நீங்க சொல்லுங்க… இல்ல நீங்க சொல்லுங்க… இளங்கோவனை கலாய்க்கும் நெட்டிசன்கள்!

நீங்க சொல்லுங்க… இல்ல நீங்க சொல்லுங்க… இளங்கோவனை கலாய்க்கும் நெட்டிசன்கள்!

Share it if you like it

கல்லூரி திரைப்படத்தில் மாணவர்கள் இருவர் நீங்க சொல்லுங்க, இல்ல நீங்க சொல்லுங்க என்று கூறும் காமெடி மிகவும் பிரபலமானது. அதேபோல, செய்தியாளர்கள் சந்திப்பில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் இளங்கோவன் பேசியதை, நெட்டிசன்கள் வைரலாக்கி வருகின்றனர்.

ஈரோடு கிழக்குத் தொகுதியின் எம்.எல்.ஏ.வாக இருந்த காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஈ.வெ.கே.எஸ்.இளங்கோவனின் மகன் திருமகன் ஈ.வெ.ரா., திடீர் மாரடைப்பு காரணமாக கடந்த மாதம் உயிரிழந்தார். இதையடுத்து, அத்தொகுதிக்கு பிப்ரவரி 27-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. மகன் திருமகன் உயிரிழந்து விட்ட நிலையில், அத்தொகுதியை மீண்டும் காங்கிரஸுக்கு கொடுத்து, அவரது தந்தையான ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனை வேட்பாளராக அறிவித்திருக்கிறது தி.மு.க. இந்த சூழலில், இளங்கோவன் தி.மு.க.வுக்கு எதிராக ஏற்கெனவே பேசிய வீடியோக்களை வைரலாக்கி வருகிறார்கள் நெட்டிசன்கள்.

அதாவது, தமிழக அரசியல் வரலாற்றில் அதிரடியாக அரசியல் கருத்துகளையும்,, விமர்சனங்களையும் முன்வைப்பதில் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனுக்கு தனி இடம் உண்டு. அந்த வகையில், முன்னாள் முதல்வர்கள் கருணாநிதி, ஜெயலலிதா ஆகியோர் மீது கடுமையான விமர்சனங்களை வைத்து சர்சைக்குள்ளாகி இருக்கிறார். அதேபோல், இலங்கைத் தமிழர் பிரச்னையில் விடுதலைப் புலிகளுக்கு எதிரான கருத்துகள், விமர்சனங்களை தெரிவித்து பரபரப்பு ஏற்படுத்தினார். உதாரணமாக, தி.மு.க.விற்கு எதிராக ஏராளமான கருத்துக்களை தெரிவித்த இளங்கோவன், 2 ஜி அலைக்கற்றை விவகாரத்தில் தி.மு.க. தங்களது கட்சியை மாட்டி விடுவதாக குற்றம்சாட்டி இருந்தார்.

அதேபோல, விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரனின் மகன் பாலச்சந்திரன் மறைவு குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்தார். இந்த வீடியோ பதிவுகள்தான் தற்போது சமூக வலைதளங்களில் அதிக அளவில் பகிரப்பட்டு வருகின்றன. குறிப்பாக, ஈரோடு மாவட்டத்தில் உள்ள சமூக வலைதள குழுக்களில் இப்பதிவுகள் வைரலாகி வருகிறது. எதிர்க்கட்சிகளான அ.தி.மு.க.வும், பா.ஜ.க.வும் இந்த வீடியோக்களை அதிகளவில் பகிர்ந்து வருகிறார்கள். இது தி.மு.க.வுக்கு மிகப்பெரிய தர்ம சங்கடத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

இது ஒருபுறம் இருக்க, ஈரோடு கிழக்கு தொகுதியின் வேட்பாளரான இளங்கோவன், செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த எம்.எல்.ஏ. செல்வப்பெருந்தகை உட்பட கட்சி நிர்வாகிகள் பலரும் உடனிருந்தனர். இந்த பேட்டியின்போது, செல்வப்பெருந்தகையிடம் நீங்க மொத்தல நாலு வார்த்தை பேசுங்க என்று இளங்கோவன் சொல்ல, பதிலுக்கு இல்ல இல்ல நீங்களே பேசுங்க என்று பதிலுக்கு சொல்கிறார். உடனே, அருகிலிருந்த மற்றொருவரிடம் நீங்க ஏதாவது பேசுங்க என்று இளங்கோவன் சொல்ல, பதிலுக்கு அவரும் இல்ல இல்ல நீங்க மொதல்ல பேசுனாத்தான் நல்லா இருக்கும் என்று சொல்ல, இப்படியாக 5 நிமிடங்கள் ஓடியது.

தற்போது இந்த வீடியோதான் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதைப் பார்த்துவிட்டு பலரும் கல்லூரி திரைப்படத்தில் இரு மாணவர்கள் நீங்க சொல்லுங்க, நீங்க சொல்லுங்க என்று சொல்லும் காட்சியுடன் ஒப்பிட்டு இளங்கோவனை கலாய்த்து வருகிறார்கள்.


Share it if you like it