விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகில் உள்ள அச்சங்குளத்தைச் சேர்ந்த சகாதேவன் என்பவருக்குச் சொந்தமான பந்துவார்பட்டி கிராமத்தில் குரு ஸ்டார் எனும் பெயரில் பட்டாசு தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. இந்த பட்டாசு ஆலை, மாவட்ட வருவாய் அலுவலரின் உரிமம் பெற்று சிறிய ரக பட்டாசுகள் தயாரிக்கப்பட்டு வருகிறது. இந்த பட்டாசு ஆலையில் சுமார் 15-க்கும் மேற்பட்ட அறைகளில் 50க்கும் மேற்பட்டோர் பட்டாசு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், வழக்கம்போல் காலை பட்டாசு தயாரிக்க பயன்படுத்தப்படும் மூலப் பொருட்களை கலக்கும் பணியில் அச்சங்குளம் மற்றும் நடுச்சூரங்குடியைச் சேர்ந்த 4 பேர் ஈடுபட்டுள்ளனர். அப்போது மூலப் பொருட்களில் உராய்வு ஏற்பட்டு திடீரென வெடி விபத்து ஏற்பட்டது. இந்த வெடி விபத்தில் பட்டாசு ஆலையில் இருந்த 3 அறைகள் முற்றிலும் சேதமடைந்தன.
அந்த அறைகளில் பணியில் இருந்த அச்சங்குளத்தை சேர்ந்த ராஜ்குமார் (41) நடுச்சுவரங்குடியைச சேர்ந்த மாரிச்சாமி (40) மற்றும் சத்திரப்பட்டி கிராமத்தை சேர்ந்த மோகன் (30) மற்றும் செல்வகுமார் (35) ஆகிய 4 பேர் உயிரிழந்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சாத்தூர் மற்றும் ஏழாயிரம் பண்ணை தீயணைப்புத் துறை வீரர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். சாத்தூர் தாலுகா தாசில்தார் லோகநாதன் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு மேற்கொண்டு வருகின்றார்.
இந்நிலையில், சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் உடல்களை எடுத்துச் சென்ற ஆம்புலன்ஸ் வாகனங்களை உறவினர்கள் வழிமறித்து காவல் துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இந்த வெடி விபத்து குறித்து சாத்தூர் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.