இசைஞானி இளையராஜாவின் ஜாதியை குறிப்பிட்டு திட்டிய ஈ.வி.கே.எஸ். இளங்கோவனுக்கு குவிந்து வரும் கண்டனங்கள்.
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய ஜவுளித்துறை இணையமைச்சராக இருந்தவர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன். இவர், தனக்கு பிடிக்காதவர்களையும், மாற்று கட்சியை சேர்ந்த தலைவர்களையும் ஒருமையில் பேசுவது அல்லது மிகவும் ஆபாசமான முறையில் பேசுவதை கொள்கையாக கொண்டவர். அ.தி.மு.க பொதுச் செயலாளர் மற்றும் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பற்றியும் பாரதப் பிரதமர் மோடி குறித்தும் மிகவும் அருவருக்கதக்க வார்த்தைகளால் இவர் விமர்சனம் செய்துள்ளார். இதுதவிர, இவரின் பேச்சுக்கள் தமிழக மக்களின் முகம் சுளிக்கும் வகையில் இன்று வரை இருந்து வருகிறது. மேலும், தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை பற்றி சமீபத்தில் இவர் பேசிய காணொளி அக்கட்சி தொண்டர்களிடையே கடும் கொதிப்பை ஏற்படுத்தி இருந்தது. இதையடுத்து, மதுரை மாவட்ட பா.ஜ.க தலைவரும் முன்னாள் எம்.எல்.ஏ.வுமான டாக்டர். சரவணன் மதுரை மண்ணில் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் கால் வைக்க முடியாது என காட்டமான முறையில் தனது கடும் எதிர்ப்பினை பதிவு செய்து இருந்தார்.
இந்த நிலையில், புளூ கிராஃப் டிஜிட்டல் பவுண்டேஷன் என்னும் நிறுவனம் “மோடியும் அம்பேத்கரும்: என்ற புத்தகத்தை சமீபத்தில் வெளியிட்டு இருந்தது. இப்புத்தகத்திற்கு, இசைஞானி இளையராஜா முன்னுரை எழுதியிந்தார். அதில், “அம்பேத்கரை தெரிந்துகொள்வதைப் போல, அவரது கருத்தை அமல்படுத்துபவர்களையும் நாம் ஊக்கப்படுத்த வேண்டும். பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசின் கீழ் நாட்டின் வளர்ச்சிப்பாதை, தொழில்துறை, சமூகநீதி, பெண்கள் முன்னேற்றம் போன்றவற்றில் அம்பேத்கரின் கருத்தும், சிந்தனையையும் இந்த புத்தகம் ஆய்வு செய்ய முயல்கிறது என்று தெரிவித்து இருந்தார். இசைஞானியின் கருத்தை பலர் வரவேற்று இருந்தனர்.
இதையடுத்து, பாரதப் பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழகத்தில் நற்பெயர் கிடைத்து விடக்கூடாது என தி.மு.க மற்றும் அதன் தோழமை கட்சிகளை சேர்ந்தவர்கள் இசைஞானியை மிக கடுமையாக சமூக வலைத்தளங்களில் விமர்சனம் செய்து இருந்தனர். அந்தவகையில், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் பொது கூட்டம் ஒன்றில் பேசும் பொழுது, தபேலா அடிப்பவனெல்லாம் இசைஞானி ஆகமுடியாது, பணமும், புகழும் வந்துவிட்டால் உயர்ந்த ஜாதி என்று நினைத்து கொள்வது என்ன நியாயம்? என விமர்சனம் செய்துள்ளார். உலகமே கொண்டாடும் இசைஞானியை ஜாதியை சொல்லி திட்டிய ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் மீது பி.சி.ஆர் பாயுமா என சமூக ஆர்வலர்கள் பலர் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
