சத்தீஸ்கர் தேர்தலில் களம் காண்பதற்காக பாஜகவில் இணைந்த முன்னாள் சிஆர்பிஎப் வீரர் ராம் குமார் தோப்போ, சீதாபூர் தொகுதியில் காங்கிரஸின் முக்கிய அமைச்சரை தோற்கடித்துள்ளார்.
சத்தீஸ்கர் மாநிலத்தின் சீதாபூர் தொகுதி கடந்த 20 வருடங்களாக காங்கிரஸ் வசம் இருந்தது. இங்கு கடந்த 2018-ல் காங்கிரஸ் சார்பில் வெற்றி பெற்ற அமர்ஜித் பகத் (55), உணவு மற்றும் கலாச்சாரத் துறை அமைச்சராக இருந்தார். இவர் அம்மாநிலத்தின் செல்வாக்கான அமைச்சராக கருதப்படுகிறார்.
இந்த சட்டப்பேரவைத் தேர்தலில் இவர் சீதாபூரில் மீண்டும் போட்டியிட்டார். இவருக்கு எதிராக பாஜகவில் புதிதாக இணைந்த ராம் குமார் தோப்போவுக்கு(31) கட்சி வாய்ப்பளித்தது. இதில், யாரும் எதிர்பாராத வகையில் அமைச்சர் அமர்ஜித்தை 17,160 வாக்குகள் வித்தியாசத்தில் ராம் குமார் தோற்கடித்துள்ளார்.
சிஆர்பிஎப் வீரராகப் பணியாற்றிய ராம் குமார், கடந்த 2018-ல் காஷ்மீரில் 3 தீவிரவாதிகள் கொல்லப்பட்டதில் முக்கியப் பங்காற்றியவர். இவருக்கு 2021-ல் குடியரசுத் தலைவரின் விருதும் கிடைத்தது. தேர்தலுக்காக பாஜகவில் இணைந்து களம் இறங்கிய இவருக்கு முதல் போட்டியே சாதனையாக அமைந்துள்ளது.