தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் இருந்து சென்னை விமானம் நிலையம் வந்த பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து அவர் ஹெலிகாப்டர் மூலம் கல்பாக்கம் சென்றார்.
பின்னர், கல்பாக்கம் அதிவேக ஈனுலை திட்டப் பணிகளை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கிவைத்தார். தொடர்ந்து, பாரதிய நபிகியாவித்யுத் நிகம் லிமிடெட் நிறுவனம் உருவாக்கியுள்ள 500 மெகாவாட் திறன் கொண்ட வேக ஈனுலையின் ‘கோர் லோடிங்’ பணியை பார்வையிட்டார். இதனைத்தொடர்ந்து நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் நடைபெற்ற பிரமாண்ட் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்றார்.
அப்போது பேசிய பிரதமர் மோடி, ஒவ்வொருமுறை சென்னை வரும்போது உற்சாகம் பிறக்கிறது. பாரம்பரியம் மற்றும் வணிகத்துக்கு மையப்புள்ளியாக சென்னை விளங்குகிறது. சென்னை நகரம் திறன் நிறைந்த இளைஞர்களால் நிரம்பியுள்ளது. இந்தியாவின் வளர்ச்சியில் சென்னைக்கு முக்கியப் பங்கு உள்ளது.
எனக்கும் தமிழ்நாட்டிற்கும் இடையிலான உறவு மிகவும் பழமையானது. தமிழகத்தில் பாஜகவுக்கு ஆதரவு அதிகரித்து வருகிறது. நான் தமிழகத்துக்கு வருவதால் சிலருக்கு அச்சம் ஏற்படுகிறது என தெரிவித்தார்.
தமிழ்நாடு மற்றும் சென்னையின் எதிர்காலத்துக்காக மத்திய அரசு உழைத்து வருகிறது. சென்னை மக்களின் தேவைகளை திமுக பூர்த்திசெய்யவில்லை. திமுகவுக்கு மக்கள் துயரங்களைப் பற்றி கவலையில்லை என பிரதமர் குறிப்பிட்டார்.
இந்தியாவின் வளர்ச்சியில் சென்னையின் பங்கு முக்கியமானது. சென்னை மெட்ரோ, சென்னை விமான நிலையம் உள்ளிட்ட மிகப்பெரிய திட்டங்களை பாஜக அரசு கொடுத்துள்ளது. தமிழகத்தை சிறப்பானதாக மாற்ற உறுதிப்பூண்டுள்ளோம்.
தமிழகம் மற்றும் சென்னை வளர்ச்சி திட்டங்களுக்கு கோடிக்கணக்கான ரூபாய் செலவிடப்படுகிறது. தமிழகத்தில் மத்திய அரசு மேற்கொண்டு வரும் பணிகளுக்கு திமுக அரசு இடையூறு செய்கிறது. மிக்ஜாம் புயலின்போது மக்களுக்கு உதவ வேண்டிய தமிழக அரசு, அதனை ஒரு பொருட்டாகவும் கருதவில்லை. மக்களின் சுக துக்கங்களில் மாநில அரசுக்கு அக்கறையில்லை.
நீங்கள் துன்பத்தில் இருந்தபோது அவர்கள் உங்களுக்கு எந்த உதவியும் செய்யவில்லை. சென்னை மக்களின் தேவைகளை திமுக அரசு கண்டுகொள்ளவில்லை. வெள்ள மேலாண்மையை செய்யாமல் ஊடக மேலாண்மையை செய்கின்றனர்
மத்தியில் உள்ள பா.ஜ.க அரசு உங்கள் வேதனையை புரிந்து கொள்கிறது. உங்களுக்காக பணியாற்றுகிறது. மத்திய பா.ஜ.க அரசு தமிழ்நாட்டின் வளர்ச்சியை மனதில் கொண்டுள்ளது. தி.மு.க அரசின் மனக்குறை என்னவென்றால் மத்திய அரசின் திட்டங்கள் நேரடியாக மக்களுக்கு செல்கிறது என்பதே.
திமுகவுக்கு குடும்பம்தான் முக்கியம்.ஆனால் பாகவுக்கு மக்கள் மீதே அக்கறை. நீங்கள் கொள்ளையடித்த பணம் வசூலிக்கப்பட்டு மீண்டும் தமிழக மக்களுக்கு திருப்பி தரப்படும். தமிழகத்தின் வளர்ச்சி திட்டங்களுக்கு அளிக்கப்படும் பணத்தை கொள்ளையடிக்க விடமாட்டேன். தமிழக மக்கள் ஏமாற்றப்படாமல் தடுப்பேன். மத்திய அரசின் திட்டங்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டுகிறது திமுக அரசு.