சேலத்திலிருந்து சிதம்பரம் சென்ற அரசு ஏசி பேருந்தில் போலி டிக்கெட்டுகளை விநியோகம் செய்ததாக அரசு பேருந்து கண்டக்டர், டிக்கெட் பரிசோதகரிடம் கையும் களவுமாக சிக்கிக் கொண்டார். சேலத்திலிருந்து சிதம்பரத்திற்கு அரசு ஏசி பேருந்து ஒன்று இன்று அதிகாலை 5.30 மணிக்கு புறப்பட்டு வந்து கொண்டிருந்தது. இந்த பேருந்து டவுன் பஸ்ஸை போல் ஒவ்வொரு ஸ்டாப்பிங்கிலும் நின்று நின்று சென்றது. பொதுவாக ஏசி பேருந்துகள், பாயிண்ட் டூ பாயிண்ட் பேருந்துகள், விரைவு பேருந்துகள் ஆகியன குறிப்பிட்ட ஊர்களில் மட்டுமே நின்று செல்லும்.
இதையடுத்து விருத்தாசலத்தை அடுத்த வடலூர் வந்த போது அங்கு போக்குவரத்து கழகத்தின் செக்கிங் இன்ஸ்பெக்டர்கள் நின்றிருந்தனர். அவர்கள் பேருந்தை நிறுத்தி ஏறினர். அப்போது கண்டக்டரிடம் இருந்த டிக்கெட்டுகளை சோதனை செய்தனர். அதில் சீரியல் எண்ணை வைத்து சோதித்த போது அவை போலி டிக்கெட்டுகள் என தெரியவந்தது.
இதையடுத்து சிதம்பரத்தில் உள்ள பெரியார் பஸ் டிப்போவில் உள்ள அதிகாரிகளுக்கு தகவல் அளிக்கப்பட்டு அந்த பேருந்தை டிக்கெட் பரிசோதகர்கள் கைப்பற்றினர். பேருந்தில் இருந்த பயணிகளை அவரவர் நிறுத்தங்களில் இறக்கிவிட்டுவிட்டு பின்னர் பேருந்தை காலியாகவே எடுத்துக் கொண்டு சென்றனர். அந்த போலி டிக்கெட்டுகளும் பறிமுதல் செய்யப்பட்டது. அது போல் அங்கிருந்த பயணியிடமும் பேருந்தை ஆங்காங்கே நிறுத்தி பயணிகளை ஏற்றியது, போலி டிக்கெட் விற்பனை செய்தது குறித்து சாட்சியாக எழுதி வாங்கிக் கொண்டனர்.