உத்தரப்பிரதேச தலைநகர் லக்னோவில் விற்பனை பொருட்களுக்கு ஹலால் சான்றிதழ்களை வழங்கியதாக ஒரு நிறுவனம் மற்றும் மூன்று அமைப்புகளுக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. இந்த நிலையில் ஹலால் சான்றிதழ்களுடன் விற்பனை செய்யப்படும் தயாரிப்புகளுக்கு மாநிலம் முழுவதும் தடை விதிக்க உத்தரபிரதேச அரசு பரிசீலித்து வருவதாக தனியார் ஆங்கில நாளிதழுக்கு அம்மாநில அரசு செய்தித் தொடர்பாளர் தெரிவித்து உள்ளார்.
உத்தரப்பிரதேசத்தில் சில நிறுவனங்கள் ஒரு குறிப்பிட்ட சமூகத்தினரிடையே தங்கள் பொருட்களின் விற்பனையை அதிகரிக்க ஹலால் சான்றிதழ் அளித்து வருவதாகவும், இது பொதுமக்களின் நம்பிக்கையை சீர்குலைக்கும் செயல் என்றும் லக்னோவின் ஹஜ்ரத் கஞ்ச் காவல் நிலையத்தில் வெள்ளிக்கிழமை ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டது. ஹலால் இந்தியா பிரைவேட் லிமிடெட், சென்னை ஜாமியத் உலமா ஹிந்த் ஹலால் டிரஸ்ட், புது டெல்லி ஹலால் கவுன்சில் ஆஃப் இந்தியா, மும்பை ஜாமியத் உலமா ஆகியவற்றுக்கு எதிராக பதிவு செய்யப்பட்டுள்ளது.
சைவ பொருட்களான அழகு சாதன பொருட்கள், சோப்புகள், டூத் பேஸ்டுகள் போன்றவற்றுக்கும் கூட ஹலால் சான்றிதழ்கள் வழங்கப்படுகின்றன. இதுபோன்ற தயாரிப்புகளுக்கு ஹலால் சான்றிதழ் தேவையே இல்லை. இந்த நிறுவனங்கள் வழங்கிய ஹலால் சான்றிதழ்கள் இல்லாத தயாரிப்புகளைப் பயன்படுத்தக்கூடாது என ஒரு சமூகத்தினரிடையே விளம்பரப்படுத்தப்படுகிறது. இது மற்ற சமூகத்தினரின் வணிகங்களுக்கு இழப்பை ஏற்படும் செயலாகும். இது பொருளாதார லாபங்களுக்காக மட்டுமின்றி, சமூகங்களுக்கு இடையே பகைமையை உருவாக்கும் செயல். இது நாட்டை பலவீனப்படுத்தும் சதித்திட்டதின் ஒரு பகுதியாகும்.” என்று குறிப்பிட்டு உள்ளார்.
இது தொடர்பாக லக்னோ போலீஸ், மேற்கண்ட ஹலால் சான்றளிக்கும் நிறுவனங்கள் மீது, இந்திய தண்டனை சட்டம் 120-பி (குற்றவியல் சதி), 153-ஏ (வெவ்வேறு குழுக்களுக்கு இடையே பகையை ஊக்குவித்தல்), 298 (மத உணர்வுகளை புண்படுத்தும் நோக்கத்துடன் பேசுதல்), 384 (அச்சுறுத்தல்), 420 (ஏமாற்றுதல்), 467 (ஏமாற்றுதல்), 468 (ஏமாற்றுவதற்காக மோசடி செய்தல்), 471 (நல்லவர் போல் நடித்து ஏமாற்றுதல்), மற்றும் 505 (பொது அமைதியைக் குலைக்கும் கருத்துக்களை சொல்வது) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளது.