கோயம்புத்தூர் பாராளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட, இடையார்பாளையம், கொங்கு நாடு கல்லூரி, அப்பநாயக்கன்பாளையம், பெரியநாயக்கன்பாளையம், கதிர்நாயக்கன்பாளையம் பகுதிகளில், தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில், பாஜகவின் தாமரை சின்னத்தில் வாக்குகள் சேகரித்தார் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை.
அக்கூட்டத்தில் அண்ணாமலை பேசியதாவது :
கடந்த 20 ஆண்டுகளாகப் பொலிவிழந்து இருக்கும் கோயம்புத்தூர் பாராளுமன்றத் தொகுதியை மீட்டெடுக்க, நீர் நிலைகளைச் சீரமைத்து தண்ணீர் பற்றாக்குறையை சரிசெய்ய, தொழிற்சாலைகள், விவசாயிகள், தண்ணீர் பிரச்சினைகளைத் தீர்க்க, கோவையின் சாலை வசதிக்கு, ரெயில் மற்றும் விமானப் போக்குவரத்துக்கு, மேம்பாலங்கள் போன்ற உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த, கோயம்புத்தூர் மக்கள், பாதுகாப்பாக, நிம்மதியாக வசிக்க வேண்டும் என்பதற்காக, நமது பாரதப் பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்களின் நேரடிப் பார்வையில் நமது கோவை என்றும் இருக்க, தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில், பாஜகவின் தாமரை சின்னத்தில் வாக்களிக்க வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்.
நொய்யல் நதியை மீட்டெடுக்க, நமது பிரதமர் திரு. மோடி அவர்கள், 970 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்தார். கோவை மக்கள் அன்பையும் ஆதரவையும் பெற்று, பாராளுமன்ற உறுப்பினராகப் பொறுப்பேற்றதும், அந்தப் பணிகள் முறையாக நடக்கிறதா என்பதனைக் கண்காணித்து, நொய்யல் நதியை மீட்டெடுப்போம். ஜூன் 4, வாக்கு எண்ணிக்கை முடிவடைந்த தினத்திலிருந்து நூறு நாட்களுக்குள், போதைப் பொருள் கடத்தல் தடுப்பு மையம் கோயம்புத்தூரில் அமைக்கப்படும். கல்லூரிகள் நிறைந்த கோவையில், நமது இளைஞர்கள், மாணவர்கள், குழந்தைகளுக்கு, நமது கண் முன்னால் பாதிப்பு ஏற்படுவதை அனுமதிக்க முடியாது. எனவே, போதையில்லா கோயம்புத்தூர் நகரை உருவாக்குவோம். தமிழகத்தில் அரசியல் மாற்றம் ஏற்பட முதல் படியாக, இந்தத் தேர்தல் அமையும். தாமரைக்கு விழும் ஒவ்வொரு வாக்கும், தமிழகத்துக்குத் திமுக வேண்டாம் என்பதைச் சொல்லும் வாக்குகள்.
கோயம்புத்தூருக்காக, கோயம்புத்தூர் பொதுமக்களுக்காக சேவை செய்ய வாய்ப்பினை உங்கள் வீட்டுப் பிள்ளை இந்த அண்ணாமலைக்கு வழங்குமாறும், தமிழகத்தின் அரசியல் மாற்றத்திற்காகவும், கோவையின் வளர்ச்சிக்காகவும் கோவை பாராளுமன்றத் தொகுதியின், வாக்குப் பதிவு எந்திரத்தில் முதலில் இருக்கும் நமது தாமரை சின்னத்தில், கட்சி வேறுபாடின்றி அனைவரும் வாக்களித்து, பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் அண்ணாமலையாகிய என்னை வெற்றி பெறச் செய்யுங்கள் என்றும் பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.