இந்திய விடுதலை இயக்கத்தின் முன்னோடியும் பஞ்சாப் சிங்கம் என்றழைக்கப்படுவருமான லாலா லஜபதி ராய் நினைவு தினம் இன்று (நவம்பர் 17).
காந்தியின் வருகைக்கு முன்பு இந்திய சுதந்திரத்துக்காக போராடியவர்களில் முக்கியமான மூன்று தலைவர்கள் லாலா லஜபதி ராய், பால கங்காதர திலகர் மற்றும் விபின் சந்திர பால். இம்மூவருக்கும் இணையான முக்கியத்துவம் இருந்ததைக் குறிக்கும் வகையில் அவர்கள் லால்-பால்-பால் என்றே குறிக்கப்பட்டனர். இவர்களில் ஒருவரான லாலா லஜபதி ராய் 1865 ஜனவரி 28 அன்று இன்றைய பாகிஸ்தானில் உள்ள பஞ்சாப் மாகாணத்தில் பிறந்தார்.
சட்டம் பயின்றவரான லஜபதி ராய் வழக்கறிஞராகவும் பத்திரிகையாளராகவும் பணியாற்றினார். இள வயதிலேயே இந்து மத வாழ்க்கைமுறை மீது பெரும் நாட்டமும் சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபாடும் கொண்டிருந்தார். சுவாமி தயானந்த சரஸ்வதியின் மதச் சீர்திருத்தக் கருத்துகளால் ஈர்க்கப்பட்டு ஆரிய சமாஜத்தில் உறுப்பினரானார். பிறகு இந்திய தேசிய காங்கிரஸில் இணைந்தார்.
பஞ்சாபில் நடைபெற்ற போராட்டத்தில் பங்கேற்றதற்காக பிரிட்டிஷ் அரசு அவரை பர்மாவுக்கு நாடு கடத்தியது. அரசுக்கு எதிராகச் செயல்பட்டதற்கான ஆதாரங்கள் இல்லாததால் தாய்நாடு திரும்ப அனுமதித்தது. 1920-ல் காங்கிரஸ் கட்சியின் தலைவரானார். 1928 அக்டோபர் 30 அன்று சைமன் கமிஷன் இந்தியாவுக்கு வருகை தந்தபோது எதிர்த்து அமைதி வழியில் போராட்டங்களை முன்னெடுத்தார். எனினும் பிரிட்டிஷ் அரசு கடுமையாகத் தாக்கியதை அடுத்து, சில தினங்களிலேயே காலமானார்.