ஈரோடு வெ.ராமசாமி சிலைக்குக் கீழ் உள்ள கடவுள் மறுப்பு வாசகங்களை நீக்கக் கோரிய மனு மீது, தமிழக அரசு பதில் அளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.
பொதுவாக, தங்களது மாநிலத்தைச் சேர்ந்த சுதந்திரப் போராட்ட தியாகிகள் அல்லது முன்னாள் பிரதமர்கள், முதல்வர்கள் உள்ளிட்டோரின் சிலைகளை, அந்தந்த மாநில அரசுகள் அமைப்பது வழக்கம். ஆனால், தமிழத்தில் மட்டும் சுதந்திரப் போராட்ட தியாகிகள், மறைந்த முன்னாள் பிரதமர்கள், முதல்வர்கள் உள்ளிட்டோரின் சிலைகளோடு, ஈரோடு வெ.ராமசாமியின் சிலைகளும் அமைக்கப்பட்டிருக்கின்றன. குறிப்பாக, ஹிந்து கோயில்கள் அமைந்திருக்கும் இடங்களில் ராமசாமியின் சிலைகள் வைக்கப்பட்டிருக்கின்றன. அந்த வகையில், ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலுக்கு முன்பு ராமசாமி சிலை வைக்கப்பட்டிருக்கிறது.
இப்படி ராமசாமி சிலைகள் அமைக்கப்பட்டிருக்கும் பீடத்தில், கடவுள் மறுப்பு வாசகங்கள் இடம்பெற்றிருக்கின்றன. அதாவது, கடவுள் இல்லை, இல்லவே இல்லை. கடவுளை நம்புகிறவன் முட்டாள். கடவுளை கற்பித்தவன் மூடன் என்பன போன்ற வாசகங்கள் இடம்பெற்றிருக்கின்றன. ஹிந்து கோயில்களுக்கு முன்பாக இருக்கும் ராமசாமி சிலைகளில் இதுபோன்ற கடவுள் மறுப்பு வாசகங்கள் இடம்பெற்றிருப்பது ஹிந்துக்களின் மனதை புண்படுத்தும் வகையில் இருக்கிறது. ஆகவே, கோயில்களின் முன்பு இருக்கும் ராமசாமி சிலைகளை அகற்ற வேண்டும் என்று ஹிந்துக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இந்த சூழலில், ராமசாமி சிலைகளின் கீழ் பொறிக்கப்பட்டிருக்கும் கடவுள் மறுப்பு வாசகங்களை நீக்க வேண்டும் என்று கூறி, ஹிந்து அமைப்புகள் மற்றும் தனிநபர்கள் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்த நிலையில், ராமசாமி சிலைகளின் கீழ் பொறிக்கப்பட்டிருக்கும் கடவுள் மறுப்பு வாசகங்கள், ஹிந்துக்கள் மட்டுமல்லாது அனைத்துத் தரப்பையும் சேர்ந்த பெரும்பாலான மக்களின் உணர்வுகளை புண்படுத்துவதாகவும், இந்தியாவின் மதச்சார்பின்மை கொள்கைக்கு எதிராகவும் இருப்பதாகக் கூறி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ‘ஈரோடு வெ.ராமசாமியின் கடவுள் மறுப்பு வாசகங்கள், கடவுள் மீது நம்பிக்கை கொண்ட மக்களின் உணர்வை புண்படுத்துகிறது. அதோடு, கடவுள் மறுப்பு வாசகங்கள் அடங்கிய சிலையை பராமரிக்க அரசு பணம் செலவு செய்ய முடியுமா?’ என்று தெரிவித்தார். இதையடுத்து, மேற்கண்ட மனு மீது தமிழக அரசு பதிலளிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை ஒத்திவைத்தது. கடவுள் மறுப்பு வாசகங்களை நீக்க வேண்டும் என்று ஹிந்துக்கள் தரப்பில் விடுக்கப்பட்ட கோரிக்கை மனுவை உச்ச நீதிமன்றம் ஏற்றுக் கொண்டிருப்பது, ஹிந்துக்களுக்கு கிடைத்த வெற்றியாகவே கருதப்படுகிறது.