ராமநாதபுரம் மாவட்டம் அருகே கமுதி பெருமாள் தேவன் பட்டியை சேர்ந்த 35 வயதான காளி குமார் சரக்கு வாகன ஓட்டுனராக பணியாற்றி வந்த நிலையில் நேற்று 4 பேர் கொண்ட மர்ம கும்பலால் அவர் படுகொலை செய்யப்பட்டார்.
இந்த கொலையை கண்டித்து விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் பொதுமக்கள் சிலர் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது போராட்டத்தில் ஈடுபட முயன்றவர்களை பெண் டிஎஸ்பி காயத்ரி தடுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த போராட்டத்தில் ஈடுபட்ட ஒருவர் தகாத வார்த்தைகளால் டிஎஸ்பி காயத்ரியை பேசியுள்ளார். இதனை தொடர்ந்து வாக்குவாதம் முற்றி போராட்டக்காரர்களில் ஒருவர் டிஎஸ்பி காயத்ரியை முடியை பிடித்து இழுத்து ரகளை செய்துள்ளார். இதுதொடர்பான காணொளி தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கு அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் தனது கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர். விடியா திமுக ஆட்சியில் சட்டத்தின் மீது எந்தவித பயமும் இன்றி யாரை வேண்டுமானாலும் தாக்கலாம் என்ற அச்சமற்ற அவலநிலையில் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிப்பதாகவும், போராட்டம் என்னும் பெயரில் டிஎஸ்பி காயத்ரி அவர்களை தாக்கிய சம்பவத்தில் ஈடுபட்டோர் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுப்பதுடன், இனி சீருடையில் உள்ள காவல்துறையினர் மீது தாக்குதல் நடத்தும் தைரியம் யாருக்கும் வராத அளவிற்கு தண்டனை கிடைக்கப்பெறுவதை உறுதிசெய்யுமாறும், சமூக வலைத்தளங்களில் நெட்டிசன்கள் தங்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.இந்த சம்பவத்தில் ஈடுபட்ட ஒருவரை போலீசார் கைது செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.