேர்தல் கமிஷனோ, ஆளும் தி.மு.க. அரசுக்கு ஜால்ரா போட்டு வருகிறது.
இதனிடையே, நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் மேனகா நவநீதனுக்கு ஆதரவாக, அக்கட்சியினர் வாக்கு சேகரித்து வருகின்றனர். கடந்த 17-ம் தேதி நாம் தமிழர் கட்சியினர் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டிருந்தபோது, அவர்கள் மீது தி.மு.க.வினர் தாக்குதல் நடத்தினர். இதில், நாம் தமிழர் கட்சியின் தொழிற்சங்க மாநிலத் தலைவர் அன்பு தென்னரசுவின் மண்டை உடைந்தது. மேலும், புதுக்கோட்டையைச் சேர்ந்த நாகசுந்தர் என்பவருக்கு முகத்தில் காயம் ஏற்பட்டது. இதனால், இரு தரப்பினரும் முறைத்துக் கொண்டு திரிந்தனர். ஆகவே, இரு தரப்பினரிடையே மீண்டும் மோதல் உருவாகும் சூழல் நிலவி வந்தது.
இந்த நிலையில், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், கடந்த சில நாட்களாக ஈரோட்டில் முகாமிட்டு, மேனகா நவநீதனுக்கு ஆதரவாக பிரசாரம் செய்து வருகிறார். இந்த சூழலில்தான், தி.மு.க., நாம் தமிழர் இடையே மீண்டும் மோதல் ஏற்பட்டிருக்கிறது. அதாவது, கடந்த 20-ம் தேதி அனுமதியினறி ஆலமரத் தெருவில் பிரசாரம் மேற்கொண்டதாக தி.மு.க.வினர் போலீஸில் புகார் கொடுத்தனர். இதன் பேரில், தேர்தல் விதிமுறைகளை மீறியதாக ஈரோடு காவல் நிலையத்தில் நாம் தமிழர் வேட்பாளர் மேனகா உட்பட 30 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதனால், தி.மு.க.வினருக்கும், நாம் தமிழர் கட்சியினருக்கும் இடையே மீண்டும் புகைச்சல் ஏற்பட்டது.
இந்த சூழலில், நேற்று பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த நாம் தமிழர் கட்சியினர் மீது தி.மு.க.வைச் சேர்ந்த குண்டர்கள் கற்கள் மற்றும் கட்டைகளை வீசி தாக்குதலில் ஈடுபட்டனர். மேலும், நாம் தமிழகர் கட்சியினரின் கார் கண்ணாடிகளையும் உடைத்தனர். இந்த மோதலில், நாம் தமிழர் கட்சியினர் 7 பேரின் மண்டை உடைந்தது. இவர்கள் அனைவரும் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், சம்பவ இடத்தில் போலீஸாரும், துணை ராணுவப் படையினரும் குவிக்கப்பட்டனர். எனினும், தங்களை தடுத்த போலீஸ் மற்றும் துணை ராணுவப்படையினர் மீதும் தி.மு.க. குண்டர்கள் தாக்குதல் நடத்தினர்.
இது தொடர்பான வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.