லேசா தொட்டாலே விழுந்து விடும்… திராவிட மாடல் காம்பவுண்ட் சுவர்!

லேசா தொட்டாலே விழுந்து விடும்… திராவிட மாடல் காம்பவுண்ட் சுவர்!

Share it if you like it

ஈரோடு மாவட்டத்தில் அரசுப் பள்ளியில் கட்டப்பட்ட சுற்றுச் சுவர், தரமற்றதாக இருப்பதாகவும், எந்த நேரமும் இடிந்து விழும் அபாய நிலையில் இருப்பதாகவும், இதனால் மாணவர்களின் உயிருக்கு அச்சுறுத்தலாக இருப்பதாகவும் கூறி, பொதுமக்கள் இடித்துக்காட்டிய வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் ஊராட்சி ஒன்றியம் உக்கரம் ஊராட்சியில் அமைந்திருக்கிறது மில்மேடு. இங்கு கடந்த 4 வருடங்களுக்கு முன்பு அரசு உயர்நிலைப் பள்ளிக்கு புதிய கட்டடம் கட்டப்பட்டது. இப்பள்ளியில் மில்மேடு மட்டுமன்றி காளிகுளம், மல்லநாயக்கனூர், உக்கரம், மேட்டுக்கடை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து சுமார் 500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்த சூழலில், இப்பள்ளியைச் சுற்றி சுற்றுச் சுவர் கட்ட முடிவு செய்யப்பட்டது. இதற்காக, சத்தியமங்கலம் ஊராட்சி ஒன்றிய பொதுநிதியில் இருந்து 46 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

இதைத் தொடர்ந்து, கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு சுற்றுச் சுவர் கட்டப்பட்டது. இந்த சுற்றுச் சுவர்தான் தரமற்ற செங்கல், மணல், சிமென்ட் ஆகியவற்றைக் கொண்டு கட்டப்பட்டிருப்பதாக புகார் எழுந்தது. மேலும், தரமற்ற இந்த சுற்றுச் சுவரா எந்த நேரத்திலும் இடிந்து விழலாம் எனவும், இதனால் சுவர் அருகே விளையாடும் மாணவர்களின் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இதனிடையே, மேற்கண்ட சுற்றுச் சுவர் ஒரு சில இடங்களில் இடிந்து விழுந்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, ஊர் மக்களில் சிலர் சுற்றுச்சுவரை வெறும் கைகளாலேயே இடித்துத் தள்ளி காட்டினர்.

மேலும், தரமற்ற முறையில் சுற்றுச் சுவரை கட்டி மக்களின் வரிப்பணத்தை வீணாக்கிய கான்ட்ராக்ட்டர் மீது நடவடிக்கை எடுப்பதோடு, தரமான முறையில் மீண்டும் சுற்றுச் சுவர் கட்டித் தர வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர். தரமற்ற சுற்றுச்சுவரை பொதுமக்கள் இடித்துக் காட்டும் வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதைப் பார்த்து விட்டு, ஓகோ இதுதான் திராவிட மாடல் சுற்றுச்சுவரோ என்று நெட்டிசன்கள் கிண்டல் செய்து வருகின்றனர்.

ஏற்கெனவே தி.மு.க. ஆட்சியில் நடைபெற்ற மேம்பாட்டுப் பணிகள் கடும் விமர்சனத்து உள்ளானது. உதாரணமாக, சாலைகளின் நடுவே போஸ்ட் மரங்களோடு புதிய சாலை அமைத்திருப்பது, சாலையோரம் நிறுத்தப்பட்டிருக்கும் வாகனங்கள், குடிநீர் குழாய்கள் மீதே சாலைகள் போட்டிருப்பது, தண்ணீர் ஓடிக்கொண்டிருக்கும் கழிவுநீர் கால்வாயில் அப்படியே புதிதாக கான்கிரீட் போடுவது போன்ற புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலானது. இவற்றைப் பார்த்துவிட்டு திராவிட மாடல் சாலைகள் என்று நெட்டிசன்களும், பொதுமக்களும் கிண்டல் செய்து வந்தனர். தற்போது, சுற்றுச் சுவரும் கேலி, கிண்டலுக்கு ஆளாகி இருக்கிறது.


Share it if you like it