ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல் பிரசாரத்தின்போது, பணம் வந்துச்சா என்று வெளிப்படையாகவே தி.மு.க. எம்.எல்.ஏ. உதயசூரியன் கேட்கிறார். அப்படி இருந்தும் தேர்தல் கமிஷன் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால், பொதுமக்கள் குமுறி வருகிறார்கள்.
ஈரோடு கிழக்குத் தொகுதியின் எம்.எல்.ஏ.வாக இருந்த திருமகன், உயிரிழந்ததைத் தொடர்ந்து, அத்தொகுதிக்கு எதிர்வரும் 27-ம் தேதி இடைத்தேர்தல் நடக்கவிருக்கிறது. இதையொட்டி, முக்கிய கட்சிகளின் நிர்வாகிகள் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருக்கின்றனர். தி.மு.க. கூட்டணி வேட்பாளர் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த இளங்கோவனுக்கு ஆதரவாக, தி.மு.க. மற்றும் அதன் கூட்டணிக் கட்சியினர் வாக்கு சேகரித்துவந்த நிலையில், நிறைவுநாளான இன்று முதல்வர் ஸ்டாலின் வாக்கு சேகரித்தார். அதேபோல, அதி.மு.க. வேட்பாளர் தென்னரசுவை ஆதரித்து, அக்கட்சியினரும், கூட்டணிக் கட்சியினரும் வாக்கு சேகரித்து வந்த நிலையில், நேற்றும் இன்றும் எடப்பாடி பழனிசாமி வாக்கு சேகரித்தார்.
இது ஒருபுறம் இருக்க, தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. தரப்பில் வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் வழங்குவது ஏராளமான புகார்கள் எழுந்தது. குறிப்பாக, ஈரோடு கிழக்குத் தொகுதி வாக்காளர்களுக்கு குக்கர், கொலுசு உள்ளிட்ட பல்வேறு பரிசுப் பொருட்களை வழங்கிய தி.மு.க.வினர், அப்பகுதி மக்களை பட்டியில் ஆடு, மாடுகளை அடைத்து வைப்பதுபோல அடைத்து வைத்து, பிரியாணி மற்றும் கறி விருந்து வைப்பதாகவும், தேர்தல் பிரசாரத்துக்கு வருபவர்களுக்கு நாளொன்றுக்கு 1,000 ரூபாய் வீதம் பேட்டை வழங்குவதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இதை வீடியோ எடுக்கச் சென்ற நியூஸ் தமிழ் 24 என்கிற தொலைக்காட்சியின் தலைமை நிருபர் மற்றும் ஒளிப்பதிவாளர் மீது தாக்குதல் நடத்தியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
ஆனால், தேர்தல் ஆணையம் கண்டுகொள்ளவே இல்லை. இதனால் தேர்தல் ஆணையத்தின் மீது எதிர்க்கட்சிகளும், பொதுமக்களும் கடும் ஆத்திரத்தில் இருந்து வருகின்றனர். இந்த சூழில்தான், ஈரோடு கிழக்குத் தொகுதியில் நேற்று இரவு பிரசாரம் செய்த சங்கராபுரம் தொகுதி எம்.எல்.ஏ. உதயசூரியன், பணம் வந்ததா என்று வாக்காளர்களிடம் வெளிப்படையாகவே கேட்கும் வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. அதாவது, சங்கராபுரம் தொகுதியின் எம்.எல்.ஏ.வாக இருக்கும் உதயசூரியன் தி.மு.க.வைச் சேர்ந்தவர். இவர், தி.மு.க. கூட்டணி வேட்பாளரான காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த இளங்கோவனுக்கு ஆதரவாக ஈரோடு கிழக்குத் தொகுதியில் நேற்று இரவு பிரசாரம் மேற்கொண்டார்.
அப்போது, மக்கள் அனைவருக்கும் வணக்கம். ரெண்டு நாளா நம்ம ஆளுங்க வந்து பார்த்தாங்களா, பாத்தாங்களா என்று உதயசூரியன் கேட்க, மக்களும் பார்த்தாங்க என்று கோரஸாக குரல் எழுப்புகிறார்கள். எனினும், சவுண்டு பத்தல என்று அடுத்த பக்கம் திரும்பி பாத்தாங்களா என்று கேட்கிறார். பாத்தாங்க என்று மக்கள் கூறியதும், மகிழ்ச்சியா இருக்கோமா என்று கேட்க, மகிழ்ச்சி என்று மீண்டும் கோரஸாக குரல் வருகிறது. அப்புறம் இன்னொன்னு ஓட்டு போட்டதுக்கு மறுநாள் பாக்குறதுக்கு குடுத்தாங்களா என்று கேட்க, ஆம் கொடுத்தாங்க என்று குரல் கொடுக்கிறார்கள். அதாவது, இதுவரை கொடுத்தது மட்டுமல்லாமல், ஓட்டுப்போட்ட பிறகு மீண்டும் கொடுப்பதற்கு டோக்கன் கொடுத்திருக்கிறார்கள் போல் தெரிகிறது.
இந்த வீடியோதான் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதைப் பார்த்த பலரும் தி.மு.க. அராஜகத்தை கண்டித்து வருவதோடு, நடவடிக்கை எடுக்காத தேர்தல் கமிஷனை கழுவிக் கழுவி ஊற்றி வருகின்றனர்.