சமீப காலமாக தமிழகத்தில் பல்வேறு துறைகளில் முறைகேடு நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. குறிப்பாக சேலம் பெரியார் பல்கலைக்கழகம், மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் மற்றும் அண்ணாமலை பல்கலைக்கழகங்களில் நடந்த ஆசிரியர் மற்றும் இதர பணியாளர்களின் பணி நியமனம், பதவி உயர்வுகளில் பல்வேறு முறைகேடுகள் நடந்ததாக உயர்கல்வித் துறைக்கு பல்வேறு புகார்கள் சென்றன. அதன் அடிப்படையில் சம்பந்தப்பட்ட பல்கலைக்கழகங்களில் விசாரணை நடத்தப்படும் என உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்திருந்தார். ஆனால் தற்போது வரை இந்த பிரச்சனைகள் தீர்ந்தபாடில்லை. ஆனால் திமுக நிகழ்ச்சி ஒன்றில் பேசும்போது நான் படித்த கல்லூரியில் ஒரு பெண் மட்டுமே இருந்தார் ஆனால் அமைச்சர் துரைமுருகன் கல்லூரியில் 32 பெண்கள் இருந்தனர் என்று பேசி சிரித்து கொண்டிருந்தனர். மக்களின் பிரச்சனைகளை தீர்ப்பதை பற்றி துளி கூட யோசிப்பதில்லை. இவர்களின் லட்சணம் என்னவென்று இதிலே தெரிகிறது.
இதுமட்டும் அல்லாமல் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் 450-க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. இந்த கல்லூரிகளில் பணியாற்றும் பேராசிரியர்களில் பலர் ஆதார் எண்ணை பயன்படுத்தி பல கல்லூரிகளில் பணியாற்றி வருவதாக தகவல்கள் வெளியானது. அதில் ஒரே பேராசிரியர் 32 கல்லூரிகளில் பணியாற்றுகிறார் என்ற செய்தி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திராவிட ஆட்சியில் பள்ளிகளின் நிலையும் பல்கலை கழகங்களின் நிலையும் பரிதாபகரமான நிலையில் தான் உள்ளது. இந்த நிலையில் அண்ணா பல்கலைக்கழகத்துக்கு உட்பட்ட கல்லூரிகளில் 300-க்கும் மேற்பட்ட போலி ஆசிரியர்கள் பணிபுரிகிறார்கள் என்ற அதிர்ச்சி தகவல் வெளியானதோடு மட்டுமன்றி, பேராசிரியர்கள் நியமனத்தில் நடந்த இக்குளறுபடியால் தமிழக மாணவர்களின் எதிர்காலமே கேள்விக்குறியாகியுள்ளது தமிழக பாஜக குற்றச்சாட்டை வைத்துள்ளது. இதுதொடர்பாக தமிழக பாஜக எக்ஸ் பதிவில்,
சரியான நிர்வாகத் திறனின்மை மற்றும் நிதிப் பற்றாக்குறையினால் முடங்கிய பெருமைமிகு தமிழக அரசுக் கல்லூரிகளின் நிலை மாபெரும் காயத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், அண்ணா பல்கலைக்கழகத்துக்கு உட்பட்ட கல்லூரிகளில் 300-க்கும் மேற்பட்ட போலி ஆசிரியர்கள் பணிபுரிகிறார்கள் என்ற அதிர்ச்சி தகவல் வெளியானதோடு மட்டுமன்றி, பேராசிரியர்கள் நியமனத்தில் நடந்த இக்குளறுபடியால் தமிழக மாணவர்களின் எதிர்காலமே கேள்விக்குறியாகியுள்ளது.
ஒரு காலத்தில் பல அறிஞர்களையும், மேதைகளையும், அறிவிற் சிறந்த சான்றோர்களையும் நமது நாட்டிற்கு பரிசளித்து, வரலாற்று சிறப்புமிக்க கல்விக் கூடங்களாக திகழ்ந்த தமிழகத்தின் பழம்பெரும் கல்லூரிகள், இன்று சரியான நிர்வாகமின்மையால் நொடிந்துள்ளது என்பது அனைவருக்குமே வருத்தத்திற்குரிய விஷயம்.
சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்ற திரு. பொன்முடி எம்எல்ஏ- வை உயர்கல்வித் துறையின் அமைச்சராகவும், எதைப்பற்றியும் கவலையில்லாத பொம்மையின் பிரதிபிம்பமாக விளங்கும் திரு.மு.க. ஸ்டாலின் அவர்களை தமிழக முதல்வராகவும் பெற்றது, தமிழக மாணவர்களின் சாபமன்றி வேறில்லை.
இவ்வாறு திறனற்ற தலைவர்களை நாம் தேர்ந்தெடுத்ததன் விளைவு, தமிழகத்தின் மதிப்பு பெற்ற பல்கலைக்கழகங்களான சென்னைப் பல்கலைகழகம், மதுரை காமராஜர் பல்கலைக்கழகம், திருச்சியிலுள்ள பாரதிதாசன் பல்கலைக்கழகம், சேலத்திலுள்ள பெரியார் பல்கலைக்கழகம் போன்ற சீர்மிகு கல்விக்கூடங்கள், அறிவாலய அரசின் நிர்வாகக் குறைபாட்டால் நிதிச்சுமையில் மூழ்கியுள்ளது.
மேலும், அங்கே ஓய்வுப் பெற்ற முன்னாள் ஊழியர்களுக்கு ஓய்வூதியம் வழங்க முடியாமலும், தற்போதைய பேராசிரியர்கள் மற்றும் ஊழியர்களுக்கு ஊதியம் வழங்க முடியாமலும் திணறும் அவலநிலை உருவாகியுள்ளது. பட்டமளிப்பு விழாக்கள் போன்றவைகளைக் கூட சரிவர நடத்த முடியாமல் முடங்கியுள்ளது.
நிதிப் பற்றாக்குறையால் புதிய ஆசிரியப் பணியிடங்கள் நிரப்பப்படாமல் காலியாகவே உள்ளன. ஆனால், இதையெல்லாம் கண்டும் காணாமல் கடந்து செல்லும் அறிவாலயம் அரசானது, அரசுக் கல்லூரிகளை மட்டுமே நம்பியுள்ள எளிய பின்புலமுள்ள தமிழகத்து மாணவர்களின் எதிர்காலத்தையே கேள்விக் குறியாக்கியுள்ளது என்பதுதான் கொடுமை. இவ்வாறு குறிப்பிட்டுள்ளது.