சுற்றுலாப் பயணி ஒருவருக்கு கரடி ஒன்று ‘ஹைஃபை’ கொடுத்த காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதைப் பார்த்துவிட்டு ஹைஃபை கொடுக்க கரடிக்கு யார் சொல்லிக் கொடுத்தது என்று வியப்புடன் கமென்ட் செய்து வருகிறார்கள்.
பொதுவாகவே, வன விலங்குகள் மிகவும் ஆபத்தானவை. இதனால்தான், வனப் பகுதியில் விலங்குகள் நடமாட்டம் இருக்கும் ஏரியாக்களில் மனித நடமாட்டத்துக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. காரணம், விலங்குகளால் மனிதனுக்கு அசம்பாவிதங்கள் ஏதும் ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காகத்தான். ஆனால், காலப்போக்கில் சுற்றுலா என்கிற பெயரில் சில கட்டுப்பாடுகளை விதித்து மனித நடமாட்டத்துக்கு அனுமதிக்கப்பட்டிருக்கிறது. மேலும், வன விலங்குகளை பழக்கப்படுத்தி சாகச நிகழ்ச்சிகளையும் நடத்தி வருகிறார்கள். இன்னும் சிலரோ, வன விலங்குகளை வளர்ப்புப் பிராணிகளைப் போல வீட்டிலேயே வளர்க்கவும் தொடங்கி விட்டார்கள்.
இது ஒருபுறம் இருக்க, வன விலங்குகள் நடமாட்டம் இருக்கும் பகுதிகளில் மனிதர்கள் சுற்றுலாவுக்கு அனுமதிக்கப்பட்ட பிறகு, விலங்குகளின் குணாதிசங்களில் சில மாற்றங்களும் ஏற்பட்டிருக்கிறது. இதன் காரணமாக, மனிதர்களுககும் விலங்குகளுக்கும் இடையே சில நெகிழ்ச்சியான சம்பவங்கள் அவ்வப்போது அரங்கேறி வருகின்றன. அந்த வகையில், காரில் வரும் சுற்றுலாப் பயணி ஒருவருக்கு கரடி ஒன்று ஹைஃபை கொடுத்த சம்பவம் அரங்கேறி இருக்கிறது.
அதாவது, வனப் பகுதி ஒன்றில் சாலையில் கார்கள் வரிசையாக சென்று கொண்டிருக்க, கரடிக் கூட்டம் ஒன்று சாலையை கடப்பதற்கு முயற்சி செய்கிறது. இதைப் பார்த்த வாகன ஓட்டிகள் கார்களை ஆங்காங்கே நிறுத்தி விட்டு காத்திருக்கிறார்கள். அப்போது, காரில் இருந்த சுற்றுலாப் பயணி ஒருவர், கார் கண்ணாடியை திறந்துவிட்டு, அந்த கரடிக் கூட்டத்தைப் பார்த்து கையை வெளியே நீட்டி அழைக்கிறார். உடனே, அக்கூட்டத்தில் இருந்த ஒரு கரடி, அந்த சுற்றுலாப் பயணியிடம் சென்று ஹைஃபை கொடுக்கிறது. பிறகு, சற்று யோசித்துவிட்டு சென்றுவிட்டது.
இந்தக் காட்சியை எதிரில் வந்த காரில் இருந்தவர்கள் வீடியோவாக பதிவு செய்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டிருக்கிறார்கள். இதுதான் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதைப் பார்த்துவிட்டுத்தான் கரடிக்கு ஹைஃபை கொடுக்க சொல்லிக் கொடுத்தது யார் என்றும், வன விலங்குகளிடம் இவ்வாறு விளையாடுவது ஆபத்தானது என்றும் கமென்ட் செய்து வருகிறார்கள்.
https://www.instagram.com/reel/Ce0q1bJI2-v/